`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது!'  - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி | Edappadi palanisamy talks about the current scenario in ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (17/12/2018)

கடைசி தொடர்பு:13:53 (17/12/2018)

`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது!'  - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி

"நான் என்னுடைய பாதையில் செல்கிறேன். இந்தப் பாதைக்குள் வருகிறவர்கள் வரட்டும். இதில், தினகரனையும் சேர்த்து அழைத்து வருகிறோம் என்றெல்லாம் பேசக்கூடாது" என்றார் எடப்பாடி பழனிசாமி.

`அம்மா சென்டிமென்ட் எல்லாம் முடிந்துவிட்டது!'  - எம்.எல்.ஏ-க்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி

தி.மு.க-வில் செந்தில் பாலாஜி ஐக்கியமானதில் இருந்தே, `அடுத்த விக்கெட் யார்?' என்ற கேள்வி அ.ம.மு.க வட்டாரத்தில் எழுந்துள்ளது. "நம்மோடு பேசும் தகுதிநீக்க எம்.எல்.ஏக்களில் சிலர், தினகரனையும் சேர்த்து அழைத்து வரட்டுமா என்றெல்லாம் கேட்கிறார்கள்!" எனக் கிண்டலடித்துப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

எடப்பாடி பழனிசாமி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரது சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், `ராகுல்காந்தியே வருக. நாட்டுக்கு நல்லாட்சி தருக' என அவர் பிரதமர் வேட்பாளர் எனக் குறிப்பிட்டுப் பேசினார் ஸ்டாலின். இதுகுறித்து நேற்று கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க கூட்டணி அமைந்துவிட்டதாக நான் கருதவில்லை. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது அவர்கள் விருப்பம். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எங்கள் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்" என்றார். அதேநேரம், கொங்கு வட்டாரத்தில் செல்வாக்கு பெற்றவராகக் கருதப்படும் செந்தில் பாலாஜி தி.மு.கவில் ஐக்கியமானதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அ.தி.மு.கவினர். இதன் தொடர்ச்சியதாக மேலும் சிலர் தி.மு.கவுக்குச் சென்றுவிடக் கூடாது என்ற நோக்கில் பேட்டியளித்த முதல்வரும், "தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய்க் கழகமான அதிமுகவுக்கு மீண்டும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்ள அ.தி.மு.க தயாராக உள்ளது. அ.ம.மு.க.வில் இருந்து ஒரு சிலர் விலகி வேறு கட்சிக்குச் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது அவர்களது விருப்பம். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்க்கழகத்துக்குத் திரும்பினால் வரவேற்போம்" என்றார். 

செந்தில் பாலாஜி

அ.ம.மு.க-வில் இருந்து சிலரைப் பிரித்துக் கொண்டு வரும் வேலைகளையும் அமைச்சர்கள் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``தி.மு.க-வுக்குச் செந்தில் பாலாஜி சென்றதில் எங்களுக்கு எந்தவித நட்டமும் இல்லை. கொங்கு மண்டலத்தில் இரட்டை இலையை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதேநேரம், எங்களிடம் இருந்து பிரிந்து அ.ம.மு.க-வுக்குச் சென்றவர்களை வரவேற்பதற்கும் நாங்கள் தயங்கவில்லை. தினகரன் கட்சியைச் சேர்ந்த முக்கியமான நிர்வாகிகள் சிலர் விரைவில் முதல்வரைச் சந்தித்துப் பேச உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில் பல சுவாரஸ்யமான விஷயங்களும் நடந்தன. இதைப் பற்றி நேற்று எம்.எல்.ஏக்கள் சிலரிடம் கிண்டலடித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

தினகரன்

அவர் பேசும்போது, 'அங்கிருக்கும் ஒரு சில எம்.எல்.ஏ-க்களும் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களில் சிலரும் நம்மிடம் வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். அவர்களை இத்தனை நாள்களாக எப்படியெல்லாம் தினகரன் முட்டாளாக்கியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. நம்மிடம் பேசுகிறவர்கள், 'தினகரனையும் எங்களோடு கூட்டிக் கொண்டு வரட்டுமா?' என்கிறார்கள். `கட்சி நடத்த முடியவில்லை; தினகரனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்பது போலப் பேசுகின்றனர். அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு நம்மால் எப்படி அரசியல் செய்ய முடியும். அவரையும் சசிகலாவையும் இங்கிருந்து அனுப்புவதற்குள் படாதபாடுபட்டோம். கொஞ்ச நாளில் தினகரனைத் தவிர அனைவரும் நம்மிடம் வந்துவிடுவார்கள். அங்கிருக்கும் பலருக்கு அ.தி.மு.க மீதான பாசம் விடவில்லை. தினகரனைச் சேர்த்துக் கொள்வது என்பது கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துக் கொள்வது போல' என்றவர், 

தினகரன்

தொடர்ந்து பேசும்போது, `தேர்தல் வந்தால் எனக்கு எதிரான ஓட்டுக்களைத்தான் தினகரன் பிரிப்பார். இந்த 20 மாதத்தில் ஸ்டாலினுக்கு எதிராகப் பேசியதைவிட, எனக்கு எதிராகத்தான் அவர் நிறைய பேசியிருக்கிறார். அவருக்கு வரக் கூடிய வாக்குகள் அனைத்தும் எனக்கு எதிரானவை. அவரைச் சேர்த்துக் கொள்வதால் நமக்கு எந்தவித லாபமுமில்லை. ஸ்டாலினுக்கு போகக் கூடிய இந்த ஓட்டுக்களை தினகரன் பிரிப்பது இரட்டை இலைக்கு லாபம்தான். என்றைக்கு அவர்கள் அனைவரும், `அம்மா டம்மி. சின்னம்மா தான் எல்லாம்' எனப் பேசினார்களோ, அப்போதே அம்மா சென்டிமெண்ட் என்பது முடிந்துவிட்டது. இப்போது இருப்பது கட்சி சென்டிமெண்ட் மட்டும்தான்.

எடப்பாடி பழனிசாமி

இந்தக் கட்சிக்குத் தலைவர்களாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருக்கிறார்கள். சசிகலா தான் தலைவர் எனச் சொல்லிக் கொண்டு அவர் அரசியல் செய்து கொள்ளட்டும். கட்சி அதிகாரத்துக்குள் சசிகலா வந்தபோது, என்னவெல்லாம் ஆட்டம் ஆடினார்கள். நடராசனை முன்வைத்து என்னவெல்லாம் பேசினார்கள் என்பதை யாரும் மறக்கவில்லை. நான் என்னுடைய பாதையில் செல்கிறேன். இந்தப் பாதைக்குள் வருகிறவர்கள் வரட்டும். இதில், தினகரனையும் சேர்த்து அழைத்து வருகிறோம் என்றெல்லாம் பேசக்கூடாது' என்றார். அவரது கருத்தை கட்சி நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டனர்" என்றார் விரிவாக.