Published:Updated:

கரூரில் செந்தில் பாலாஜி... சென்னையில் விஜயபாஸ்கர்... அதிகார போட்டியில் நடக்கும் விழாக்கள்

கரூரில் செந்தில் பாலாஜி... சென்னையில் விஜயபாஸ்கர்... அதிகார போட்டியில் நடக்கும் விழாக்கள்
கரூரில் செந்தில் பாலாஜி... சென்னையில் விஜயபாஸ்கர்... அதிகார போட்டியில் நடக்கும் விழாக்கள்

சென்னையில் முதல்வர் முன்னிலையில் கரூர் மாவட்ட ம.தி.மு.கவைச் சேர்ந்தவர்களை அ.தி.மு.கவில் இணைக்கும் நிகழ்ச்சி இன்று காலை பத்தரை மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு இன்று கரூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் செந்தில் பாலாஜி நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஓவர்டேக் செய்வதற்காகவே திட்டமிட்டே இன்றே வைத்துள்ளார்' என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி, நம்மிடம் பேசிய கரூர் அரசியலை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், ``கரூர் மாவட்ட அ.தி.மு.க-வில் 2011-16 வரையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்துத்துறை அமைச்சர், கட்சியின் மாவட்டச் செயலாளர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஒருவேளை சிறைத்தண்டனை கிடைத்தால், அடுத்த முதல்வர் ரேஸில் இருந்தார் செந்தில்பாலாஜி. அப்போது கரூர் மாவட்ட எம்.பியாக இருந்த தம்பிதுரையை செந்தில் பாலாஜி கிள்ளுக்கீரையாக நடத்தியதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜியை குப்புறத்தள்ள தம்பிதுரை நாள் பார்த்துக்கொண்டிருந்தார். ஆட்சி முடிவதற்கு ஆறு மாதத்துக்கு முன்பு செந்தில் பாலாஜி வகித்து வந்த அனைத்துப் பதவிகளையும் ஜெயலலிதா பறித்தார்.

`இதுதான் தக்க தருணம்' என்றபடி, தனது ஆதரவாளரான இப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கட்சியின் மாவட்டச் செயலாளராக்கினார். அடுத்து வந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்குக் கரூரில் சீட் வாங்கிக் கொடுத்து, செந்தில் பாலாஜி செய்த உள்ளடி வேலைகளையும் மீறி எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஜெயிக்கவும் வைத்தார். அதோடு, போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியையும் வாங்கிக் கொடுத்தார். இதனால், செந்தில் பாலாஜி நொந்து போனார். தொடர்ந்து, செந்தில்பாலாஜிக்கு இருவரும் நெருக்கடி கொடுத்து வந்ததாகச் சொல்லப்பட்டது. அதன்பிறகு, டி.டி.வி.தினகரனோடு அ.ம.மு.கவுக்குச் சென்றார் செந்தில் பாலாஜி.

ஆனால், விடாத அமைச்சர் தரப்பு, கரூர் மாவட்ட அ.ம.மு.க-வினர்களை அ.தி.மு.க-வுக்கு இழுத்துப் போட்டுக்கொண்டிருந்தது. தொடர்ந்து, செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்குத் தாவிய கடந்த 14-ம் தேதியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான அ.ம.மு.க-வினர்களை அ.தி.மு.க-வில் இணைத்து வருவதாக தினமும் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு செந்தில் பாலாஜியை கிலிப்படுத்தினர். ஏன் என்றால், தி.மு.க-வில் இணைந்த செந்தில் பாலாஜி இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை தி.மு.கவில் இணைப்பதற்கு முயற்சி செய்கிறார். ஆனால், அதற்கு அமைச்சர் தரப்பு ஆப்பு வைப்பதாகக் குமுறியது.

இந்நிலையில்தான், கடந்த 29-ம் தேதி ம.தி.மு.கவிலிருந்து அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் கலையரசன் தலைமையில் 12 நிர்வாகிகள் வெளியில் வந்தனர். அவர்கள் அமைச்சர் தலைமையில் அ.தி.மு.கவில் இணைய விரும்பினர். செந்தில் பாலாஜி பொதுக்கூட்டம் நடத்தும் அதோ நாளில் (அதாவது இன்று) முதல்வரிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் அனுமதி வாங்கி இன்று காலை பத்தரை மணி இணைப்பு விழாவை நடத்த இருக்கிறார். இதனால், சென்னையில் நடக்கும் தனது விழா பற்றிய மீடியா கவரேஜ் பெரிதாகி, செந்தில் பாலாஜி கரூரில் நடத்தும் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் இல்லாமல் போகும் என்று அவர் நினைப்பதால்தான். ஆனால், இன்று இரவுக்குள் தெரிந்துவிடும் யார் நடத்தும் விழா பிரசித்தி பெற போகிறது என்பது" என்றார்கள்.

இன்னும் சிலரோ, ``உண்மையில் கரூர் மாவட்ட அ.ம.மு.க தொண்டர்களுக்குச் செந்தில் பாலாஜி பின்னாலோ, அமைச்சர் பின்னாலோ போக விருப்பமில்லை. தினகரனோடே இருக்க விருப்பப்படுவதாகத் தெரிகிறது. இதனால், செந்தில் பாலாஜி தரப்பில் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பது போல் பணம் கொடுத்துக் கூட்டி வர ஏற்பாடு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதில் அநேகம் பேர் 100 நாள் வேலைக்குப் போகும் பெண்கள் என்கிறார்கள். ஆனால், அதைத் தடுக்க அமைச்சர், அதிகாரிகளை முடுக்கிவிட்டு, இன்று மட்டும் 100 நாள் வேலைக்கு அனைவரையும் வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததோடு, மாலை 6 மணி வரை வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள். இதனால், `கடைசி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே' என்று செந்தில் பாலாஜி தரப்பு ஆடிக் கிடப்பதாகவும் சொல்கிறார்கள். அதேபோல், இன்று சென்னையில் அமைச்சர் நடத்தும்

ம.தி.மு.க-வை சேர்ந்தவர்களை இணைக்கும் விழாவுக்காக 50 பேருந்துகள் மற்றும் 20 கார்களில் 2000 க்கும் மேற்பட்டவர்களை அழைத்துப் போயிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ம.தி.மு.கவினர் இல்லையாம். அ.ம.மு.கவினர், அ.தி.மு.கவினர்களையே கூட்டம் காட்ட அழைத்துப் போனதாகவும் சொல்கிறார்கள். `ம.தி.மு.கவிலிருந்து 500 பேர் போயிருந்தாலே ஆச்சர்யம். அவர்களும் கலையரசனுக்காக வந்த கூட்டமாக இருக்கும்' என்றும் சொல்கிறார்கள். இந்நிலையில்,நேற்று இரவு சென்னைக்கு ஆள்களை ஏற்றிச் செல்ல பல தனியார் பேருந்து முதலாளிகளுக்கு நெருக்கடி கொடுத்து அழைத்துப் போனதாகவும் சொல்கிறார்கள். அதாவது, வேறு ரூட்களில் போகும் பேருந்துகளை மடைமாற்றி சென்னைக்கு இணைப்பு விழாவுக்குச் செல்லும் ஆள்களை ஏற்றிச் சென்றதாகவும் புலம்புகிறார்கள். இவர்களின் அதிகார போட்டியில் கரூர்தான் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது" என்றார்கள்.