வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (24/12/2018)

கடைசி தொடர்பு:16:25 (24/12/2018)

'தலைவராகப் பொறுப்பேற்று 119 நாள்களில்...!' - ஸ்டாலினுக்கு சுட்டிக் காட்டிய துரைமுருகன்

"இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஸ்டாலின். அவரை விஞ்சும் தலைவர்களே தமிழ்நாட்டில் இல்லை. அதிலும், எட்டிப் பார்க்கும் தூரம் வரையில் அவருக்கு நிகரான தலைவர்களே இல்லை" என்றார் துரைமுருகன்.

'தலைவராகப் பொறுப்பேற்று 119 நாள்களில்...!' - ஸ்டாலினுக்கு சுட்டிக் காட்டிய துரைமுருகன்

ராட்சிதோறும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தும் வகையில், இன்று கட்சிப் பொறுப்பாளர்களை முடுக்கிவிட்டிருக்கிறார் ஸ்டாலின். `தலைவராகப் பொறுப்பேற்று 119 நாள்களில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் ஸ்டாலின்' என நெகிழ்ந்திருக்கிறார் துரைமுருகன். 

அண்ணா அறிவாலயக் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க-வின் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத் தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, `கஜா புயலால் உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்' என அறிவித்தார் ஸ்டாலின். 

ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

இதன்பிறகு, கஜா பேரிடர் நிதியை மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும்; காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளின் கடன், மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; நிவாரண உதவிகளை விரைவில் வழங்க அ.தி.மு.க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து, எந்தக் காரணம் கொண்டும், எவ்வித அழுத்தத்துக்கும் அடிபணிந்து மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்குத் தமிழக அரசு அனுமதித்துவிடக் கூடாது; காவிரியில் தமிழக உரிமையைப் பாதுகாத்திடும் நோக்கில் இப்போது கொடுத்திருக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் அழுத்தத்தை மத்திய பா.ஜ.க அரசுக்கு அளிக்க வேண்டும் என இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஸ்டாலினுடன் துரைமுருகன்

கூட்டத்தின் நோக்கம் குறித்து தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தலா 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் செயல்பாடுகளில் பெரிதாக எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. பூத் கமிட்டி அமைப்பதிலேயே பல்வேறு குளறுபடிகள் நிலவின. அவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்படி, இன்றைய கூட்டத்தை நடத்தி முடித்தார் தலைவர் ஸ்டாலின். `ஊராட்சி வரையிலும் தெருத் தெருவாகச் சென்று மக்களைச் சந்தித்துப் பேச வேண்டும்' என்பதுதான் இன்றைய கூட்டத்தின் ஹைலைட்.

கூட்டம் தொடங்கியபோது பேசிய ஸ்டாலின், 'அனைவரும் களத்துக்குப் போக வேண்டும். `மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம். மக்கள் மனதை வெல்வோம்' என்பதுதான் நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். தொகுதி பொறுப்பாளர்கள் ஊராட்சிகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள கிளைக் கழக செயலாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளைவிடவும் கிராமம் கிராமமாகச் செல்லுங்கள். ஒவ்வோர் ஊரிலும் இருக்கின்ற மண்டபத்திலோ தெருவிலோ நின்று பேசுங்கள். மைக் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிராமங்களில் வேலை முடிந்து திரும்புகிறவர்களை ஒருங்கிணைத்து, அவர்களோடு அமர்ந்து பேச வேண்டும். அவர்களது பிரச்னைகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்களோடு இரண்டறக் கலந்து ஐக்கியமாகிவிட வேண்டும். கிராமம்தோறும் கட்சியை வளர்க்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்' எனக் கூறிவிட்டு அமர்ந்தார். 

ஸ்டாலின் நடத்திய கூட்டம்

இதையடுத்து, தொகுதி பொறுப்பாளர்களையும் பேச வைத்தார் ஸ்டாலின். அவர்கள் தெரிவித்த கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டார். சிலர், கூட்டத்தின் நோக்கம் தெரியாமல் பேசினாலும் அவர்கள் மீது எந்தவிதக் கோபத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை. 12,617 ஊராட்சிகளையும் பொறுப்பாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். குறைவான ஊராட்சிகள் இருக்கும் பகுதிகளுக்கும் ஆள்களை நிரப்பினார் ஸ்டாலின். கூட்டத்தின் முடிவில் துரைமுருகன் பேசினார். அவர் பேசும்போது, 'கலைஞரைவிட மிகத் திறமையானவராக இருக்கிறார் ஸ்டாலின். அவரைப் போலவே எந்தவித இடைவெளியும் இல்லாமல் செயல்படுகிறார். ஒவ்வொரு வார்த்தைகளையும் பார்த்துப் பார்த்துப் பேசுகிறார். கூட்டம் தொடர்பான தயாரிப்புப் பணியின்போது, `மக்களிடம் செல்வோம், மக்களை வெல்வோம்' என்றுதான் வார்த்தைகள் இருந்தன. `மக்களை வெல்வோம்' என்ற வார்த்தைகளை இடம்மாற்றி, `மக்கள் மனதை வெல்வோம்' என மாற்றிப் போட்டார் ஸ்டாலின்' என ஆச்சர்யப்பட்டவர், 

ஸ்டாலின்

'இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஸ்டாலின். அவரை விஞ்சும் தலைவர்களே தமிழ்நாட்டில் இல்லை. அதிலும், எட்டிப் பார்க்கும் தூரம் வரையில் அவருக்கு நிகரான தலைவர்களே இல்லை. தலைவராக அவர் பதவியேற்று 119 நாள்கள்தான் ஆகின்றன. தலைவர் இடத்தை நிரப்ப யாரும் இல்லையே என்ற எந்த ஏக்கமும் கட்சிக்காரர்கள் மத்தியில் இல்லை. கலைஞர் ஓர் இமயம்தான், ஆனால், அவரைவிட வேகமாகப் பணியாற்றுகிறார் ஸ்டாலின். கலைஞர் இல்லாத இந்த 120 நாள்களில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் ஸ்டாலின்' என நெகிழ்ந்தபடியே பேசி அமர்ந்தார். இன்றைய கூட்டத்தில் ஸ்டாலின் கூறிய திட்டங்களின்படி செயல்பட்டால், கிளைக்கழகம் வரையில் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு உயரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்கேற்றபடி பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார் விரிவாக.