``விசாரணையில் தப்பித்த அமைச்சர்கள்!’’ - அ.தி.மு.க-வில் அடுத்தடுத்த மர்மங்கள்! | admk ministers current situation

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (18/12/2018)

கடைசி தொடர்பு:16:20 (18/12/2018)

``விசாரணையில் தப்பித்த அமைச்சர்கள்!’’ - அ.தி.மு.க-வில் அடுத்தடுத்த மர்மங்கள்!

பன்னீர்செல்வம்

அ.தி.மு.க-வின் உட்கட்சிக்குள் சமீப நாள்களாக நடைபெற்றுவரும் சில மர்ம நிகழ்வுகள் கட்சி நிர்வாகிகளைக் குழப்பம் அடையச் செய்துள்ளது. கடந்த மாதம் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, சசிகலா தரப்பைச் சரிக்கட்டும் வேலையில் அவர் இறங்கிவிட்டதாக அ.தி.மு.க-விலேயே பரவலாகப்  பேச்சு எழுந்துள்ளது. விரைவில் அ.தி.மு.க-வும், தினகரனின் அ.ம.மு.க- வுடன் இணைவதற்கான வேலைகள் ஒருபுறம் நடைபெற்று வருவதாக அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் மத்தியில் கருத்து உலவுகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர்

அதற்கு ஏற்றாற்போலவே அ.தி.மு.க-வைச் சுற்றியும் ஆளும் தரப்பைச் சுற்றியும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக, ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்குத் தொடர்பு இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவதற்கு ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், சமீப நாள்களாக அந்த ஆணையத்தில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆணையத்தின் வழக்கறிஞராக ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பணியாற்றி வந்த மூத்த வழக்கறிஞர் பார்த்தசாரதி திடீர் ராஜினாமா செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. ஆணையத்தின் விசாரணையில் ஏற்பட்ட சில மாற்றங்களே, இவரின் ராஜினாமாவுக்குக் காரணம் என்ற செய்திகள் பரவியது. இவர் ராஜினமா செய்த அன்றே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது, ஆறுமுகசாமி ஆணையம்.

ஆறுமுகசாமி

இன்று ஆஜராக வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையத்தில் ஆஜராகவில்லை. அவர் அடுத்து எப்போது விசாரணைக்கு வருவார் என்ற தகவலும் இதுவரை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல், துணை முதல்வர் பன்னீர்செல்வம் நாளை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவரும் நாளை ஆஜராகவில்லை. அவர் ஆஜராக வேண்டிய தேதியும் முடிவாகவில்லை. அமைச்சர்களை ஆணையத்தின் தரப்பில் விசாரணை நடத்த காலதாமதம் செய்வதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் விளையாட்டு நடந்துவருவதாகவும், இவர்கள் விசாரணைக்கு ஆஜரானால் அதற்குச் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். அ.தி.மு.க-வில் சமீப நாள்களாக நடைபெற்றுவரும் பல்வேறு  மர்ம சம்பவங்கள் அடுத்தடுத்த பரபரப்புகளை ஏற்படுத்திவருகிறது.