Published:Updated:

`ஜனவரியிலிருந்து தமிழகத்தில் மோடி ஆட்டத்தைக் காணலாம்!’ - பா.ஜ.க தொண்டர்களிடம் கே.டி.ராகவன் சூசகம்

`ஜனவரியிலிருந்து தமிழகத்தில் மோடி ஆட்டத்தைக் காணலாம்!’ - பா.ஜ.க தொண்டர்களிடம் கே.டி.ராகவன் சூசகம்
`ஜனவரியிலிருந்து தமிழகத்தில் மோடி ஆட்டத்தைக் காணலாம்!’ - பா.ஜ.க தொண்டர்களிடம் கே.டி.ராகவன் சூசகம்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள பாராளுமன்றத் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் நமோ செயலி மூலம் இன்று கலந்துரையாடினார். வேலூர், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

காஞ்சிபுரம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் செங்கல்பட்டில் நடந்தது. இதில் தேர்தல் வாக்குச்சாவடி பொறுப்பாளர் ஒருவர், `தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மத்திய அரசின் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’ எனக் கேட்க, ‘லட்சக்கணக்கான சாமானிய மாணவர்கள் கடந்த நான்கு வருடங்களில் தரமான கல்வியைப் பெற்றுள்ளார்கள். பட்ட மேற்படிப்புக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். பொறியியல், மேலாண்மை, தொழில்நுட்ப வல்லுநர், சட்டம் உள்ளிட்ட துறைகளில் அதிக அளவு மேற்படிப்புக்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்குத் தரமான கல்வி கிடைத்துள்ளது’ என்றார்.

மோடி பேசி முடித்த பிறகு, காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் கே.டி.ராகவன் பேசினார். அப்போது, “இன்று மோடியை சேடிஸ்ட் என்று ஸ்டாலின் சொல்கிறார். கருணாநிதிக்கு மெரினாவில் எப்படி இடம் கிடைத்தது எனக் கனிமொழிக்கும் ஸ்டாலினுக்கும் தெரியும். அந்த வகையில் நாங்கள் சேடிஸ்ட்டா? தமிழ்நாட்டில் நாங்கள் இரண்டு சதவிகிதம்தான் இருக்கிறோம் என்றார்கள். கலைஞருக்கு வைரவிழா பொதுக் கூட்டம் நடந்தபோது, அரைமணி நேரக் கூட்டத்தில் 25 நிமிடம் நரேந்திர மோடியைக் குற்றம் சாட்டிப் பேசினார் ஸ்டாலின். ஐந்து நிமிடம்தான் கருணாநிதியைப் பற்றிப் பேசினார். கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றியும் மோடியைப் பற்றியும்தான் பேசினார். இதுகுறித்து நான் தி.மு.க முக்கிய பிரமுகரிடம் கேட்டேன். ‘தி.மு.க-வைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் தி.மு.க-வுக்கு சவாலாக இருக்கக்கூடிய ஒரே கட்சி பா.ஜ.க எனத் தி.மு.க நினைக்கிறது’ என்றார் அவர்.

2016 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியோ, ஸ்டாலினோ பா.ஜ.க-வைப் பற்றித் தேர்தலில் ஓர் இடத்தில்கூட வாயைத் திறக்கவில்லை. அ.தி.மு.க-வை மட்டும்தான் எதிர்த்துப் பேசினார்கள். அதுபோல் ஜெயலலிதாவும் தி.மு.க-வையே தாக்கிப் பேசினார். யாரும் நம்மைத் தாக்கிக்கூட பேசி அரசியல் செய்யவில்லை. 2016 ஏப்ரலுக்கு முன்பாகத் தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க என 11 கட்சிகள் இருந்தன. புரட்சிப் புயல் வைகோ புண்ணியத்தில் ஆறு கட்சிகள் காலியாகிவிட்டன. தமிழ்நாட்டில் இதுவரை ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு ஆளுமைகள் கோலோச்சினார்கள். அந்த இரண்டு ஆளுமைகளும் தற்போது இல்லை. இதைப் பயன்படுத்திக் கொள்வது என மத்தியத் தலைமை தீர்மானித்துவிட்டது. ஜனவரியிலிருந்து பா.ஜ.க-வின் ஆட்டத்தைக் காண நீங்கள் தயாராக இருங்கள். வைகோ தி.மு.க பக்கம் இருக்கும் வரை நாம் பயப்படத் தேவையில்லை. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத, வெறும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள்தான் அந்தக் கூட்டணியில் இருக்கின்றன. ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பா.ஜ.க இனிப்பு வழங்கிக் கொண்டாடும்” என்றார்.