Published:Updated:

‘புறக்கணிக்கப்பட்ட பன்னீர் செல்வம் படம்!’ -அரசு பொருட்காட்சியில் கொந்தளித்த ஆதரவாளர்கள்

‘புறக்கணிக்கப்பட்ட பன்னீர் செல்வம் படம்!’ -அரசு பொருட்காட்சியில் கொந்தளித்த ஆதரவாளர்கள்
‘புறக்கணிக்கப்பட்ட பன்னீர் செல்வம் படம்!’ -அரசு பொருட்காட்சியில் கொந்தளித்த ஆதரவாளர்கள்

வேலூரில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சி அரங்குகளில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இடம் பெறாததால், அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் கொந்தளித்தனர்.

தமிழக அரசின் திட்டங்களைப் பொதுமக்கள் பார்த்து பயன்பெறுவதற்காக, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், வேலூரில் உள்ள குறள்-சிலம்பு தியேட்டர் எதிரே அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று மாலை பொருட்காட்சியைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமைதாங்கினார். அரசு பொருட்காட்சியில் 27 துறைகளின் திட்டங்கள் குறித்தும், அரசின் சாதனைகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளில், ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. 

அரங்குகளின் முகப்பு மற்றும் உட்புறப் பகுதியில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வீரமணி, நிலோஃபர் போன்றோர் நலத்திட்ட உதவிகள் வழங்குவதைப் போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.  ஓர் இடத்தில்கூட துணை முதல்வரும், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இருப்பது கண்களுக்குத் தென்படவில்லை. இதனால், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் முகம் அதிருப்தியில் இறுகின. அமைச்சர்கள் வீரமணி, கடம்பூர் ராஜுவை திட்டியபடி முணுமுணுத்தனர். ‘‘எடப்பாடியை விட எங்கள் தலைவர் ஓ.பி.எஸ் எந்த விதத்தில் தரம் குறைந்துவிட்டார். அரங்குகளின் பேனரில் ஒரு பக்கம் எடப்பாடி படம் இருந்தால், மறுபக்கம் ஓ.பி.எஸ் படம் வைத்திருக்க வேண்டும். இதுதான் துணை முதல்வருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையா?’’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்,  எடப்பாடி ஆதரவாளர்கள் சிலரிடம் ஆதங்கப்பட்டுக் கடிந்துகொண்டனர்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத அமைச்சர்கள் இருவரும், அரங்குகளை அண்ணாந்துபார்த்துவிட்டு, ரிப்பன் வெட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சங்கர், கலெக்டர் ராமன் மற்றும் எஸ்.பி பிரவேஷ்குமார், எம்.எல்.ஏ-க்கள் சு.ரவி, லோகநாதன் உட்பட அ.தி.மு.க-வினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பெரும்பாலும் பங்கேற்கவில்லை.