Published:Updated:

`ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!’ - சி.பி.எம் வலியுறுத்தல்

`ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!’ - சி.பி.எம் வலியுறுத்தல்
`ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!’ - சி.பி.எம் வலியுறுத்தல்

``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இறுதி வரையில் ஆலையை மூடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் மனு அளித்துள்ளனர். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் தொடர் போராட்டத்தால் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலை தொடர்ந்து இயங்குவதற்காக வருடந்தோறும் வழங்க வேண்டிய இசைவாணையை வழங்காமல் நிறுத்தி வைத்தது. தொடர்ந்து, தண்ணீர், மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஆலைக்கு எதிராக மக்களின் முற்றுகைப் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு சீல் வைத்து மூடியது. இதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஆய்வுக் குழுவை நியமித்தது. இக்குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில். `ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம்’ எனத் தீர்ப்பளித்தது தீர்ப்பாயம். தீர்ப்பாயம் அளித்த இத்தீர்ப்பை எதிர்த்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இறுதி வரையில் ஆலையை மூடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன், மாநகரச் செயலாளர் ராஜா ஆகியோர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், ``1997-ம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது என்பதாலும், தாமிரம் உற்பத்தி செய்வதன் மூலமும் இதர உப பொருள்கள் மூலமும் பொருளாதாரத்துக்கு வலு சேர்த்து வருகிறது என்கிற காரணத்திலேயே அந்த ஆலை சுற்றுச்சூழலுக்கும் வாழ்வதாரத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு பகுதியினர் போராடிக் கொண்டிருக்கும்போது சிலர் ஆதரித்து வந்தனர். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையால் கிடைக்கும் பொருளாதார நலன்களைவிட ஆலையின் மாசுகளும் கழிவுகளும் இயற்கையின் மீதும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் ஏற்படுத்திய பாதிப்புகளும் அச்சுறுத்தல்களும் அதிகம் என்பதால்தான் அனைத்துப் பகுதி மக்களும் போராடினார்கள்.

14 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு தமிழக அரசும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த ஆலையை மூட உத்தரவிட்டன. இருப்பினும், தமிழக அரசின் சட்டபூர்வ நடவடிக்கைகள், மக்களின் உணர்வுகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இவற்றையெல்லாம் புறந்தள்ளி ஆலையை திறக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. ஆரம்பம் முதலே பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவான நிலையே மேற்கொண்டிருந்தது என்பது இந்தத் தீர்ப்பின் மேலும் உறுதியாகியுள்ளது. தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பானது சுற்று வட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆலை இயங்க அனுமதித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, சட்டம் ஒழுங்குப் பிரச்னையும், அமைதிக்குலைவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆலை இயங்குவதால் ஏற்படும் பொருளாதார பலன்களைவிட, அது சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் மீள முடியாத பாதிப்புகள் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அதை வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் மக்களின் விருப்பம், கட்சிகளின் மூலமாகவும் சட்டமன்ற உறுப்பினர்களின் மூலமாகவே பிரதானமாக வெளிப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு தமிழக அரசு சட்டமன்றத்தைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் சிறப்புத்தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இறுதி வரையில் ஆலையை மூடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.