Published:Updated:

ஒப்பந்ததாரர் இல்லாமல் விடப்பட்ட நெடுஞ்சாலைத்துறை டெண்டர்!

ஒப்பந்ததாரர் இல்லாமல் விடப்பட்ட நெடுஞ்சாலைத்துறை டெண்டர்!
ஒப்பந்ததாரர் இல்லாமல் விடப்பட்ட நெடுஞ்சாலைத்துறை டெண்டர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக நெடுஞ்சாலைத் துறையில் கோவை மண்டல நெடுஞ்சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப் படிவம் பெறுவதற்கு கடைசி நாளான இன்று ஒப்பந்தப் பெட்டியை கண்காணிப்பு பொறியாளர் அறைக்குள் வைத்து தாழிட்டு ஒப்பந்ததாரர்களின் படிவத்தைப் போட அனுமதிக்காமல் நெடுஞ்சாலைத்துறை டெண்டரை முடித்திருக்கிறார்கள் சேலம் நெடுஞ்சாலைத்துறையினர்.

இதுபற்றி நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் ரஞ்சித், ``கடந்த 27.11.2018 அன்று நெடுஞ்சாலைத்துறையில் கோவை மண்டலத்தில் 1.மேட்டுப்பாளையம் கிச்சாகத்தூர் சாலையில் 1 கோடியே 25 லட்சத்தில் சிறுபாலம், 2. கவுண்டநாயக்கன்பாளையம் போயம்பாளையம் சாலையில் 1 கோடியே 53 லட்சத்தில் பாலம், 3. காரமடை- பெரியபட்டி -நெகமம் சாலை வழியாக அம்மந்தக்கடவில் 1 கோடியே 66 லட்சத்துக்கு உயர்மட்ட பாலம், 4. அரவேனு-ஹலக்கரை சாலையில் 1 கோடியே 19 லட்சத்தில் சிறுபாலம், 5. தும்மனட்டி - டி.மணிஹட்டி சாலையில் 1 கோடியே 23 லட்சத்தில் சிறுபாலம், 6. பேரூர் - வேடப்பட்டி சாலையில் 1 கோடியே 85 லட்சத்தில் உயர்மட்ட பாலம்  என ஆறு பணிகளுக்கு  8 கோடியே 71 லட்சத்துக்கு ஒப்பந்தப் பணிகள் அறிவிக்கப்பட்டது.

இந்தப் பணிகளை எடுக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்து 19.12.2018 இன்று மாலை 3:00 மணிக்குள் சேலம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் போடவேண்டும். 3:15 மணிக்கு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று வெளியிட்டிருந்தார்கள்.

அதையடுத்து டெண்டர் படிவத்தை பூர்த்தி செய்து சேலம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகப் பெட்டியில் போடுவதற்காகப் பிற்பகல் 2:00 மணிக்கு வந்தேன். ஆனால், பெட்டி கண்காணிப்பு பொறியாளர் அறைக்குள் வைத்து தாழிட்டுக் கொண்டு பிற்பகல் 3:00 மணிக்கு மேல் அறையைத் திறந்தார்கள். படிவத்தைப் பெட்டிக்குள் போட அனுமதிக்கவில்லை. அதனால் இது நியாயமான டெண்டர் இல்லை. இந்த டெண்டரை கேன்சல் செய்ய வேண்டும்'' என்றார்.

இதையடுத்து சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் வளர்மதியிடம் கேட்டதற்கு, ``இந்த டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு 15 நாள்கள் ஆகிறது. பூர்த்தி செய்த ஒப்பந்தப் படிவம் போடும் இந்தப் பெட்டி என் அறையில் இருந்தது. ஓரிரு நாள்களுக்கு முன்பே வந்து போட்டிருக்கலாம். ஆனால், பிரச்னை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இறுதி நேரத்தில் வந்து பிரச்னை செய்கிறார். அனைத்து ஒப்பந்ததாரரிடமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நியாயமான முறையில் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்ய இருக்கிறோம்'' என்றார். ஆனால், இரவு ஆகியும் யாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.