ரதயாத்திரை: திட்டம்போடும் அமித் ஷா... திருப்பியடிக்கும் மம்தா! | BJP ready to conduct Ratha Yatras in West Bengal

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (22/12/2018)

கடைசி தொடர்பு:16:39 (22/12/2018)

ரதயாத்திரை: திட்டம்போடும் அமித் ஷா... திருப்பியடிக்கும் மம்தா!

மேற்கு வங்கத்தில், 3 எம்.எல்.ஏ-க்களையும், 2 எம்.பி-க்களையும் மட்டுமே கொண்டிருக்கிறது பி.ஜே.பி. மற்ற மாநிலங்களைப்போல, கூட்டணி அமைக்கவும் அங்கே அவர்களுக்கு ஆள்கள் இல்லை. அதனால், ரதயாத்திரையைப் பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.

ரதயாத்திரை: திட்டம்போடும் அமித் ஷா... திருப்பியடிக்கும் மம்தா!

`அக்கா’ ஆளும் மாநிலத்தின், அரசியல்களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. காரணம், பி.ஜே.பி-யின் `ரதயாத்திரை’ அறிவிப்பு. 

வலுவாக இருக்கும் மாநிலங்களைவிட, வலுவற்ற மாநிலங்களே இப்போது பி.ஜே.பி-யின் குறி. தமிழகம், கேரளம் வரிசையில், இப்போது மேற்கு வங்கத்தை `மேப்’பில் சேர்த்திருக்கிறார்கள். அங்கே, மூன்று மாவட்டங்களில் ரதயாத்திரை பேரணிகளை நடத்தத் திட்டமிட்டது பி.ஜே.பி. டிசம்பர் 7-ம் தேதி, கூச்பெகார் மாவட்டத்திலிருந்து தொடங்குவதாக இருந்த பேரணியை, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கிவைக்க இருந்தார். அதோடு, டிசம்பர் 9-ம் தேதி தெற்கு 24 பெர்கனாஸ் மாவட்டத்திலும், டிசம்பர் 14-ம் தேதி பிர்பம் மாவட்டத்திலும் பேரணி நடத்த இருந்தார்கள். பேரணிக்கு ``ஜனநாயகத்தைக் காப்போம்” என்று பெயரிட்டார்கள். டிசம்பர் 6-ம் தேதி, அமித் ஷாவை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்கள். ஆனால், ``ரதயாத்திரையை அனுமதிக்க முடியாது” என்று அதிரடியாக ஆணையிட்டது, மம்தா அரசு.

ரதயாத்திரையைத் தொடங்கிய அமித் ஷா, மம்தா

பி.ஜே.பி. கூடாரம் அரண்டது. ``நாங்கள் நடத்துவது அரசியல் யாத்திரை. அதைத் தடுப்பது சட்டத்துக்குப் புறம்பானது” எனக் கொதித்தது. ``அரசியல் கூட்டம் நடத்த அனுமதி உண்டு. ஆனால், ரதயாத்திரையை அனுமதிக்க முடியாது. அனுமதித்தால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும்” என்று அறிவித்தார், மம்தா. அடுத்து, அமித் ஷாவே நேரடியாகக் காட்சிக்கு வந்தார். ``மம்தா எங்களைக் கண்டு அஞ்சுகிறார். நாங்கள் ரதயாத்திரையை நடத்தியே தீருவோம்” என்று அறிவித்தார். 

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியது பி.ஜே.பி. வழக்கை விசாரித்த தனி நீதிபதி தபபரா சக்ரபர்த்தி, ``அசம்பாவிதம் நிகழ்ந்தால் பொறுப்பேற்பீர்களா?” என்று கேட்டார். அதற்கு பி.ஜே.பி. தரப்பில், ``நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அரசுதான் அதைக் கவனிக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டது. ``அப்படியென்றால், அனுமதி கிடையாது” என்று, அரசின் ஆணையை உறுதிசெய்தார் நீதிபதி. ஆனால், `ரதயாத்திரை’ நடத்தி, `ஜனநாயகத்தைக் காப்பதில்’ உறுதியாக இருந்தது பி.ஜே.பி. அடுத்த நாளே, உயர் நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்சில் மனுத்தாக்கல் செய்தார்கள். ``ரதயாத்திரை குறித்து, பி.ஜே.பி. பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்து அரசு அறிவிக்க வேண்டும்” என்று, வித்தியாசமாக உத்தரவிட்டார்கள், நீதிபதிகள்.

ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் அடங்கிய அரசுக் குழு, பி.ஜே.பி. பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அது பி.ஜே.பி-க்கு வெற்றிகரமான தோல்வியாக முடிந்தது. ``ரத யாத்திரையால் அமைதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதுகிறோம். அதனால், அதை அனுமதிக்க முடியாது” என்று அறிவித்தார்கள், அதிகாரிகள்.

மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது வழக்கு. இப்போது, ``அசம்பாவிதம் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பேற்கிறோம்” என்று, நல்ல பிள்ளையாக அறிவித்தது பி.ஜே.பி. ஆனால், அரசுத் தலைமை வழக்கறிஞர் கிஷோர் தத்தா அதை ஏற்கவில்லை. ``ரதயாத்திரையை அனுமதித்தால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே தடை விதித்தோம்” என வாதிட்டார், அவர். உளவுத்துறையின் அறிக்கையையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். ஆனால், நீதிமன்றம் தடையை நீக்கிவிட்டது. ``ரதயாத்திரையை நடத்திக்கொள்ளலாம்” என்று அனுமதியளித்திருக்கிறார்கள், நீதிபதிகள். ``ரதயாத்திரை தொடங்குவதற்கு 12 மணிநேரங்களுக்கு முன்னால், மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி சொல்ல வேண்டும்” என்றும், நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. பி.ஜே.பி. தரப்பில் கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன. மம்தாவுக்கு இது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மம்தா

ரதயாத்திரை நடக்கப்போகும் மூன்று மாவட்டங்களும், `ஹை அலர்ட்’ மோடில் இருக்கின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகச் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை, அமித் ஷா வருவது மட்டும் உறுதியாகி இருக்கிறது. மோடியும் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து பேசும் அரசியல் நோக்கர்கள், ``அவர்கள் ரதயாத்திரை பேரணியை அரசியல் பேரணி என்கிறார்கள். ஆனால், அது நம்பும்படி இல்லை. ரத யாத்திரைகளின் வரலாறு எப்படிப்பட்டது என்பதை நாடறியும். மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே அரசு தடைவிதித்தது. ஆனால், நீதிமன்றம் அதை நீக்கிவிட்டது. அபாயம் இருப்பது தெரிந்தும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன நடக்குமென்று தெரியவில்லை” என்று அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். இதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனென்றால், ரதயாத்திரைகளின் மூலமாகவே, பி.ஜே.பி. வட இந்தியாவின் வலுவான சக்தியாக வளர்ந்தது. ஆனால், அந்த ரதயாத்திரைகளின் பின்னால் பல ரத்த சரித்திரங்கள் இருக்கின்றன. அப்போது அத்வானி என்றால், இப்போது அமித் ஷா.

மேற்கு வங்கத்தில், 3 எம்.எல்.ஏ-க்களையும், 2 எம்.பி-க்களையும் மட்டுமே கொண்டிருக்கிறது பி.ஜே.பி. மற்ற மாநிலங்களைப்போல, கூட்டணி அமைக்கவும் அங்கே அவர்களுக்கு ஆள்கள் இல்லை. அதனால், ரதயாத்திரையைப் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். அதனால்தான், மாதக்கணக்கில் போராடி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருக்கிறார்கள். 45 நாள்கள் வரை நீளும் ரதயாத்திரையில், 42 நாடாளுமன்றத் தொகுதிகளையும், `கவர்’ செய்யவிருக்கிறார்கள். இப்போதே அதற்குரிய ஏற்பாடுகள், ஜரூராக ஆரம்பித்துவிட்டன. இது அரசியல் பேரணியாக மட்டும் இருந்தால் பிரச்னை இல்லை. அங்கே எழுப்பப்படும் முழக்கங்கள், அரசியல் முழக்கங்களாக மட்டும் இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், 'ரதயாத்திரை தொடர்பாக வெளியான துண்டுப் பிரசுரங்களில், கலவரத்தைத் தூண்டும் வாசகங்கள் இருக்கின்றன’ என்று, மாநில அரசு கவலை தெரிவித்திருக்கிறது. இது கவனிக்கப்பட வேண்டியது.

``ரத யாத்திரைக்கான புதிய தேதிகளை விரைவில் அறிவிப்போம்” என்று சொல்லி இருக்கிறார், மாநில பி.ஜே.பி. தலைவர் திலிப் கோஷ். அதோடு, ``எங்கள் தரப்பிலிருந்து எந்த அசம்பாவிதமும் நடக்காது” என்றும் வாக்கு கொடுத்திருக்கிறார்.

நடக்காமல் இருந்தால் நல்லது!


டிரெண்டிங் @ விகடன்