Published:Updated:

‘மக்களுக்கு நடந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா’ - கர்நாடக முதல்வரை சுற்றும் சர்ச்சை

‘மக்களுக்கு  நடந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா’ - கர்நாடக முதல்வரை சுற்றும் சர்ச்சை
‘மக்களுக்கு நடந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா’ - கர்நாடக முதல்வரை சுற்றும் சர்ச்சை

நேற்று முன்தினம் மாலை, மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் மாண்டியா மாவட்ட நிர்வாகி பிரகாஷ், சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்த அவர்,  “பிரகாஷ் மிகவும் நல்லவர். அவரை ஏன் கொலைசெய்தார்கள் என்று தெரியவில்லை. அவரைக் கொலைசெய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரக்கமின்றிக் கொல்லுங்கள். சுட்டுத்தள்ளுங்கள், எந்தப் பிரச்னையும் வராது” என போனில் யாருடனோ பேசியுள்ளார். 

அவர் பேசுவதை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது அது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இவரின் கருத்துக்கு கடும்  கண்டனம் தெரிவித்துவருகின்றனர். 
இதையடுத்து, தான் பேசியது உத்தரவு இல்லை; அது அந்த நேரத்தில் இருந்த கோபத்தின் வெளிப்பாடு என விளக்கமளித்தார் குமாரசாமி. இருந்தும், அவர் மீதான விமர்சனங்கள் இன்னும் ஓயவில்லை.

இந்நிலையில், இறந்த பிரகாஷின் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், “ நான் விஜயபுரா மாவட்டத்தில் ஒரு ஆய்வுக்காகச் சென்றிருந்தேன். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய உடனேயே பிரகாஷ் இறந்துவிட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதைக் கேட்டதும் நான் அதிர்ந்துபோனேன். அப்போது இருந்த கோபத்தில் அவ்வாறு பேசிவிட்டேன். 

தற்போதைய காலகட்டத்தில், கொலையாளிகளுக்கு எளிதாக ஜாமீன் கிடைத்துவிடுகிறது. அந்த தைரியத்தில், அவர்கள் எந்தப் பயமும் இன்றி சுற்றிவருகிறார்கள். இந்த ஒரு வழக்கில் மட்டுமல்ல, இதே போல பல வழக்குகள் உள்ளன. கொலையாளிகள் ஜாமீனில் வெளியே வந்து, இதே போன்று ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்றுதான் அப்படிப் பேசினேன். இது தொடர்பாக விசாரணை நடத்த காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். 

முதல்வரின் இந்தப் பேச்சை முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் கர்நாடக பா.ஜ.க-வினரும் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். “இதே போன்ற கொலை பொதுமக்களுக்கு நடந்தால், முதல்வர் அமைதியாக இருந்திருப்பார். தன் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால்தான் இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்” என பா.ஜ.க-வினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘ ஒரு மாநிலத்தின் முதல்வரே இவ்வாறு நடந்துகொண்டால், மற்றவர்களுக்கு மாநிலத்தின்மீது வெறுப்பு உணர்வுதான் வரும். கோபத்தில் பேசிவிட்டேன் என்று முதல்வர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர், இதற்காக கர்நாடக மக்களிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று எடியூரப்பா கூறியுள்ளார்.