Published:Updated:

`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்!’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்

`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்!’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்
`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்!’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்

 தி.மு.க-வில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,வரும் 27-ம் தேதி கரூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதால், கொங்கு மண்டலத்தில் அ.ம.மு.க, பா.ம.க, அ.தி.மு.க உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பேரை தி.மு.க-வில் இணைக்க இருப்பதாக பரபர தகவல் கிடைத்துள்ளது.

 அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இவர் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்த வழக்கின் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் சிக்கி, தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார். டி.டி.தினகரனிடம், `உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்' என்று செந்தில்பாலாஜி தொடர்ந்து வலியுறுத்தி வந்தாராம். ஆனால், டி.டி.வி.தினகரன் அதற்குச் சம்மதிக்கவில்லை என்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், 'அ.தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது' என்ற தகவல் கிளம்பியது.

இதனால்,தனது ஆதரவாளர்களைக் கடந்த வாரம் கூட்டிய செந்தில்பாலாஜி, தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசித்தார். அதை வைத்து, `செந்தில்பாலாஜி முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளருமான கரூர் சின்னசாமி மூலமாக தி.மு.க-வில் இணையவிருக்கிறார்' என்ற தகவல் கிளம்பியது. ஆரம்பத்தில், `இது வெறும் வதந்தி' என்ற அளவில் பேசப்பட்டாலும், அடுத்தடுத்த நாள்களில், 'தகவல் உண்மைதான்' என்ற நிலைக்கு மாறியது. செந்தில்பாலாஜியை சமாதானம் செய்ய முயன்றார் டி.டி.வி.தினகரன். முடியவில்லை. இதனால், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் க ட்சியின் பொருளாளர் தஞ்சை ரெங்கசாமி உள்ளிட்டவர்களைக் கரூருக்கு அனுப்பி வைத்து, செந்தில்பாலாஜியை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவர்களைச் சந்திக்காமல் டிமிக்கி கொடுத்தார் செந்தில்பாலாஜி. அதோடு, தனது ஆதரவாளர்கள் 2,000 பேரோடு சென்னைக்குப் போய் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் ஐக்கியமானார். இன்று காலை கரூர் வந்த செந்தில்பாலாஜி, தி.மு.க மாவட்ட, நகர, ஒன்றியக் கழக நிர்வாகிகளைச் சென்று சந்தித்து வருகிறார். இந்நிலையில்தான், வரும் 27-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தைக் கூட்ட இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் சிலர், ``சென்னையில் நடந்தது சிம்பிளான இணைப்பு விழாதான். தனது மாவட்டமான கரூரில் தனது வெயிட்டை ஸ்டாலின் முன்பு காட்ட நினைக்கிறார். அதனால்தான், வரும் 27-ம் தேதி கரூரில் மிக பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். கொங்கு மண்டலம் முழுவதும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டவர்களை இழுக்க இருக்கிறார். அதோடு, கரூர் மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள், தொண்டர்களையும் சேர்த்து குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேரைத் தி.மு.க-வில் இணைக்க இருக்கிறார். சேலம், மேட்டூர் பகுதிகளைச் சேர்ந்த பா.ம.க-வினர் ஜி.கே.மணி மீது அதிருப்தியில் உள்ளனர். அங்குள்ள பா.ம.க முக்கிய நபர் மூலம் பலரும் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க-வில் இணைய இருக்காங்க.

இதுபோல், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.ம.மு.க, அ.தி.மு.க அதிருப்தி நிர்வாகிகள் பலரையும் வரும் 27-ம் தேதி தி.மு.க-வில் இணைக்க இருக்கிறார். ஆனால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.ம.மு.க-வினர் பலரையும், மூன்று கோடி ரூபாய் வரை செலவு செய்து, 'செந்தில்பாலாஜியோடு போகாமல் அ.தி.மு.க-வுக்கு வந்துருங்க'ன்னு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு இழுக்க முயற்சி பண்றதா தகவல் வருது. அவங்க எவ்வளவு செலவு பண்ணினாலும், செந்தில்பாலாஜி பின்னாடிதான் வருவாங்க. ஆளுங்கட்சிக்கு எதிராக இனிமேல்தான் செந்தில்பாலாஜியின் உண்மையான ஆட்டம் ஆரம்பம்’’ என்றார்கள் மகிழ்ச்சியாக.

 இதுபற்றி பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரனிடம் பேசினோம். ``பா.ம.க-வில் யாரும், யார்மீதும் அதிருப்தியில் இல்லை. செந்தில்பாலாஜிகிட்ட காசு இருக்கு. அதை வச்சு விளையாடப் பார்க்கிறார். கட்சியிலிருந்து போனவர்கள், யாருன்னு தெரியாதவர்களை வேண்டுமானால் காசைக் காட்டி, ஆசை மூட்டி தன்னோடு அழைத்துப் போகலாம். ஆனால், உண்மையான பா.ம.க-வினர் யாரும் செந்தில்பாலாஜி பின்னே போகமாட்டார்கள். ஏனென்றால், தி.மு.க-வுக்கு செந்தில்பாலாஜி போயிருப்பது, கண்ணை திறந்துகொண்டே கிணற்றில் குதித்தது போன்றது. தி.மு.க-வில் அவர் காலம் தள்ள முடியாது. முதல்நாள் மேடையின் முன்வரிசையில் அமர வைப்பார்கள், மறுநாள் மேடையின் பின்வரிசைக்கு அனுப்பப்படுவார். அதற்கு அடுத்த நாள், கீழே முன்வரிசையில் அமர வைக்கப்பட்டு, அதன் பிறகு கூட்டத்தின் நடுவில், கடைசியாகக் கூட்டத்தின் கடைசியில் நிக்க வைக்கப்படுவார். இதுதான் நடக்கப்போவுது பாருங்கள்" என்றார்.