Published:Updated:

கோடியைத் தாண்டியது ஜெயலலிதாவின் சாப்பாட்டுச் செலவு! - ஆணையத்தில் அப்போலோ தகவல்

கோடியைத் தாண்டியது ஜெயலலிதாவின் சாப்பாட்டுச் செலவு! - ஆணையத்தில் அப்போலோ தகவல்
கோடியைத் தாண்டியது ஜெயலலிதாவின் சாப்பாட்டுச் செலவு! - ஆணையத்தில் அப்போலோ தகவல்

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது 75 நாளுக்கான உணவின் பில் தொகை ரூ.1.17 கோடி என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் அவருடைய மரணம் நிகழ்ந்தது. முன்னதாக 75 நாள்கள் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பெற்றதற்கான செலவுத் தொகையை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அப்போலோ மருத்துவமனை சார்பில் வழக்கறிஞர்கள் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். 

அதில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக மொத்தம் ரூ.6.85 கோடி செலவானது. இதில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது 75 நாள்களில் உணவுக்காக ரூ.1.17 கோடி செலவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவுக்குக் கட்டணமாக 92.07 லட்சமும், ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மவுண்ட் மருவத்துவமனைக்காக ரூ.1.29 கோடி செலவாகியுள்ளது.

அறை கட்டணம்

75 நாள்கள் ஜெயலலிதா தங்கியிருந்த அறையின் வாடகை ரூ.24.19 லட்சம் என்றும், அதே நாள்களில் சசிகலா உள்ளிட்டோர் தங்கிய அறையின் வாடகை கட்டணமாக 1.24 கோடி செலவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மொத்தக் கட்டணமான இந்த ரூ.6.85 கோடியில் ரூ.44.56 லட்சம் பாக்கி தர வேண்டியிருப்பதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.