Published:Updated:

கோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள் - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்

கோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள்  - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்
கோடீஸ்வரர்கள்... படிப்பாளிகள் - புதுப்பொலிவுடன் தெலங்கானா சட்டமன்றம்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில்,  கருத்துக்கணிப்புகளையும் தாண்டி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மாபெரும் வெற்றிபெற்றது. அங்கு, மொத்தமுள்ள 119  இடங்களில் டி.ஆர்.எஸ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும் பா.ஜ.க ஒரு இடத்திலும் மற்ற கட்சிகள் 10 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

தெலங்கானாவில் வெற்றிபெற்ற மொத்த எம்.எல்.ஏ-க்களில் நான்கில் மூன்று பகுதி எம்.எல்.ஏ-க்கள் பட்டப்படிப்பு மற்றும் அதையும் தாண்டி படித்தவர்கள் என அவர்கள் தாக்கல்செய்த தேர்தல் பிரமாணப் பத்திரிக்கையின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அங்குள்ள 119 எம்.எல்.ஏ-க்களில் 43 பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள், 26 பேர் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், 2 பேர் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர்கள், 27 பேர் டிப்ளோமா பயின்றவர்கள். மேலும், அவர்களில் 11 வழக்கறிஞர்கள், 9 என்ஜினீயர்கள், 5 மருத்துவர்கள் உள்ளனர். இவர்களில் பலர் இந்தியாவில் உள்ள மிகப்பெரும் பெயர்பெற்ற கல்லூரிகளில் பயின்றுள்ளனர். 

முன்னதாக கேரளா, குஜராத், கோவா போன்ற மாநிலங்களில்தான் அதிகம் படித்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது, அந்த வரிசையில் தெலங்கானாவும் இடம்பிடித்துள்ளது. கர்நாடகா 61 சதவிகிதமும், ஆந்திரா 68 சதவிகிதமும், ஒடிசா 65 சதவிகிதமும், பஞ்சாப் 60 சதவிகிதமும் படித்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 

தெலங்கானாவில் உள்ள மொத்த சட்டமன்ற இடங்கள்

இது மட்டுமில்லாமல், தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 எம்.எல்.ஏ-க்களில் 73 பேர்மீது கிரிமினல் வழக்கு உள்ளது என்பதும் அவர்களில் 47 பேர்மீது கடுமையான கிரிமினல் வழக்கு உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.  50 எம்.எல்.ஏ-க்கள் டி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 14 பேர் காங்கிரஸ் மற்றும் 9 பேர் பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வழக்குகள் போன்றவை பதிவாகியுள்ளன. மேலும், அங்குள்ளவர்களில் 106 எம்.எல்.ஏ-க்கள் கோடீஸ்வரர்கள் என்றும், அவர்களில் 83 பேர் டி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் 14 பேர் காங்கிரஸ் கட்சியினர் எனவும் கூறப்பட்டுள்ளது.