Published:Updated:

`அண்ணா அறிவாலய செட்டப்பில் மேடை; வானுயர்ந்த கட்-அவுட்கள்’- கரூரை அதகளப்படுத்தும் செந்தில் பாலாஜி

`அண்ணா அறிவாலய செட்டப்பில் மேடை; வானுயர்ந்த கட்-அவுட்கள்’- கரூரை அதகளப்படுத்தும் செந்தில் பாலாஜி
`அண்ணா அறிவாலய செட்டப்பில் மேடை; வானுயர்ந்த கட்-அவுட்கள்’- கரூரை அதகளப்படுத்தும் செந்தில் பாலாஜி

தி.மு.க-வுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளை ஸ்டாலினை வைத்து கரூரில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் ஒருலட்சம் பேரை தி.மு.க-வில் இணைக்க இருக்கிறார். இதற்காக, தடபுடல் ஏற்பாட்டைச் செய்துவருகிறார். 


 அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. `அ.தி.மு.க-வும், அ.ம.மு.க-வும் இணையப்போகிறது', 'டி.டி.வி.தினகரனோடு சில விஷயங்களில் முட்டல் மோதல்' என்று எழுந்த தகவல்களால், இந்த மாத ஆரம்பத்தில், 'செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு போகப்போகிறார்' என்ற பரபரப்பு எழுந்தது. ஆரம்பத்தில், 'இது வெறும் வதந்திதான்' என்ற அளவில் இருந்த இந்தத் தகவல், அதன்பிறகு 'உண்மைதான்' என்ற நிலைக்கு மாறியது. டி.டி.வி.தினகரன் எவ்வளவோ செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்த முயன்றும், கடந்த 14-ம் தேதி, 2,000 ஆதரவாளர்களோடு சென்று ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் தி.மு.க-வில் ஐக்கியமானார்.

அதைத் தொடர்ந்து, நாளை (27-ம் தேதி) கரூர் ராயனூர் சாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, ஒரு லட்சம் பேரை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வில் இணைக்க இருக்கிறார். 'மாவட்டச் செயலாளர் பதவி', 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால், அமைச்சர் பதவி உள்ளிட்ட உத்தரவாதங்களைப் பெற்று, செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, கொங்கு மண்டலத்தில் நமத்துப்போய்க் கிடக்கும் தி.மு.க-வை செந்தில் பாலாஜியை வைத்து பலமாக்க முடியுமா என்று ஸ்டாலின் முயற்சிசெய்ய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தனது முதல் பலத்தை ஸ்டாலின் முன்பு காட்ட, நாளை மாலை நடக்க இருக்கும்

பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த பலத்த ஏற்பாடு செய்துவருகிறார். ஏற்கெனவே, பொதுக்கூட்டம் நடத்துவதில் பிரசித்திபெற்ற முன்னாள் அமைச்சர் திருச்சி கே.என்.நேருவை வைத்து பொதுக்கூட்ட மேடை அமைக்க, பந்தக்கால் நடும் விழாவை நடத்தினார். அப்போது, திராவிடக் கொள்கையை காற்றில் பறக்கவிட்ட செந்தில் பாலாஜி, பந்தக்கால் நடும் விழாவை சிவாச்சாரியார்களை வைத்து மந்திரங்கள் ஓதவைத்து நடத்தினார். அதைத் தொடர்ந்து, விழாவுக்கான ஏற்பாட்டை கே.என்.நேரு நேற்றும் வந்து பார்வையிட்டார். அறிவாலயம் அமைப்பைப் போன்ற மேடை, விழா நடக்கும் இடத்தில் மட்டுமல்லாது, கரூர் முழுக்க ஸ்டாலினுக்கு வானுயர்ந்த கட் அவுட்கள், பதாகைகள், தி.மு.க கொடிகள் எனத் தூள்பரத்திவருகிறார். விழா நடக்கும் இடத்தில் ஒரு லட்சத்துக்கும் மேலான சேர்கள் போடப்பட்டுள்ளன.
 

இந்த நிலையில், நம்மிடம் பேசிய தி.மு.க-வினர் சிலர், ``ஸ்டாலின் முன்பு தனது செல்வாக்கைக் காட்டுவதற்காக இந்த விழாவுக்காக காசை வாறி இறைக்கிறார். ஆனால், ஸ்டாலினுக்கு இரவு எட்டரைக்கு திருச்சியில் ஃப்ளைட். ஏழு மணிக்கெல்லாம் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு கிளம்ப இருப்பதாகச் சொல்றாங்க. ஒருமணி நேரம் அவர் இருந்தாலே அதிகம்ங்கிறாங்க. ஆனா, ஸ்டாலின் ஏதோ இவரது ஏற்பாடுகளை ஆர அமர அமர்ந்து ரசித்துப் பார்ப்பதுபோலவே படாடோபம் பண்ணுகிறார்" என்றார்கள்.