Published:Updated:

`தமிழ் மீது மோடிக்கு தீர்க்க முடியாத கோபம்' - கே.பாலகிருஷ்ணன் காட்டம்!

`தமிழ் மீது மோடிக்கு தீர்க்க முடியாத கோபம்' - கே.பாலகிருஷ்ணன் காட்டம்!
`தமிழ் மீது மோடிக்கு தீர்க்க முடியாத கோபம்' - கே.பாலகிருஷ்ணன் காட்டம்!

கூலி உயர்வு கேட்டுப் போராடிய தொழிலாளர்கள், உயிருடன் தீயில் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்ட  கீழவெண்மணித் தியாகிகளின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் இருந்து, தற்போதைய நாகை மாவட்டத்தில் 30 சதவிகித விளைநிலங்களைத் தன்னகத்தே கொண்டு அமோக விளைச்சல் தரும் பூமி, கீழவெண்மணி. 1960-களில், தஞ்சையில் பண்ணையார்கள், நிலச்சுவான்தார்களின் ஆதிக்கம் வேரூன்றி வளரத் தொடங்கியிருந்த காலம். பண்ணையார்கள், தொழிலாளர்களிடம் இரக்கமில்லாமல் வேலை வாங்கினர். எதிர்த்தால் கட்டிவைத்து அடித்து உதைத்தனர். ஆபாச வார்த்தை அர்ச்சனைகளால் பெண்கள் கூனிக் குறுகிவிடுவர். எதிர்த்தால் பிழைப்பு கெட்டுவிடும். 

இந்த நிலையில்தான், 1960களில் இந்திய - சீனப் போரால் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது, கீழவெண்மணி கிராமத்தையும் விட்டுவிடவில்லை. பஞ்சத்தால் குறைந்த கூலியுடன் பிழைப்பை நடத்த முடியாது என்பதால் கூலி உயர்வு கேட்டனர் தொழிலாளர்கள். மறுக்கிறார் கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பண்ணையார். இதை எதிர்த்து, தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால், கீழவெண்மணியில் கலவரம் மூண்டது. 1968 டிசம்பர் 25 அன்று, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க,  கீழவெண்மணி மக்களுக்கோ அன்று  இருண்ட நாளாக அமைந்தது. 'தனக்கு அடிமையாக இருந்தவர்கள் தன்னை எதிர்ப்பதா...' என்று ஆத்திரம் கொண்ட பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு, தனது அடியாட்களுடன் பெட்ரோல் கேன்கள், நாட்டுத் துப்பாக்கி சகிதம் வந்திறங்கினார். 

இதில்  சுடப்பட்டவர்கள், கிட்டத்தட்ட 10 பேருக்கு மேல் இருப்பார்கள். இதைக் கண்டு பயந்து நாலா பக்கமும் சிதறி ஓடி, வாய்க்கால் வரப்புகளில் ஒளிந்துகொண்டனர் தொழிலாளர்கள். அனைத்து குடிசைகளும் எரிக்கப்பட்டன. நிராயுதபாணியாக நிற்கும் அப்பாவி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள், உயிரைக் காத்துக்கொள்ள தெரு மூலையில் உள்ள ராமையா என்பவரின் சிறிய கூரைவீட்டில் ஓடி ஒளிந்தனர். வெறிபிடித்து அலைந்தவர்கள், அந்த வீட்டைக் கண்டுபிடித்து, வீட்டை வெளியே தாழிட்டு, பெட்ரோலை ஊற்றி எரித்தனர். வெளியில் நின்று அழுத மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் தீயின் உள்ளே தள்ளினர். தீயின் கோர நாக்குகளுக்கு சற்று நேரத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 6 ஆண்கள் என 44 உயிர்கள் இரையானது. 

வெண்மணிப் படுகொலை சம்பவத்தின் 50-வது  ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, வெண்மணி கிராமத்தில்  எரிக்கப்பட்ட ராமையாவின் குடிசை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள   நினைவு ஸ்தூபியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் ஜி.ராமகிருஷ்ணன், வாசுகி உமாநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு செங்கோடியை ஏற்றிவைத்து, மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைபுரிந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், அணி அணியாக வருகைதந்து வீரவணக்க கோஷங்கள் எழுப்பியபடி மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சி.பி.எம்.மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், “கஜா புயல் பாதித்த கிராமங்களில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் விவசாயிகள், தற்போது ஒருவேளை சோற்றுக்கு கை ஏந்துகிற சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு கஜா  புயல் நிவாரணத்தை வழங்க வேண்டும். கிராமப் புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராமப் பெண்களை மிரட்டிவருகின்றன. கல்விக் கடன், விவசாயக் கடன் அனைத்தையும் ரத்துசெய்ய வேண்டும். கஜா புயல் நிவாரணம் வழங்காத தமிழக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து, வருகின்ற 2-ம் தேதி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டங்கள் நடைபெறும்" என்று தெரிவித்தார். 

மேலும், ``ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை ஆளத் தகுதியற்றவர். தமிழகத்தில் பா.ஜ.க வளராமல் இருக்க தமிழிசை சௌந்தரராஜன் ஒரு ஆள் போதும். ஹெச்.ராஜா போன்றோர் தமிழகத்தில் இருக்கும் வரை பா.ஜ.க வளராது. தமிழகத்தில் அவர்கள் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால், கஜா புயல் நிவாரணம் வழங்காமல் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இந்தி படித்தால்தான் சேரமுடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால், தமிழகத்தைச் சேர்ந்த யாரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேரமுடியாது. தமிழ் மீது மோடிக்கு தீர்க்க முடியாத கோபம் உள்ளது" என்றும் அவர் கூறினார்.