வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (24/12/2018)

கடைசி தொடர்பு:11:35 (24/12/2018)

``பிரதமர் மோடியை சாடிஸ்ட் என்று சொன்னது இதற்காகத்தான்” மு.க.ஸ்டாலின் கூறும் விளக்கம்

பிரதமர் மோடியை சாடிஸ்ட் என்று சொன்னதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான மஸ்தானின் மகன் திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடியை சாடிஸ்ட் என்று சொன்னேன். நான் அப்படிச் சொன்னதற்கு பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

கருணாநிதி

ஆனால், அதற்குக் காரணம் இருக்கிறது. ஒகி, வர்தா மற்றும் கஜா புயல்கள் தமிழகத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கஜா புயலில் மட்டும் 65 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதற்காகப் பிரதமர் மோடி ஏதாவது இரங்கல், வருத்தம் தெரிவித்தாரா? ஆனால் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஏதேனும் துயரச் சம்பவம் நடந்தால் உடனே இரங்கல் தெரிவிக்கிறார்.

திமுக

அமெரிக்கா, போர்ச்சுகல் போன்ற வெளிநாடுகளில் நடக்கும் இயற்கை பேரிடர்களுக்காகக்கூட வருந்துகிறார் பிரதமர். ஆனால், தமிழகத்தின்  புயல் பாதிப்பு நிவாரணமாக 18,000 கோடி கேட்டதற்கு 300 கோடி ரூபாய் வழங்குவதாகக் கூறுகிறார். தமிழகத்தைக் கேவலப்படுத்தும் பிரதமராக மோடி இருக்கிறார்.

திருமணம்

`நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக' என்று கருணாநிதி அன்று அழைத்தார். சோனியாவை அழைத்து `இந்திராவின் மருமகளே வருக இந்தியாவின் திருமகளே வெல்க' என்றார். தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், `ராகுல் அவர்களே வருக நிலையான ஆட்சி தருக' என நான் முன்மொழிந்து கேட்டுக்கொண்டேன்.

ஸ்டாலின்

நான் பேசியது தவறு என்று எந்த தலைவர்களும் சொல்லவில்லை. தமிழகத்தில் பி.ஜே.பி தலைதூக்காமல் இருப்பதுபோல மத்தியிலும் தலைதூக்கக் கூடாது என்று மக்கள் நினைக்கிறார்கள். மத்திய அரசுக்குத் துதி பாடுகின்ற எடுபிடி எடப்பாடி ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட கேடுகெட்ட ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் இரண்டும் சேர்ந்து வந்தாலும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்ற சூளுரையை நாம் ஏற்போம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க