`இதனால் எங்களுக்கு என்ன பயன்?’ - அ.தி.மு.க, அ.ம.மு.க நிர்வாகிகளை வறுத்தெடுத்த பொதுமக்கள் | Tanjore village People opposes to hoist ADMK and AMMK flags

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (27/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (27/12/2018)

`இதனால் எங்களுக்கு என்ன பயன்?’ - அ.தி.மு.க, அ.ம.மு.க நிர்வாகிகளை வறுத்தெடுத்த பொதுமக்கள்

தஞ்சாவூரில் அ.தி.மு.க-வினருக்கும் அ.ம.மு.க-வினருக்கும் கொடி ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பொதுமக்கள், `எங்கள் முன்னேற்றத்துக்கான எந்தத் திட்டங்களும் நிறைவேற்றவில்லை. கொடி ஏற்றுவதில் சண்டைபோட்டுக்கொள்கிறீர்கள். இதனால் எங்களுக்கு என்ன லாபம்'' என இருதரப்பு நிர்வாகிகளிடமும் சத்தம் போட்டதோடு எந்தக் கொடியையும் ஏற்ற வேண்டாம் எனத் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரச்னையான கொடி கம்பம்

தஞ்சாவூரின் நகர பகுதியில் உள்ளது இந்திரா நகர். சுமார் 100 குடும்பத்துக்கு மேல் வசிக்கும் இந்தப் பகுதியில் அ.தி.மு.க-வின் கொடிக் கம்பம் ஒன்று இருந்துள்ளது. ஆனால், அந்தக் கம்பத்தில் நீண்ட நாள்களாகவே அ.தி.மு.க-வின் கொடி இல்லை. இதனால் அ.ம.மு.க நிர்வாகிகள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் நினைவு நாள் அன்று அ.ம.மு.க-வின் கொடியை ஏற்றிவிட்டனர். இந்தத் தகவல் தாமதமாகவே அ.தி.மு.க நிர்வாகிகளுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று அங்கு சென்ற அ.தி.மு.க-வினர் அ.ம.மு.க-வின் கொடியை இறக்கிவிட்டு மீண்டும் அ.தி.மு.க கொடியை ஏற்றிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதன் பிறகு, இன்று காலை அதே பகுதிக்குச் சென்ற அ.ம.மு.க-வினர் அ.தி.மு.க-வின் கொடியை இறக்கிவிட்டு தங்கள் கொடியை மீண்டும் ஏற்ற முயன்றுள்ளனர். இதைக் கேள்விப்பட்டு அந்த இடத்துக்குச் சென்ற அ.தி.மு.க-வினர் அதை தடுத்ததோடு கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சலசலப்பில் அந்தப் பகுதியில் குடியிருந்த மக்கள் அந்த இடத்தில் கூடினர். அவர்கள், ``எங்க பகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே கிடக்கிறது. அதைச் சரி செய்ய யாரும் வரவில்லை. கொடி ஏற்றுவதற்கு மட்டும் வந்து அடித்துக் கொள்கிறீர்கள். இதனால் மக்களுக்கு என்ன லாபம்'' எனச் சத்தம் போட்டதோடு, `எங்களுக்கு எந்தக் கொடியும் வேண்டாம். நீங்க எங்க இடத்தில் அடிச்சுக்காதீங்க' எனக் கூறி இரதரப்பு நிர்வாகிகளையும் சத்தம் போட்டு அனுப்பி வைத்தனர்.

சாலையில் சாக்கடை

இதையடுத்து மேற்கு காவல் நிலையத்தில் அ.ம.மு.க-வினர் மீது அ.தி.மு.க-வினர் இது தொடர்பாகப் புகார் கொடுத்தனர். பின்னர், அ.ம.மு.க நிர்வாகிகளும் புகார் கொடுக்கச் செல்ல பதற்றம் அடைந்த காவல்துறையினர், எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் சார் என அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து அதிமுகவினரிடம் பேசினோம். ``எங்க கொடிக்கம்பத்தில் அவர்கள் கொடியை ஏற்றிவிட்டனர். இப்படி நடந்து கொள்வது கொஞ்சம்கூட நியாமில்லை. வேண்டும் என்றால் அவர்கள் அந்தப் பகுதியிலேயே புதிய கொடிக்கம்பம் அமைத்து கொடியை ஏற்றிக் கொள்ளட்டும். அதை நாங்கள் தடுக்கப்போவதில்லை. ஆனால், என்ன நடந்தாலும் இந்தக் கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்ற விட மாட்டோம்'' என்றனர்.

கொடி கம்பம்

அமமுகவின் மாநகர செயலாளர்  ராஜேஸ்வரனிடம் பேசினோம். ``நாங்க அதிமுகவில் இருந்தபோது இந்தப் பகுதியில் மேடை அமைத்து கொடியை ஏற்றினோம். இப்போது நாங்கள் தினகரன் தலைமையில் செயல்படும் அமமுகவில் இருக்கிறோம். நாங்கள் வைத்த கொடிக்கம்பம் என்பதால் இது எங்களுக்கே சொந்தம். அதோடு அவர்கள் கொடிக்கம்பத்தை பராமரிக்கவும் இல்லை. அதில் கொடியையும் பறக்க வைக்கவும் இல்லை. அதனால் நாங்கள் எங்கள் கொடியை ஏற்றிவிட்டோம். அதன் பிறகு வந்து பிரச்னை செய்கின்றனர். நாங்க அதிமுகவில் இருந்த சமயத்தில் எங்கள் ஏற்பாட்டில் ஏற்றப்பட்ட கொடிக்கம்பங்கள் அனைத்தும் எங்களுக்குச் சொந்தம். அதில் அமமுக கொடியை ஏற்ற இருக்கிறோம். காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கவும் உள்ளோம்'' என்றார்.

மஞ்சுளா

அந்தப் பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவர், ஏற்கெனவே இவர்கள் அடித்துக்கொண்டதால் தஞ்சாவூர் எம்.எல்.ஏ ரெங்கசாமி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் எந்த நலத்திட்டங்களும் நடைபெறவில்லை. எங்க ஏரியாவில் கழிவு நீர் பொது வெளியில் ஓடுது. சாலை வசதி இல்லை. 50 வருடத்துக்கு மேலாகக் குடியிருக்கிறோம். பட்டா கிடைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. எங்களுக்கான முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யாதவர்கள் அவர்கள் கொடியை ஏற்றுவதற்கு அடித்துக்கொள்கிறார்கள். இதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நீங்க எந்தக் கொடியும் ஏற்ற வேண்டாம் என இரு தரப்பு நிர்வாகிகளையும் திருப்பி அனுப்பிவிட்டோம். மீண்டும் வந்தாலும் ஏற்ற விட மாட்டோம்'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க