Published:Updated:

`ஆஸ்திரேலியாவில் தொழிலதிபர்; இந்தியாவில் எம்.எல்.ஏ' - ராஜஸ்தான் ஊடகங்களை ஆக்கிரமித்த இளம் அரசியல் நட்சத்திரம்!

`ஆஸ்திரேலியாவில் தொழிலதிபர்; இந்தியாவில் எம்.எல்.ஏ' - ராஜஸ்தான் ஊடகங்களை ஆக்கிரமித்த இளம் அரசியல் நட்சத்திரம்!
`ஆஸ்திரேலியாவில் தொழிலதிபர்; இந்தியாவில் எம்.எல்.ஏ' - ராஜஸ்தான் ஊடகங்களை ஆக்கிரமித்த இளம் அரசியல் நட்சத்திரம்!

சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றியைச் சுவைத்துள்ளது. இதையடுத்து நடந்த புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பதவியேற்றுள்ளனர். முதல்வர் ரேஸில் இருவருக்கும் இடையே போட்டி நிலவிய நிலையில், அசோக் கெலாட் முந்தியுள்ளார்.

இதற்கிடையே, ராஜஸ்தான் தேர்தலில் சத்தமில்லாமல் சாதித்துள்ளார் ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவர். அவர் பெயர் வாஜிப் அலி. ராஜஸ்தானின் நகர் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர்தான் இந்த வாஜிப் அலி. பள்ளிப் படிப்பை ராஜஸ்தானிலேயே முடித்தவர். கடந்த 2005 -ம் ஆண்டு, மேல் படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்காகப் புலம்பெயர்ந்தார். படிப்பை முடித்தும் தனது குடும்பத் தொழிலில் இணைந்தார். ஆஸ்திரேலியாவில் இவர்களது குடும்பம், எட்டு கல்லூரிகளையும் ஒரு சில பள்ளிகளையும் நடத்திவருகிறது. ஆஸ்திரேலியாவில் தொழிலதிபராக இருந்தாலும் அங்கு அவரால் இருக்கமுடியவில்லை. 

அதற்குக் காரணம் கூறும் அவர், ``நான் பிறந்து வளர்ந்த நகர் பகுதி கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய பகுதி. தான் படித்து வளர்ந்த இந்தப் பகுதியை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, ஆஸ்திரேலியாவில் தங்குவதைத் தவிர்த்தேன்" என்றார். அதன்படி, கடந்த 2013 -ம் ஆண்டு ராஜஸ்தான் திரும்பிய அவர், அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, மக்களுக்குச் சேவைசெய்ய ஆரம்பித்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு, தோல்வி கிடைத்தது. இருந்தும், தொடர்ந்து அரசியல் பணியாற்றினார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட, அவருக்கு இந்த முறை வெற்றி கிடைத்தது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரை சுமார் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தற்போதைய நிலையில், ராஜஸ்தானில் உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் வயது குறைவானவர்களில் இவரும் ஒருவர்.

வெற்றியை அடுத்து, தனது அரசியல் பயணம்குறித்து வாஜிப் அலி பேசியுள்ளார். அதில். ``நான் ராஜஸ்தான் திரும்பியபோது எனது கிராமத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. சுகாதாரம், கல்வி அனைத்திலும் எங்கள் பகுதி பின்தங்கியே இருந்தது. இது எனது மனதைப் புண்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் லாபகரமான தொழிலை நடத்திவரும் நாம், இந்தச் சமூகத்துக்கு என்ன செய்தோம் என மனதில் கேள்வி எழுந்தது. இந்தச் சமூகத்துக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திக்கத் தொடங்கினேன். மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினேன். மாற்றம் ஏற்படுத்துவதற்கான ஒரே வழியாக எனக்குத் தெரிந்தது அரசியல். அதன்படி, அரசியலில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு தேர்தலில் நின்றேன். தற்போது, எனக்கு தேர்தல் வெற்றிமூலம் ஒரு வலிமை கிடைத்துள்ளது. இனி என்னால் சட்டசபை செல்லமுடியும். அங்கு எனது பகுதியின் பிரச்னைகளைத் தைரியமாக எடுத்துவைக்க முடியும்" என்று கூறும் இவரிடம், பிரசாரத்தின்போது அதிகம் கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா? 

`ஏன் உங்கள் சொந்தக் கல்லூரி, பள்ளிகளை இங்கு தொடங்கக் கூடாது...' என நிறையப் பேர் என்னிடம் கேட்டார்கள். என்னைப் பொறுத்தவரை இது நிரந்தரத் தீர்வாக இருக்காது என்பதுதான். தனியார் கல்வி எப்போதும் தீர்வாகாது. அரசாங்கத்தின்மூலம் வழங்கப்படும் கல்வியாலே அனைவரும் பலனடைய முடியும். இதை உறுதியாக நான் நம்புகிறேன். கல்விதான் எனக்கு நிறைய வெற்றிகளைக் கொடுத்தது. அதனால்தான், என் மாநிலத்தில் அரசுக் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்த விரும்புகிறேன். நிச்சயம் அதற்காக சட்டசபையில் குரல்கொடுப்பேன். அதேநேரம், இந்தப் பகுதியில் சுகாதாரத்துக்கான போதுமான வசதிகள் இல்லை. இந்த இரண்டையும் முதல் பிரச்னையாகக் கருதி நடவடிக்கை எடுக்க முயல்வேன்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார், இந்த 36 வயதுக்காரர். 

முன்னதாக விவசாயம், கல்வி உள்ளிட்டவற்றில் மேம்பாடு அடைவதற்காக, அந்தப் பகுதியில் உள்ள சில நிறுவங்களுடன் ஆஸ்திரேலிய நிறுவனங்களை கைகோக்கவைத்துள்ளார். அவரின் சகோதரர் ஆஸ்திரேலியாவில் கவுன்சிலராக இருப்பதால், அவரின் உதவியோடு இந்தப் பகுதிகளை மேம்படுத்த முயன்றுவருகிறார். அதற்கு அந்தப் பகுதி மக்கள் வெகுவாக ஆதரவளித்துவருகின்றனர். இதனால், நகர் பகுதியிலும் ராஜஸ்தான் அரசியலிலும் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் வாஜிப் அலி. இவரைப் பற்றிய செய்திகள்தான் கடந்த இரண்டு மூன்று நாள்களாக ராஜஸ்தான் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.