அனுமதியில்லை; ரகசியமாகத் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை! - கைவிரித்த தஞ்சாவூர் போலீஸ் | Jayalalithaa statue opening ceremony at thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (18/12/2018)

கடைசி தொடர்பு:12:21 (18/12/2018)

அனுமதியில்லை; ரகசியமாகத் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை! - கைவிரித்த தஞ்சாவூர் போலீஸ்

தஞ்சாவூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை அ.தி.மு.க-வினரால் ரகசியமாகத் திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரகசியமாக திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் மெரினா கடற்கரைச் சாலையில் எம்.ஜி.ஆர் சிலைக்குப் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. 

 தஞ்சாவூர் ரயில் நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர்- ஜெயலலிதா சிலைகள்

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலிதாவை மெரினாவில் அடக்கம் செய்ததற்கு பல வகையில் எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், ஜெயலலிதாவின் சிலை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள எம்.ஜி.ஆர்  சிலைக்கு அருகிலேயே  ஜெயலலிதாவின் சிலையை ரகசியமாகத் திறந்துள்ளனர். இது குறித்து அ.தி.மு.க-வினர் கூறுகையில், ``எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகிலேயே ஜெயலலிதாவின் சிலை நிறுவ வேண்டும் என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அடி பீடத்தில் இருந்து 8 அடியில் 7 லட்சம் மதிப்பில் சிலை நிறுவப்பட்டுள்ளது'' என்றனர்.

எம்ஜிஆர்- ஜெயலலிதா சிலைகள்

உரிய அனுமதி எதுவும் பெறாமல் கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றபோது ரகசியமாக ஜெயலலிதாவின் சிலையை திறந்தனர். இதேபோல் மிகவும் ரகசியமாக இன்று அதிகாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சிலர் வந்து சிலையை திறந்துவிட்டு மாலை அணிவித்துச் சென்றுள்ளனர். காவல்துறை தரப்பில் கேட்டால் எங்களுக்கு எதுவும் தெரியாது கலெக்டரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இதில் இருந்தே தெரிகிறது எந்த அனுமதியும் வாங்கவில்லை என்று. `ஜெயலலிதாவைத் தெய்வமாக மதிக்கிறோம்' என்று கூறும் அ.தி.மு.க-வினர், அவரது சிலையை உரிய அனுமதி பெற்று பெரிய விழாவாக எடுத்து திறக்காதது வேதனையாக உள்ளது' என்கின்றனர்.