Published:Updated:

`தி.மு.க சேர்த்துக்கல; அ.ம.மு.க-வில் ஐக்கியம்!' - எம்.எல்.ஏ-வின் சகோதரர் அதிரடி முடிவு

`தி.மு.க சேர்த்துக்கல; அ.ம.மு.க-வில் ஐக்கியம்!' - எம்.எல்.ஏ-வின் சகோதரர் அதிரடி முடிவு
`தி.மு.க சேர்த்துக்கல; அ.ம.மு.க-வில் ஐக்கியம்!' - எம்.எல்.ஏ-வின் சகோதரர் அதிரடி முடிவு

வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ-வின் அண்ணன், அ.தி.மு.க-விலிருந்து விலகி தினகரனைச் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கொண்டார்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நீலகண்டன். இவர், அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர், ஆவின் தலைவர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். நீலகண்டனின் தம்பி கார்த்திகேயன் வேலூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாகவும், மாநகர தி.மு.க செயலாளராகவும் இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலாவை முன்னிறுத்தியபோது எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ நீலகண்டனும் ஒருவர். இதையடுத்து, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிரச்னைகளால் கட்சிப் பணிகளில் இருந்து இரண்டு ஆண்டுகள் நீலகண்டன் ஒதுங்கியே இருந்தார். அ.தி.மு.க நிகழ்ச்சிகளில் அவர் தலைகாட்டாமல் இருந்தார்.

ஒருகட்டத்தில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் தம்பியின் உதவியுடன் தி.மு.க-வில் சேர்ந்துவிட முடிவு செய்தார். துரைமுருகன் மற்றும் வேலூர் கிழக்கு மாவட்டத் தி.மு.க செயலாளர் ஆர்.காந்தியை அடிக்கடி சந்தித்துப் பேசினார். அவர்கள், தி.மு.க-வில் சேர்த்து கொள்ளவில்லை. எங்கு செல்வது என்று தெரியாமல் சில நாள்கள் விரக்தியில் இருந்த நீலகண்டன், ‘யாரைக் கடுமையாகச் சாடி விமர்சித்தாரோ... அதே சசிகலா தலைமையில் இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி, தினகரனுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவர் மூலம் இன்று காலை சென்னைக்குச் சென்றார் நீலகண்டன். அங்கு தினகரனை சந்தித்து அ.ம.மு.க-வில் இணைந்து கொண்டார்.

‘‘அ.தி.மு.க-வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த வேலூர் மாவட்டத்தின் மூத்த நிர்வாகி திடீரென தங்களின் எதிரி தினகரன் கட்சிக்குத் தாவியது அதிர்ச்சியளிப்பதாக அ.தி.மு.க-வினர் தெரிவித்தனர். இதுபற்றி நீலகண்டனிடம் பேசினோம். ‘‘ஜெயலலிதா இறந்த பிறகு, நான் இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன். இப்போது, அ.ம.மு.க-வில் சேர்ந்துள்ளேன்’’ என்றார். நீலகண்டனுடன், திருவண்ணாமலை நகராட்சி முன்னாள் தலைவர் பாலசந்தரும், அ.தி.மு.க-விலிருந்து விலகி அ.ம.மு.க-வில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.