Published:Updated:

`ராகுல், ஸ்டாலின் இணைந்தது ஏன்?’ - காரணம் சொல்லும் சஞ்சய்தத்

`ராகுல், ஸ்டாலின் இணைந்தது ஏன்?’ - காரணம் சொல்லும் சஞ்சய்தத்
`ராகுல், ஸ்டாலின் இணைந்தது ஏன்?’ - காரணம் சொல்லும் சஞ்சய்தத்

பாரதிய ஜனதா ஆட்சியை அகற்றுவதற்காகவே இளந்தலைவர்களான ராகுல், ஸ்டாலின் ஆகிய இருவரும் இணைந்திருக்கிறார்கள் எனக் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளரான சஞ்சய்தத் நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி பாராளுமன்றத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சியின்  பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நெல்லை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரும் தேசியச் செயலாளருமான சஞ்சய்தத் கலந்து கொண்டார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மறைந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், `இந்தியப் பிரதமராகக் ராகுல்காந்தி வர வேண்டும்’ என முன் மொழிந்துள்ளார். அவரது இந்த விருப்பத்தையும் முன்மொழிவையும் காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. மத்தியில் ஆளும் பாசிச பாரதிய ஜனதா ஆட்சியை அகற்ற ராகுல்காந்தி, ஸ்டாலின் என இரு இளந்தலைவர்கள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள்.

பாரதிய ஜனதா ஆட்சியை அகற்ற மெகா கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. ஒருமித்த கருத்துக் கொண்ட கட்சிகள் அந்தக் கூட்டணியில்  இணைந்து வருகின்றன. காங்கிரஸ் கூட்டணியில் கமல் கட்சியை சேர்ப்பீர்களா என்று கேட்கிறீர்கள். ஒரே கருத்துடையவர்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்.

ரஃபேல் விமானம் வாங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. ஆனால், இது குறித்த வழக்கின்போது உச்ச நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா அரசு தவறான தகவல்களை அளித்துள்ளது. நாட்டின் உயர்ந்த தன்னாட்சி மிகுந்த அமைப்புகளான சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றை மத்திய அரசு சிதைத்துவிட்டது. 

சினிமா நட்சத்திரங்களின் திருமண விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடிக்கு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களைப் பார்க்க வரமுடியவில்லை. ஆறுதல் கூறக்கூட அவர் வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணமும் முழுமையாக வழங்கப்படவில்லை இதைக் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது" என்று தெரிவித்தார்.