Published:Updated:

ஒர்க் அவுட்டான ஓ.பி.எஸ். திட்டம்... அதிருப்தியில் மதுரை அமைச்சர்கள்...!

ஒர்க் அவுட்டான ஓ.பி.எஸ். திட்டம்... அதிருப்தியில் மதுரை அமைச்சர்கள்...!
News
ஒர்க் அவுட்டான ஓ.பி.எஸ். திட்டம்... அதிருப்தியில் மதுரை அமைச்சர்கள்...!

``சத்தமில்லாமல் இரு… சாதிக்கலாம்…!” - தம்பிக்கு ஓ.பி.எஸ் சொன்ன அட்வைஸ்.!

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் -ன் தம்பி ஓ.ராஜா, மதுரை ஆவின் நிறுவனத்தின் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டார். `பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ராஜாவின் ஆசையை நிறைவேற்றி வைக்க, ஓ.பி.எஸ் போட்ட திட்டம் கச்சிதமாக வேலை செய்திருக்கிறது' என பரபரப்பாகப் பேசிவருகிறார்கள் தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர்.

மதுரை ஆவின் தலைவர் கனவு :

பெரியகுளம் நகர் மன்றத் தலைவராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா. கைலாசபட்டி அருகே இருக்கும் கைலாசநாதர் கோயிலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் சிக்கிய ஓ.ராஜாவிடமிருந்து பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. தேனி மாவட்டத்துக்குள் மணல், கல் குவாரி, அரசு கான்ட்ராக்ட்கள், கட்டப்பஞ்சாயத்து என இருந்த ஓ.ராஜா, முதல் முறையாக ஒரு பெரிய வழக்கில் சிக்கியதை ஓ.பன்னீர்செல்வத்தால் ஜீரணிக்க முடியவில்லை. ஓ.ராஜாவால், தன்னுடைய அரசியல் செல்வாக்கு சரியும் என அச்சமடைந்தார் ஓ.பி.எஸ். அதனால், அவ்வப்போது தன் தம்பியைக் கண்டிப்பதும், அதனால் குடும்பத்துக்குள் சண்டைகள் ஏற்படுவதும் வாடிக்கையாகவே இருந்தது. இதனால், கட்சியில் பெரிய பதவிகள் எதுவும் ஓ.ராஜாவுக்குக் கொடுக்கப்படாமலே இருந்தது. தொடர்ந்து ஜெயலலிதா இறப்பு, அதைத்தொடர்ந்து அ.தி.மு.க வில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு, தற்போது ஓ.பி.எஸ் துணைமுதல்வர் மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால், தனக்குப் பதவி வேண்டும் என அண்ணனிடம் கேட்டார் ஓ.ராஜா. ``கொஞ்சம் பொறுமையாக இரு… நேரம் வரும் போது பார்த்துக்கொள்ளலாம்” என்று அமைதியாக்கினார் ஓ.பி.எஸ். ராஜாவுக்குப் பதவி கொடுத்தால் என்ன என்று குடும்பத்துக்குள் ஒரு கேள்வி எழவே, `மதுரை ஆவின் தலைவர் பதவிக்கு ஓ.ராஜா சரியாக இருப்பார்' என்று கணக்கு போட்டார் ஓ.பி.எஸ். அது ஓ.ராஜாவுக்கும் பிடித்திருந்தது. ஓ.பி.எஸ் ஆரம்பகாலகட்டத்திலிருந்தே பால் பண்ணை, டீ கடை என வளர்ந்தவர். தன் சகோதர்களில் ஒருவரான பாலமுருகன், தற்போதும் பால்பண்ணை வைத்து நடத்திவருகிறார். இவையெல்லாம் ஒரு காரணமாக இருந்தாலும், மதுரை ஆவின் தலைவராக ஆன பின்னர், அதை வைத்துக்கொண்டு மாநில அளவில் பொறுப்புக்கு எளிதாகச் சென்றுவிடலாம் என்று கணக்கு போட்டார் ராஜா. அதற்கான வேலைகளில் சத்தமில்லாமல் இறங்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வரிசையாக வந்தது சர்ச்சை :

ஓ.ராஜா, மதுரை ஆவின் தலைவராக முயல்கிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவியது. மதுரையில் முகாமிட்ட ஓ.ராஜா, அனைவரின் ஆதரவையும் பெற்று, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார். தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டியைச் சேர்ந்த அம்மாவாசி என்ற அ.ம.மு.க ஆதரவாளர், `மதுரை ஆவின் தலைவர் பதவிக்குக் குறுக்குவழியில் ராஜா முயல்கிறார்' என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதிகள், ஆவின் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் அப்செட் ஆன ஓ.ராஜா, தேர்தலில் தான் வெற்றிபெற என்னென்ன செய்ய வேண்டும் என யோசிக்க ஆரம்பித்தார். இதற்கிடையே இன்னொரு பிரச்னை வெளியே வந்தது. கட்சியின் மூத்த நிர்வாகியான செல்லமுத்துவுக்கு ஆவின் தலைவர் பதவி தர இருப்பதாக, எப்போதோ ஓ.பி.எஸ் வாக்கு கொடுத்ததாகவும், இப்போது தன் தம்பிக்கு அப்பதவியைக் கொடுக்கிறார் என்றும் தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இவை எதையும் கண்டுகொள்ளாமல் தேர்தல் வேலைகளில் தம்பியை ஈடுபடச் சொன்னார் ஓ.பி.எஸ். அதன்படி அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டினார் ஓ.ராஜா.

