Published:Updated:

`ஸ்டெர்லைட்டை மூடிட சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்!’ - அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

`ஸ்டெர்லைட்டை மூடிட சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்!’ - அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்
`ஸ்டெர்லைட்டை மூடிட சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்!’ - அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட  அமைச்சரவையைக் கூட்டி  கொள்கை முடிவெடுக்க  வலியுறுத்தி,  வரும்  21-ம் தேதி  துாத்துக்குடியில் தி.மு.க.,  உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த  திட்டமிட்டுள்ளன.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை அரசாணை வெளியிடப்பட்டு மூடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது வேதாந்தா குழுமம். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஆய்வுக்குழுவை நியமித்தது. இந்த ஆய்வுக்குழுவின் ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, ஆலை தொடர்ந்து இயங்கலாம் என தீர்ப்பளித்தது பசுமைத் தீர்ப்பாயம். இதைத் தொடர்ந்து ஆலையை திறக்கக்கூடாது எனவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால் திறக்க வேண்டும் எனவும் ஆலைக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.

பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெளியான நாள் முதலே, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்கள், தூத்துக்குடி மாநகரின் முக்கிய சந்திப்புகள் என பல இடங்களில் போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், துாத்துக்குடியில் பதற்றம் நிலவுவதுபோல ஒரு சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், போராட்டம்  தீவிரமாக நடந்தபோது தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக தனித்தனியாக போராட்டம் நடத்திய கட்சிகள், தற்போது இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன.

இதன் எதிரொலியாக, தி.மு.க., உள்ளிட்ட  அனைத்துக் கட்சிகள் கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. துாத்துக்குடி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. இதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த சண்முகம், ``ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் இருக்கக் கூடாது என்பதுதான் மக்களின் நோக்கமாக உள்ளது. இதில் மக்கள் உறுதியுடன் உள்ளனர்.

இந்த ஆலைக்கு எதிராக தற்போது அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துகிறது என்பதால் மக்களுக்கு நம்பிக்கை வரப்போவதில்லை. இதற்கு காரணம் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக போராட்டம் நடத்துவதுதான். அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இனிமேல் காவல்துறைக்கும் மக்களுக்கும் போராட்டம் நடக்கக் கூடாது. ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் போராட்டம் நடக்கக் கூடாது.

இனிமேல் வரக்கூடிய போராட்டம் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும்தான் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளதாக ஸ்டெர்லைட் ஆலைத்தரப்பு மறைமுகமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. போராட்டங்களில் வெளிப்படும் அனைத்துக்கட்சிகளின் பலத்தினால்தான் ஆலையை நிரந்தரமாக மூட வைக்க முடியும்” என்றார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கீதாஜீவன், ``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்பட தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றே போதும். உலகத்தில் எந்த நீதிமன்றத்துக்குச் சென்றாலும் ஆலையைத் திறக்க முடியாது என முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை இதையே சொல்லி வருகிறார்கள். ஆனால், பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது. ஆலை தொடர்ந்து இயங்கலாம் என பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டசபையில் கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தியும், சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் முதல்கட்டமாக வரும் 21-ம் தேதி, தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பின் வியாபாரிகளிடம் கலந்தாலோசனை செய்து மாபெரும்  கடையடைப்பு போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்திட முடிவு செய்துள்ளோம். எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கூடாது என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளோம்” என்றார்.