Published:Updated:

` வாட்ஸ்அப் தான் ஆதாரம் என்றால்...!' - ஜெயக்குமாருக்கு சுட்டிக் காட்டிய ஜெ.அன்பழகன்

` வாட்ஸ்அப் தான் ஆதாரம் என்றால்...!'  - ஜெயக்குமாருக்கு சுட்டிக் காட்டிய ஜெ.அன்பழகன்
` வாட்ஸ்அப் தான் ஆதாரம் என்றால்...!' - ஜெயக்குமாருக்கு சுட்டிக் காட்டிய ஜெ.அன்பழகன்

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``மேக்கே தாட்டூ விஷயத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறோம். ஆனால், தி.மு.க நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு தலைவர்கள் வந்தார்கள். அவர்களிடம் தமிழகத்தின் உரிமைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேசவில்லை.

மேக்கே தாட்டூ அணை, ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டது என எதைப் பற்றியும் இவர்கள் பேசவில்லை. உள்ளத்தில் ஒன்று; உதட்டில் ஒன்று பேசக்கூடியவர்கள் தி.மு.க-வினர். கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காகத் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்துள்ளனர். விழாவுக்கான கட் அவுட்களுக்கு மாநகராட்சி மின் கம்பங்களில் இருந்து மின்சாரம் திருடியுள்ளார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார். 

இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை அண்ணா அறிவாலயம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ மைதானம் ஆகிய இடங்களில் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி , சோனியா காந்தி மற்றும் மூன்று மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியது. கூட்டம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்துக்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலம் பெறப்பட்டது. இது அனைவருக்கும் தெரியும். 

சிலை திறப்பு விழா மாபெரும் வெற்றி பெற்றதால் பொதுமக்களின் ஆதரவு தி.மு.கவுக்கு பல மடங்காக அதிகரித்து வருகிறது.  இதை பொறுத்துக்கொள்ள முடியாத மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விழாவுக்குக் களங்கம் ஏற்படுத்த பத்திரிகையாளர்களிடம் மின் திருட்டு என வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை காண்பித்துக் குற்றம் சுமத்துகிறார். வாட்ஸ்அப்பில் வந்ததையெல்லாம் ஆதாரமாக எடுத்துப் பேசினால் அமைச்சர் மீது எவ்வளவோ பேசலாம். ஆனால் தி.மு.க-வினர் என்றைக்கும் தரம் தாழ்ந்து ஈடுபடமாட்டார்கள். அமைச்சரின் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியால் ஆளும் கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கிப்போய் இருப்பது நன்றாகத் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.