வெற்றியும் நீக்கமும் :

தேனி, மதுரை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய 9 தொகுதிகளைக் கொண்டது மதுரை ஆவின் கூட்டுறவுச் சங்கம். அதற்கான தேர்தல் முறையாக அறிவிப்பு செய்யப்பட்டு, டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 15ல் நடைபெற்று, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 17 இயக்குநர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதில் ஓ.ராஜாவும் ஒருவர். அந்த 17 இயக்குநர்கள் ஒன்றிணைந்து, டிசம்பர் 19-ம் தேதி, ஆவின் தலைவராக ஓ.ராஜாவை ஒருமனதாகத் தேர்வு செய்தனர். அன்று மாலையே அ.தி.மு.க தலைமையிடமிருந்து அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியானது. கட்சிக்குக் களங்கத்தையும், அவப்பெயரையும் ஏற்படுத்தியதற்காக ஓ.ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், ஓ.ராஜா எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. எல்லாம் திட்டமிட்டபடியே நடந்தது.

தேனி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜாவின் பார்வை தமிழகம் முழுவதற்குமான பதவி குறித்த பார்வையாக மாறியது. அந்தப் பார்வையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், நீண்ட காலமாக கட்சியில் எந்தப் பதவியும் கிடைக்காமல் இருக்கும் தம்பிக்கு ஒரு பதவி வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற ஆசையிலும்தான், ஆவின் தலைவர் பதவியைக் குறிவைத்தார் ஓ.பி.எஸ். அது அத்தனை சுலபம் இல்லை என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்கு தெரியும். மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகிய இருவரையும் மீறி தன் தம்பியை தற்போது அந்தப் பதவியில் அமர்த்தியுள்ளார். செல்லூர் ராஜூவின் நெருங்கிய நண்பரான தங்கம்தான், அதுவரை ஆவின் தலைவராக இருந்தார். இந்த முறையும் தன் ஆதரவாளரை ஆவின் தலைவராக கொண்டுவர வேண்டும் என செல்லூர் ராஜூ திட்டம் வைத்திருந்தார். இன்னொரு பக்கம் ராஜன் செல்லப்பாவும் அவருடைய ஆதரவாளர் ஒருவருக்கு ஆவின் தலைவர் பதவியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என முயற்சி செய்து வந்தார்.

என்றாலும்,ஓ.பி.எஸ். தம்பியை ஆவின் தலைவராக முயற்சி செய்யும் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு, தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 இயக்குநர்களிடமும் ஆதரவு கேட்டு தனித்தனியாக ஓ.ராஜா பேசினார். இதெல்லாம் ஓ.பி.எஸ். ஆசியுடனேயே நடந்தது. டி.டிவி. தினகரன் ஆதரவு இயக்குநர்களுடன் ஓ.ராஜா பேச்சுவார்த்தை நடத்தியதாக, மதுரையிலிருந்து சென்னை கோட்டைக்குத் தகவல் சென்றது. இதற்கிடையில் மணல் விவகாரம் தொடர்பாக தேனி கலெக்டர் பல்லவி பல்தேவை ஓ.ராஜா மிரட்டியதாகவும், அவர், ஐ.ஏ.எஸ் அசோசியேசனில் ஓ.ராஜா குறித்து புகார் கூறியதாகவும் தகவல் வெளியானது. அடுக்கடுக்கான பிரச்னைகளை சற்றும் எதிர்பார்க்காத ஓ.பி.எஸ், அதிரடியாக ஓ.ராஜாவை கட்சியிலிருந்து நீக்கும் முடிவுக்கு வந்தார். அதை ஏற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

``கட்சியிலிருந்து நீக்கியது ஒருபக்கம் இருந்தாலும், ஆவின் தலைவர் பதவியை ஏன் பறிக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார் அ.ம.மு.க புகழேந்தி. அது என்னவோ உண்மைதான். பெயரளவில் கட்சியிலிருந்து நீக்கியதே, ராஜா குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் என்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர்கள். ``எல்லா பிரச்னைகளும் இரண்டு மாதத்துக்குள் முடிந்தது. இப்போது ஓ.ராஜா ஆவின் தலைவராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் உட்பட யாரும் பதவியேற்பு நிகழ்வுக்கு வரவில்லை. கோபம் இருக்கத்தானே செய்யும். இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் எப்போதும் தன் அண்ணனுடன் தொடர்பிலேயே இருந்தார் ஓ.ராஜா. சத்தமில்லாமல் இரு, சாதிக்கலாம் என்று அட்வைஸ் செய்தார் ஓ.பி.எஸ்” என கிசுகிசுக்கிறார்கள் ஓ.பி.எஸ் உடன் இருக்கும் நெருங்கிய வட்டாரங்கள்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு பதவிக்கு வந்த மகிழ்ச்சியில் தம்பி ஓ.ராஜா. அதைக் கண்டு சந்தோசத்தில் அண்ணன் ஓ.பி.எஸ்.