Published:Updated:

ஐந்துமணி நேர விவாதம்; 245 பேர் ஆதரவு! - மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் தடை மசோதா

ஐந்துமணி நேர விவாதம்; 245 பேர் ஆதரவு! - மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் தடை மசோதா
ஐந்துமணி நேர விவாதம்; 245 பேர் ஆதரவு! - மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் தடை மசோதா

ஐந்து மணி நேர விவாதத்துக்குப் பின்னர் நாடளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. 

மூன்று முறை தலாக் கூறி விவகாரத்துக்கு செய்யும் முத்தலாக் முறைக்குத் தடை கொண்டு வரும் வகையில் முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ``உலகின் 20 இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் தடை செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டிலும் முத்தலாக்குக்குத் தடை விதிக்கப்பட வேண்டும். இதை அரசியல்ரீதியாக யாரும் பார்க்க வேண்டாம். இந்த மசோதா எந்த ஒரு மதத்துக்கோ அல்லது நம்பிக்கைக்கோ எதிரானது அல்ல. பெண்களின் உரிமைக்கானது’’ என்று பேசினார். 

Photo: Loksabha TV

ஆனால், முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த மசோதாவுக்கான விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா, முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நேரடியாகத் தலையிடும் இந்த சட்ட மசோதாவை எதிர்ப்பதாகக் கூறினார். மேலும், முத்தலாக் பிரச்னையில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பது நியாயமற்றது என்று குறிப்பிட்ட அவர், இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தைத் தாம் எதிர்ப்பதாகவும் கூறினார். தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்றும் அதில் சில திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேபோல், முத்தலாக் தடை சட்ட மசோதாவை நாடளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, ``இந்தச் சட்ட மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தீவிரமாக அலசப்பட வேண்டியது' என்றார்.  

Photo: Loksabha TV

சுமார் 5 மணி நேர விவாதத்துக்குப் பின்னர் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவித்தார். அப்போது, காங்கிரஸ் மற்றும்  அ.தி.மு.க உள்ளிட்ட கட்சி எம்.பி-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். வாக்கெடுப்பின் முடிவில் 245 உறுப்பினர்களின் ஆதரவுடன் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். மசோதாவுக்கு எதிராக 11 பேர் வாக்களித்திருந்தனர். இந்த மசோதா, அடுத்தபடியாக மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும்.