Published:Updated:

`சிறுபான்மை மக்களைப் பழிவாங்கும் நோக்கத்தில் மசோதா' - முத்தலாக்கை எதிர்க்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

`சிறுபான்மை மக்களைப் பழிவாங்கும் நோக்கத்தில் மசோதா' - முத்தலாக்கை எதிர்க்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
`சிறுபான்மை மக்களைப் பழிவாங்கும் நோக்கத்தில் மசோதா' - முத்தலாக்கை எதிர்க்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

நாடாளுமன்றத்தின் மக்களவையில் நாளை முத்தலாக் சட்டம் தொடர்பாக மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மதச்சார்பற்ற கட்சிகள் வலுவாக எதிர்க்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா பா.ஜ.க, சிவசேனை தவிர அனைத்து அரசியல் கட்சித் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ``உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையைச் சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கியது. இச்சூழலில் முத்தலாக் முறையால் திருமணம் பந்தம் முறியாது என்ற நிலையில் அதை குற்றவியல் தொடர்பான செயல் என்று சட்டமியற்றுவது நகைப்பிற்குரியது.  

முஸ்லிம் பெண்கள் மீதமான அக்கரையை விட முஸ்லிம் சமூகத்தை பலி வாங்கும் நோக்கத்தில்தான் மோடி அரசு முத்தலாக் என்று அழைக்கப்படும் `முஸ்லிம் பெண்கள் (திருமணம் தொடர்பான உரிமைகள்) மசோதா 2018’ ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயலுகின்றது. சென்ற ஆண்டு இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் இந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற இயலாமல் அது நிலுவையில் உள்ளது. இச்சூழலில் நாடாளுமன்ற மரபுகளை மீறி இம்மசோதாவை அவசரச் சட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்தது. தற்போது அந்த அவரச சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற மத்திய அரசு முயலுகிறது. 

மோடி அரசு கொண்டு வந்துள்ள இம்மசோதாவில் முத்தலாக் சொல்லும் கணவன் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் உரிமையியல் (சிவில்) தொடர்பான ஒரு நிகழ்வு. இதைக் குற்றவியலாக மாற்றியிருப்பது சட்டநெறிமுறைகளுக்கு முரணானது. அபாயகரமான ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுவது, சமூகங்களுக்கிடையே பகைமையை வளர்த்தல், நாணயங்களைக் கள்ளத்தனமாக தயாரிக்கும் கருவியை உற்பத்தி செய்வது அல்லது விற்பனை செய்வது, கள்ள நாணயங்களை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வது, எந்த ஒரு வகுப்பாருடைய மத அல்லது மத நம்பிக்கையை வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் புண்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் மூன்றாண்டு சிறைத் தண்டனை என்று குறிப்பிட்டுள்ளது. இந்தக் கொடிய குற்றங்களை ஒரு கணவன் தனது மனைவியை முத்தலாக் முறையில் விவாகரத்து அளிப்பதுடன் சமப்படுத்துவது எப்படி நியாயமாகும்?

முத்தலாக் முறையில் விவகாரத்து செய்பவருக்கு மூன்று ஆண்டு தண்டனை என்பது வரம்புமீறிய, அறிவுக்குப் பொருந்தாத தண்டனையாகும். முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மோடி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முத்தலாக் மசோதா அரசமைப்புச் சட்டத்தின் 14ம் பிரிவுக்கு எதிராக அமைந்துள்ளது. குற்றத்தின் தன்மைக்குப் பொருந்தாத மிதமிஞ்சிய தண்டனை அளிக்கப்பட்டதால்தான் உச்சநீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ஐ ரத்து செய்தது.

மரபுகளை மீறி நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் பரிசீலனையிலிருந்த ஒரு மசோதாவை அவசரச் சட்டமாக இயற்றி, சிறுபான்மை மக்களைப் பழிவாங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீவிரமாக எதிர்ப்பதுடன் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்" என அனைத்துக் கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.