``தம்பிக்காக அண்ணன் செய்த பாலிட்டிக்ஸ்” - பன்னீர்செல்வத்தின் பலே திட்டம்! | OPS and his brother politics, an analysis

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (25/12/2018)

கடைசி தொடர்பு:19:28 (25/12/2018)

``தம்பிக்காக அண்ணன் செய்த பாலிட்டிக்ஸ்” - பன்னீர்செல்வத்தின் பலே திட்டம்!

``தன் தம்பிக்காக அண்ணன் செய்த இந்த அரசியலை, அவருடைய ஆதரவாளர்களே ரசிக்கவில்லை. ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி செல்லக்கூடாது என்பதற்காக, இவர் பின்னால் நாங்கள் அணிவகுத்தோம். இப்போது ஒரு கும்பல் பிடியில் இந்தக் கட்சி சிக்கியுள்ளது!”

``தம்பிக்காக அண்ணன் செய்த பாலிட்டிக்ஸ்” - பன்னீர்செல்வத்தின் பலே திட்டம்!

`` `ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து கட்சியை மீட்போம்' என்று தர்மயுத்தம் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான், இப்போது தனது குடும்பத்துக்காகத் தனது ஆதரவாளர்களைக் காவுகொடுக்கத் தயாராகிவிட்டார்” என்று கமென்ட் அடிக்கிறார்கள், அ.தி.மு.க-வினர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, ஓ.ராஜா மதுரை ஆவின் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றதால், கட்சியிலிருந்து சில தினங்களுக்கு முன்பு நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவர் நீக்கம் குறித்த அறிவிப்புக் கடிதத்தில் ஒருங்கிணைப்பாளரும், ராஜாவின் சகோதரருமான பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டிருந்தனர். இதைப் பார்த்த அ.தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். கட்சி விதியை மீறியதற்காகச் சொந்த தம்பியையே கட்சிவிட்டு நீக்கப் பன்னீர் ஒப்புக்கொண்டது குறித்து சிலாகித்துப் பேசப்பட்டது. 

இந்த நிலையில், ராஜா நீக்கம் செய்யப்பட்ட மூன்று நாள்கள் கழித்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலிருந்து மீண்டும் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பைப் பார்த்த அ.தி.மு.க-வினர், அதிர்ச்சியடைந்தனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா கட்சித் தலைமைக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியதால், அவர் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்படுவதாகத்  தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில்தான், 'பன்னீர்செல்வம் பலே பாலிடிக்ஸ் செய்துவிட்டார்' என்று நக்கலாகச் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள், அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள்.

இதுகுறித்து அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது, ``ராஜா நீக்கம் செய்யப்பட்டதற்கு ஆவின் சேர்மன் பதவி மட்டும் காரணம் அல்ல. அவர்மீது சமீபத்தில் எழுந்த பல குற்றச்சாட்டுகளும் காரணம். குறிப்பாக, தினகரன் தரப்புடன் அவர் தொடர்ந்து நட்பில் இருந்துவந்தார் என்ற தகவல் எடப்பாடியின் காதுகளுக்கு வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், ஆவின் சேர்மன் பிரச்னை எழுந்ததும் மதுரையிலிருந்து அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஒரு மாவட்டத்தின் அமைச்சராக நான் இருக்கிறேன். எனக்கு எந்த மரியாதையும் இல்லையா? என்னை மீறி அவர் ஒரு பதவிக்கு வந்துள்ளார். அவரை, கட்சியைவிட்டு நீக்காவிட்டால் நான் வேறு முடிவு எடுக்க வேண்டிவரும் என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்டு முதல்வர் தரப்பு கொஞ்சம் 'ஷாக்' ஆகி பன்னீரிடம் பேசியுள்ளார். பன்னீர், தன் தம்பியை நீக்கம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. 

