Published:Updated:

செந்தில் பாலாஜியின் இன்னொரு முகம்! - அ.தி.மு.க முன்னாள் மா.செ சொல்லும் அதிர்ச்சி தகவல்

செந்தில் பாலாஜியின் இன்னொரு முகம்! - அ.தி.மு.க முன்னாள் மா.செ சொல்லும் அதிர்ச்சி தகவல்
செந்தில் பாலாஜியின் இன்னொரு முகம்! - அ.தி.மு.க முன்னாள் மா.செ சொல்லும் அதிர்ச்சி தகவல்

``2000-ம் ஆண்டு செந்தில் பாலாஜியை நான்தான் அ.தி.மு.கவில் ஜெயலலிதா முன்னிலையில் சேர்த்தேன். ஆனா, அந்த நன்றியை மறந்து வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது மாதிரி, எனது பதவியை இளவரசி மூலம் பறித்தவர் செந்தில் பாலாஜி. தி.மு.க-வில் இருக்கும் நிர்வாகிகளை நினைத்தால், பாவமாக இருக்கு" என்று நம்மிடம் தெரிவித்தார் அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கரூர் சாகுல் அமீது.

அ.ம.மு.கவின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்கள் 2000 பேரோடு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். சில தினங்களுக்கு முன்பு கரூர் வந்த அவர், கரூர் மாவட்டம் முழுக்க உள்ள தி.மு.க நிர்வாகிகளைச் சந்தித்தார். இந்நிலையில், வரும் 27-ம் தேதி கரூர் ராயனூர் பெட்ரோல் பங்கிற்கு முன்பாக உள்ள திடலில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார். அந்த விழாவில் வைத்து கரூர் மாவட்ட அ.ம.மு.கவினர், கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள், மேட்டூர் பகுதியில்  பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் என ஒரு லட்சம் பேரை தி.மு.கவில் இணைக்கும் வகையில், பிரமாண்டமாகப் பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரம் சொல்கிறது.

இந்நிலையில்தான், செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பேசிய அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் கரூர் சாகுல் அமீது, ``தி.மு.க-வில் கரூர் துணை சேர்மன் பதவி கொடுக்கலைன்னுதான் அப்போதைய கரூர் ஒன்றிய சேர்மனாக இருந்த தி.மு.கவைச் சேர்ந்த விஜயலட்சுமி ராமசாமியோடு வந்து 2000-ல் அ.தி.மு.கவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. ஆனால், `தி.மு.க-வில் இருந்தெல்லாம் நான் அ.தி.மு.க-வுக்கு வரவில்லை. சுயேச்சையாக ஒன்றிய கவுன்சிலராகி, அதன்மூலம் அ.தி.மு.க-வுக்கு வந்தேன்'ன்னு கூசாமல் பொய் சொன்னார். அதைவிட, தி.மு.க-வில் இணைஞ்சப்ப, `நான் 2000-ல் கரூர் சின்னசாமி மூலமாகத்தான் அ.தி.மு.க வந்தேன்'ன்னு அடுத்த பொய்யைக் கட்டவிழ்த்துவிடுகிறார். என் தலைமையில், ஜெயலலிதாவிடம் தேதி வாங்கி மாவட்டச் செயலாளராக இருந்த நான்தான் அவரை அ.தி.மு.கவில் சேர்த்தேன். ஆனா, பிளேட்டை மாத்துறார்.

அதேபோல், என் மாவட்டச் செயலாளர் பதவி 2000 ம் வருஷம், 4வது மாசம் பறிபோக காரணமாக இருந்தார் கரூர் சின்னசாமி. அப்போது அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக அவர் இருந்தார். அவரே செந்தில் பாலாஜியின் அரசியல் உள்ளடிகளைத் தாங்க முடியாமல்தான் தி.மு.க போனார். நான் மறுபடியும் போராடி அப்போ எம்.ஜி.ஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கினேன். 2005-ல் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அன்றைக்குக் கரூர் மருத்துவமனைகளில் பிறந்த 23 குழந்தைகளுக்கு தலா அரை கிராம் மோதிரம், கொலுசு ஒன்று அணிவித்தேன்.

இப்படித் தமிழகத்தில் முதன்முதலில் செய்தது நான் மட்டுமே. இதனால், ஜெயலலிதாவிடம் நெருங்கி மறுபடியும் மாவட்டச் செயலாளர் ஆகிவிடுவேன் என்று பயந்த செந்தில் பாலாஜி, இளவரசி மூலமா என்னைப் பற்றி ஜெயலலிதாவிடம் கட்டுக்கதைகளை இட்டுக் கட்டி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் பதவியைப் பறிக்க வைத்தார். இப்படிதான் முன்னேறுவதற்குத் தன்னை வளர்த்தவர்களையே குப்புறத் தள்ளக்கூடியவர். பதவி சுகம் அனுபவிக்க எந்த விலையையும் கொடுப்பார்; எந்தக் கட்டத்துக்கும் போவார். தி.மு.க நிர்வாகிகள் பாவம். என்ன பாடுபடபோறார்களோ. வாய்ப்புக் கிடைத்தால் ஸ்டாலினுக்கேகூட குழி பறிக்கவும் தயங்கமாட்டார்" என்றார் அதிரடியாக!.