Published:Updated:

15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி! - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்

15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி!  - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்
15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி! - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்

15 வயதில் அரசியல்; 29 வயதில் எம்.பி! - இந்தியாவில் மீதமுள்ள ஒரே பெண் முதல்வர்

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்கள். இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.கவின் உயிர் நாடியாக இருந்த மத்திய பிரதேசத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின் காங்கிரஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. தெலங்கானாவில் கருத்துக் கணிப்புகளையும் தாண்டி சந்திரசேகர ராவ் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றார். 

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து வேறொரு பெரும் மாற்றமும் நிகழ்ந்துள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்னர், தமிழகத்தில் ஜெயலலிதா, ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முஃப்தி, குஜராத்தில் ஆனந்தி பென் படேல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே என 5 பெண் முதல்வர்கள் நாட்டில் இருந்தனர். ஆனால் தற்போது இவர்களில் ஒரே ஒரு பெண் முதல்வர் மட்டுமே உள்ளார்.  இவர்களில் 2016-ம் ஆண்டு ஜெயலலிதா உடநலக்குறைவால் உயிரிழந்தார்,  2016 ஆகஸ்டு மாதம் ஆனந்தி பென் படேல் தன் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார், 2018 ஜூன் மாதம் ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முஃப்தி ஆட்சி கலைக்கப்பட்டது, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ராஜஸ்தானில் பா.ஜ.க தோல்வியடைந்ததால் வசுந்தரா ராஜே பதவியிழந்தார். இதனால் மொத்த இந்தியாவிலும் தற்போது மம்தா பானர்ஜி மட்டுமே பெண் முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார். 

தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதா பற்றி நம்மில் பலருக்கும் பல விசயங்கள் தெரியும். ஆனால் மிகச் சிறிய வயதில் அரசியலில் நுழைந்து தற்போது மேற்கு வங்கத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரே பெண் குரல் மம்தாவை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். 

1955 ஆம் ஆண்டு கொல்கத்தாவின், அஸ்ரா பகுதியில் பிறந்த மம்தா பானர்ஜி அதே மாநிலத்தில் சிறந்து விளங்கிய ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், நேதாஜி உள்ளிட்டவர்களைப் படித்தே வளர்ந்தார். தன் 15-வது வயதில், அதாவது 1970-ம் ஆண்டு தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.  இதையடுத்து அவ்வப்போது பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டார்.  தன் சிறு வயதில் இருந்தே வறுமையால் மிகவும் கஷ்டப்பட்டு படித்தார். இறுதியாக இளங்கலை வரலாறு முடித்தார். அதன் பிறகு ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். படிப்பு மட்டுமல்லாது பேச்சு திறன், கவிதை, ஓவியம் வரைதலிலும் மம்தா சிறந்து விளங்கினார்.

இதனையடுத்து உள்ளூர் காங்கிரஸில் படிப்படியாக முன்னேறி 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தார். பின்னர் 1984-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்திய அரசியலில் மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றத்தில் நுழைந்தவர் என்ற பெருமை இவரையே சாரும்.  நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் மீது எதிர்ப்பு அலைகள் வீச, அது மம்தவையும் விட்டு வைக்காமல்  1989-ம் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார். எளிமையிலும் எளிமை, போராட்ட குணம், எப்போதும் மக்களுடன் இருப்பது போன்றவை இவரின் இயல்பு. அது அடுத்து வந்த 1991-ம் ஆண்டு தேர்தலுக்கு மம்தாவுக்கு பேருதவி செய்தது. அதிலிருந்து தொடர்ந்து வெற்றி பெற்று தற்போது வரை கொல்கத்தா தெற்கு தொகுதியின் நிரந்தர சட்டமன்ற பிரதிநிதியாக உள்ளார் மம்தா. 

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பூசலின் காரணமாக 1997-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் . 1998-ம் ஆண்டு அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று அம்மாநில மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு நேரடி எதிர்க்கட்சியாக உருவெடுத்தார்.ர் மேலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு மாற்றாக இவரின் திரிணாமுல் காங்கிரஸ் விளங்கியது. அதன் பிறகு பல கூட்டணிகளுடன் இணைந்து இரண்டு முறை ரயில்வேத் துறை அமைச்சராகவும் ஒரு முறை மின்சாரத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.  அந்த வேளையில் மேற்கு வங்கத்தில் நடந்து வந்த மார்க்சிஸ்ட் ஆட்சியில் பல்வேறு வன்முறைகள் நிகழ்ந்தன. மக்கள் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்து வந்தனர். இதன் நடுவில்தான் 2011 சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை மிகசரியாக பயன்படுத்தி மம்தாவும் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.  அதுவரை மார்க்சிஸ்ட் கட்சியின் மிகப்பெரும் கூடாரமாக விளங்கிய மேற்கு வங்கத்தில் அதைத் தகர்த்தெறிந்து முதல் முறையாக ஒரு பெண்ணாக உள்ளே உழைத்தார் மம்தா பானர்ஜி.  தற்போது மேற்கு வங்கத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.  

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க கட்சி தொடர்ந்து வெற்றிபெற்றது. ஆனால் மேற்கு வங்கத்தில் தற்போது வரை பா.ஜ.கவால் காலூன்ற முடியவில்லை. தமிழகத்தில் எப்படி ஜெயலலிதா தவிர்க்கமுடியாத ஆளுமையோ அதேபோல் தற்போது மேற்கு வங்கத்தில் மம்தா திகழ்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பா.,ஜ.வை எதிர்க்கொள்ள எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். வரும் ஜனவரியில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றாகத் திரட்டி பாஜக ஆட்சிக்கு எதிராக மிகப்பெரும் போராட்டத்தை நடத்த அனைத்து வகையிலும் முயற்சி செய்து வருகிறார். 

மிகவும் சிறு வயதில் அரசியலைத் தொடங்கிய இவர் தன் வாழ்வில் பல போராட்டங்களையும், அவமானங்களையும் சந்தித்துள்ளார். வெள்ளை காட்டன் புடவையும் வெள்ளை நிற ரப்பர் செருப்பும்தான் இவரின் அடையாளங்கள். தன் அரசியல் வாழ்வில் தன்னை எதிர்ப்பவர் எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து நின்று போராடியர் மம்தா. ’ நான் மிகவும் அடிமட்டத்தில் இருந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். நான் பிறவியிலேயே போராட்ட குணம் கொண்டவள்’ என அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எளிமையான ஒரு பெண்ணான மம்தா, தற்போதுள்ள பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்றார் அதில் மிகையில்லை. 

அடுத்த கட்டுரைக்கு