வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (18/12/2018)

கடைசி தொடர்பு:14:29 (18/12/2018)

தி.மு.க-வில் இணையப் போகிறேனா? - தங்க தமிழ்செல்வன் விளக்கம்

அ.ம.மு.க கட்சியின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் சிக்கி எம்.எல்.ஏ பதவியை இழந்தார். 

திமுக ஸ்டாலின் - செந்தில் பாலாஜி

இந்நிலையில், கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, `செந்தில் பாலாஜி தி.மு.கவில் இணையப் போகிறார். என்று பரபரப்பு கிளம்பியது. ஆரம்பத்தில், `அது வெறும் வதந்திதான்' என்று பார்க்கப்பட்ட இந்த விவகாரம், பின்பு `உண்மைதான்' என்ற நிலைக்கு மாறியது. செந்தில் பாலாஜியை கட்சி மாறவிடாமல் தினகரன் பல முயற்சிகள் செய்தும் அது பலிக்கவில்லை. இறுதியில் இரண்டாயிரம் ஆதரவாளர்களோடு கடந்த 15-ம் தேதி சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி.  

தங்க தமிழ்செல்வன்

இவரை அடுத்து அதே அ.ம.மு.க கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் தேனி மாவட்டச் செயலாளருமான தங்க தமிழ்செல்வன் தி.மு.கவின் இணையப்போவதாக இணையத்தில் தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தங்க தமிழ்செல்வன். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ``நான் தி.மு.க-வில் சேர விருப்பமாக உள்ளதாக தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு வதந்தி பரப்பி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம். சசிகலா ஆணைக்கிணங்க டிடிவி தினகரன் வழியில் என் பயணம் தொடரும். துரோகத்தை வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.