Published:Updated:

மோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்! - அருண் ஜெட்லி

மோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்! - அருண் ஜெட்லி
மோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்! - அருண் ஜெட்லி

பிரதமர் மோடி மற்றும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவரும் தங்களது துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்துத் தெரிவித்திருக்கிறார். 


அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏறக்குறைய அதேசமயம், இந்தியக் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்கிறது. டெல்லியில் நடைபெற்ற `ஆஜ்தக் அஜெண்டா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் அருண் ஜெட்லியிடம் மக்களவைத் தேர்தல் மற்றும் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகியவை குறித்து பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அருண் ஜெட்லி, ``அவர்கள் இருவரும், தத்தமது துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்கள். அவர்களை வெல்வது எளிதான காரியம் அல்ல’’ என்றார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்றும் அவர் கூறினார்.  


தேர்தல் குறித்து பேசிய அருண் ஜெட்லி, ``மகாபந்தன் எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது தோல்வியடைந்த ஓர் ஐடியா. இவ்வளவு கட்சிகள் கொண்ட கூட்டணியை ஆட்சிக் கட்டிலில் அமரவைப்பதன் மூலம் எந்த ஒரு நாடும் தற்கொலை முடிவை எடுக்காது. நிலைத்தன்மையோ அல்லது நிலையான கருத்தியலோ அவர்கள் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல்தான் தலைமையும்’’ என்றார். ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி வருவதாகக் குற்றம்சாட்டிய ஜெட்லி, ``ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் விஜய் மல்லையா விவகாரம் என இரண்டிலுமே ராகுல் கூறியவை பொய்யான குற்றச்சாட்டுகள். அரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க வேண்டுமென்றால் நம்பகத்தன்மையுடன் பேச வேண்டும்’’ என்றார்.