Published:Updated:

தூத்துக்குடி - மதுரை தொழில் வழிச்சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்... அமைச்சர் பெஞ்சமின் தகவல்

தூத்துக்குடி - மதுரை தொழில் வழிச்சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்...  அமைச்சர் பெஞ்சமின் தகவல்
தூத்துக்குடி - மதுரை தொழில் வழிச்சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்... அமைச்சர் பெஞ்சமின் தகவல்

”முந்தைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிறுதொழில் சார்பாக போடப்பட்ட ஒப்பந்தங்களில் துாத்துக்குடியில்  56 சதவீத  முதலீட்டில் தொழில் துவங்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி முதல் மதுரை  வரை தொழில் வழிச்சாலை திட்டம் விரைவில் அமைய உள்ளது. இதனால் பெரிய தொழிற்சாலைகள் துவங்க வாய்ப்புள்ளது.” என ஊரக தொழில் வளர்ச்சித்துறை  அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.

துாத்துக்குடியில் தூத்துக்குடி சிறு  குறு  தொழில் சங்கம் (துடிசியா)  ‛மேக் இன் துாத்துக்குடி’ என்ற தலைப்பில் தொழிலதிபர்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், புதிய தொழில்முனைவோருக்கான தொழில் வாய்ப்புகள், கடன் வசதிகளை  ஏற்படுத்தி கொடுத்தல் என்ற நோக்கத்திற்காக தொழில் கண்காட்சியை நடத்துகிறது. மூன்று நாட்கள்  நடக்கும் இந்த கண்காட்சியை  தமிழக சிறுதொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சிறுதொழில் துறை செயலாளர்  தர்மேந்திரபிரசாத் யாதவ், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் பெஞ்சமின், “புதிதாக தொழில் துவங்க  முன் வருபவர்களுக்கு பயனுள்ளா யோசனைகளைக் கூறி, புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பணியைச் செய்து வருகிறது இந்த துடிசியா அமைப்பு. தமிழக அரசு சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. அதற்காக, படித்த முதல் தலைமுறை தொழில்முனைவோரை  ஊக்குவிக்கும் வகையில்,  நீட்ஸ் என்ற கடன் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கடந்த  7 ஆண்டுகளில் துாத்துக்குடியில் 32 பேருக்கு ரூ.2 கோடியே 43 லட்சம் மானியமும், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் திட்டத்தின் கீழ்  979 நபர்களுக்கு  ரூ.4 கோடியே 3 லட்சம் மானியமும், அதே போல,  மின்சாரம், மின்னாக்கி மானியம், பின்முனை வட்டி மானியம், மதிப்புக்கூட்டு வரிமானியம் ஆகியவற்றின் கீழ்  மொத்தம் ரூ.11 கோடியே  96 லட்சம் மானியமும் வழங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி முதல் மதுரை  வரை தொழில் வழிச்சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதனால், பெரிய தொழிற்சாலைகள் இப்பகுதியில்  வர வாய்ப்புள்ளது. அதே போல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட GIM எனப்படும்,  உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து  160 கோடி  முதலீடு ஈர்க்கப்பட்டது. அதில், சிறுதொழிலுக்கு, ரூ. 16 ஆயிரத்து  576 கோடி முதலிட்டிற்கான, ரூ. 10 ஆயிரத்து 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் ரூ. 7,273 கோடி முதலீட்டிற்கான   புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்,  ரூ.5,813 ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு தொழில் துவங்கப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களைப் பொறுத்த வரையில் 58 சதவீதமும்  முதலீட்டை பொறுத்த வரையில், 44 சதவீதமும் பெறப்பட்டுள்ளன. தூத்துக்குடியைப் பொறுத்த வரையில், 266 ஒப்பந்தங்கள் பெறப்பட்டு அதில் 56 சதவீதம், அதாவது, 212 ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

முதலீட்டைப் பொறுத்த வரையில்,  ரூ.260 கோடிக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு ரூ. 144 கோடியே 53 லட்சம் முதலீட்டில்  தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன. வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில்  108  சிறு குறு நிறுவனங்கள் புதிய தொழில் செய்வதற்காக ஒப்பந்தங்கள் செய்துள்ளன.” என்றார். தூத்துக்குடி துடியா சார்பில் தூத்துக்குடி டு மதுரை தொழில் வழிச்சாலை அமைக்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டபட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.