பன்னீர்செல்வம்

ஒருகட்டத்தில், முதல்வர் அலுவலகத்திலிருந்து ராஜாவை நீக்க, கடிதம் தயார்செய்து அதைப் பன்னீரிடம் அனுப்பிக் கையெழுத்திடச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். பன்னீர், முதல்வரிடம் எவ்வளவோ பேசியும் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு, வேறு வழியின்றி கையெழுத்து போட்டுள்ளார். அதற்குப்பின், முதல்வரிடம் தம்பியை மீண்டும் கட்சிக்குள் இணைப்பது குறித்து பேசியுள்ளார். அப்போது முதல்வர், 'நீங்கள் சொன்னதும் எனது பகுதியைச் சேர்ந்த கே.சி.பழனிசாமியை நீக்கினேன். அவரைச் சேர்த்துக்கொள்ள இதுவரை நீங்கள் பேசவில்லை. அவர்தான் இப்போது நமக்குச் சிக்கலை ஏற்படுத்திவருகிறார். அவரை, கட்சிக்குள் சேர்க்க நீங்கள் பேசுங்கள். அதன்பிறகு, உங்கள் தம்பியை இணைத்துக்கொள்ளலாம்' என்று சொல்லியுள்ளார். அதன்பிறகு, பன்னீர் தரப்பிலிருந்து பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடந்தாகக் கூறப்படுகிறது. ஆனால், கட்சிக்குள் சேருவதற்கு பழனிசாமி வைத்த நிபந்தனைகளைப் பன்னீரால் நிறைவேற்ற முடியவில்லை. 

அதன்பிறகு, அடுத்தகட்டமாக முதல்வரிடம் பேசியுள்ளார் பன்னீர். அப்போது முதல்வர் தரப்பில் சில விஷயங்களைச் சொல்லி, `இதற்கு நீங்கள் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்' என்று சொன்னதும், எந்த மறுப்பும் சொல்லாமல் ஒ.கே.சொல்லியுள்ளார். பன்னீர் தர்மயுத்தம் தொடங்கியபோது அவரை ஆதரித்த முதல் மாவட்டச் செயலாளர் விழுப்புரம் லட்சுமணன். ஆனால், அந்த மாவட்டச் செயலாளர் பதவிமீது அமைச்சர் சி.வி.சண்முகம் நீண்டநாள்களாகக் கண்வைத்திருந்தார். `மாவட்டச் செயலாளராக சண்முகத்தை நியமிக்க வேண்டும்' என்று சொன்னதும் தனது ஆதரவாளரைக் காவு கொடுத்துவிட்டார் பன்னீர். `கட்சியில் மனுக்களைச் சரிபார்க்க ஐவர் குழு நியமிக்க வேண்டும்' என்று எடப்பாடி தரப்பில் சொன்னதும், அதை ஒப்புக்கொண்டுள்ளார் பன்னீர். 'ஒருவருக்கு ஒரு பதவி' என்று பேசிய பன்னீர், அந்த ஐவர் குழுவில் வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஏற்கெனவே இரண்டு பதவிகளில் இருந்துவரும் நேரத்தில் மூன்றாவது பதவிக்கும் ஒப்புக்கொண்டுள்ளார். `தர்மபுரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தனது ஆதரவாளருக்கு வாய்ப்பு  வேண்டும்' என்று கேட்டதற்கு ஓ.கே. சொல்லியுள்ளார் பன்னீர். இந்த டீலிங் எல்லாம் முடிந்த பிறகு, அமைச்சரவைக் கூட்டத்தில் செல்லுார் ராஜுவிடம் சமாதானம் வேறு பேசியுள்ளார், பன்னீர்செல்வம். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான், 'ராஜா நீக்கம் ரத்து' என்று அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். அந்த அறிவிப்பு வெளியான நேரத்தில் லட்சுமணன் பதவி பறிப்பும், ஐவர் குழு நியமனம் குறித்த அறிவிப்புகளும் வெளியாயின" என்கின்றனர், அவர்கள்.

``தன் தம்பிக்காக அண்ணன் செய்த இந்த அரசியலை, அவருடைய ஆதரவாளர்களே ரசிக்கவில்லை. ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி செல்லக்கூடாது என்பதற்காக, இவர் பின்னால் நாங்கள் அணிவகுத்தோம். இப்போது ஒரு கும்பல் பிடியில் இந்தக் கட்சி சிக்கியுள்ளது” என்கிறார், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி. 

பவ்விய பன்னீர்செல்வத்தின் பாலிடிக்ஸ் பார்த்து, அரண்டுபோய்க் கிடக்கிறார்கள், அ.தி.மு.க-வினர். 


டிரெண்டிங் @ விகடன்