Published:Updated:

`கருணாநிதியின் மரியாதையை தி.மு.க இழந்து நிற்கிறது!’ - பொன்.ராதாகிருஷ்ணன்`

`கருணாநிதியின் மரியாதையை தி.மு.க இழந்து நிற்கிறது!’ - பொன்.ராதாகிருஷ்ணன்`
`கருணாநிதியின் மரியாதையை தி.மு.க இழந்து நிற்கிறது!’ - பொன்.ராதாகிருஷ்ணன்`

‘கருணாநிதியின் மரியாதையை தி.மு.க இழந்து நிற்கிறது. தமிழகத்தைப் பாலைவனமாக்கும் சூரியன் மக்களுக்குத் தேவையில்லை’ என்று மு.க.ஸ்டாலினை பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடினார்.

பா.ஜ.க எஸ்.சி அணி மாநில செயற்குழுக் கூட்டம், வேலூரில் இன்று நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். செயற்குழுவில், ‘‘பட்டியல் சமூக முன்னேற்றத்திற்காக மத்திய அரசு சிறப்பு உட்கூறு திட்டத்தில் பல்லாயிரம் கோடி ரூபாயைத் தமிழக அரசுக்குக் கொடுக்கிறது. ஆனால், மாநில அரசு அத்தொகையை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. இதனைத் தடுக்க கர்நாடகாவில் செயல்படுவதைப் போல் தனிச்சட்டத்தை இங்கு இயற்ற வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்கக் கடுமையான தண்டனைப் பிரிவுகளை உள்ளடக்கிய தனிச்சட்டம் வேண்டும். பட்டியல் சமூக இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றத் தமிழக அரசு தனி திட்டங்கள், கொள்கை வரைவுகளைத் தயாரிக்க வேண்டும்’’ என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் போடப்பட்டன.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி தன்னுடைய செயல்பாடுகளாலும், மூத்த தலைவர் என்பதாலும் எல்லாக் கட்சிகளின் மரியாதையைப் பெற்றவர். அவரின் மரியாதையை இன்றைக்கு தி.மு.க இழந்து நிற்கிறது. தமிழகத்திற்குச் சூரியன் தேவை. ஆனால், தமிழகத்தைப் பாலைவனமாக்கும் சூரியன் தேவையில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். தமிழகத்திற்குக் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மத்திய அரசு சாலை போக்குவரத்திற்காக ஒரு லட்சம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. 

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை கணக்கிடக் கூடாது. தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படப் போகிறது. மத்திய அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களைத் தடுக்கிறார்கள் இங்குள்ளவர்கள். ஆனால், எங்களுக்கு ஒரு திட்டத்தை கொடுங்கள் என்று அ.தி.மு.க, தி.மு.க இதுவரை ஏன் கேட்கவில்லை?. இவர்களுடைய நோக்கம் தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதில்லை’’ என்றார்.