Published:Updated:

`மோடி அரசு, இனி ஆட்சிக்கு வராது!’ - நல்லகண்ணு ஆரூடம்

`மோடி அரசு, இனி ஆட்சிக்கு வராது!’ - நல்லகண்ணு ஆரூடம்
`மோடி அரசு, இனி ஆட்சிக்கு வராது!’ - நல்லகண்ணு ஆரூடம்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி கட்டுமானத் தொழிலாளர்களின் 7வது மாநில மாநாடு சேலம் தமிழ்ச்சங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்னு சேலம் வந்திருந்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தோழர் நல்லகண்ணு, ``மோடி தலைமையிலான மத்திய அரசும், எடப்பாடி தலைமையிலான மாநில அரசும் வளர்ச்சிக்கு மாறாகத் தமிழ்நாட்டில் 8 வழிச் சாலை அமைப்பேன் என்றும், உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் கொண்டு வருவேன் என்றும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பேன் என்றும் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும்  பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். சேலம் டு சென்னைக்கு 4 வழிச் சாலையே போதுமானது.

8 வழிச் சாலை திட்டம் போடுவதற்கு முன்பே மக்களிடம் கலந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும். அதை மத்திய, மாநில அரசுகள் செய்ய தவறிவிட்டது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் முன்னோக்கியதாக இல்லாமல் பின்னோக்கியதாக இருக்கிறது. நீர்நிலைகள் அழிந்து வரும் சூழலில் சேலத்தில் அரசே ஏரியில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு கட்ட முயற்சி செய்து வருகிறது. அதை உடனடியாகக் கைவிட வேண்டும். நிலத்தடி நீர் இன்றி உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்தால் அது மக்களுக்கு விரோதமான செயல். மாநில அரசும், மத்திய அரசும் சட்டம் இயற்றி நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் வெளியான 4 மாநில தேர்தல் முடிவுகளால் இனி மோடி அரசு ஆட்சிக்கு வராது. அதனால் வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க இருக்கிறது. மக்கள் அவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுப்பார்கள். சபரிமலைக்குப் பெண்கள் போவதை பா.ஜ.க-வினர் அரசியலாக்கி வருகிறார்கள். கேரளா கம்யூனிஸ்ட் அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்கிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாகச் செயல்படுகிறது'' என்றார்.