Published:Updated:

‘கணினி கண்காணிப்பு மோசமான உள்நோக்கம்!’ - மோடியைச் சாடிய திருமாவளவன்

‘கணினி கண்காணிப்பு மோசமான உள்நோக்கம்!’ - மோடியைச் சாடிய திருமாவளவன்
‘கணினி கண்காணிப்பு மோசமான உள்நோக்கம்!’ - மோடியைச் சாடிய திருமாவளவன்

`கணினியைக் கண்காணிக்க உளவுத்துறைக்கு அதிகாரம் வழங்கியிருப்பது மத்திய அரசின் மோசமான உள்நோக்கம்’ என்று திருமாவளவன் சாடினார்.

வேலூரில் இன்று நடைபெற்ற வி.ஐ.டி பல்கலைக் கழக வேந்தர் விசுவநாதனின் 80-வது (முத்துவிழா) பிறந்தநாள் விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு விசுவநாதனை வாழ்த்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், ``முன்னாள் துணை வேந்தரும் எழுத்தாளருமான அறவாணன் மறைவு பேரிழப்பாகும். அரசு மரியாதையுடன் அவரின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும். அறவாணனின் வரலாற்று ஆய்வு நூல்களை அரசுடைமையாக்க வேண்டும். குட்கா விவகாரத்தில் உயர்நீதிமன்றமே சில வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறது.


அதனடிப்படையில், குட்கா விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும். இப்படிச் செய்வதால் ஜனநாயகம் மற்றும் ஆட்சி நிர்வாகத்துக்கு நல்லது. மதுக்கடைகளை மூடக்கோருவது எங்களது நீண்ட நாள் கோரிக்கை. ஆனால், ஆட்சியாளர்கள் தொடர்ந்து மதுக்கடைகள் மற்றும் சொகுசு பார்களை திறக்கிறார்கள். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததை வரவேற்கிறோம்.கணினியைக் கண்காணிக்கும் அதிகாரத்தை உளவு அமைப்புகளுக்கு வழங்கியிருப்பது அநாகரிகம். மோசமான உள்நோக்கத்தோடு மத்திய அரசு இந்த அதிகாரத்தை உளவு அமைப்புகளுக்கு வழங்கியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்’’ என்றார்.