Published:Updated:

`ராஜினாமா பண்ணிட்டு நாளைக்கே தேர்தலை சந்திக்கத் தயாரா?’- முதல்வருக்கு சவால்விட்ட செந்தில் பாலாஜி

`ராஜினாமா பண்ணிட்டு நாளைக்கே தேர்தலை சந்திக்கத் தயாரா?’- முதல்வருக்கு சவால்விட்ட செந்தில் பாலாஜி
`ராஜினாமா பண்ணிட்டு நாளைக்கே தேர்தலை சந்திக்கத் தயாரா?’- முதல்வருக்கு சவால்விட்ட செந்தில் பாலாஜி

``நீங்களும், நானும் ஒரே நாளில்தான் அமைச்சரானோம். ஆனால், நீங்கள் என்னைப் பார்த்து, துரோகம் பண்ணிட்டு கட்சி மாறிட்டார்ன்னு சொல்றீர்கள். கூவத்தூரில் முட்டிப் போட்டு சி.எம் ஆனவர் நீங்கள். தில் இருந்தால், நாளையே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலை சந்தியுங்கள். அப்போது ஜெயித்து நீங்கள் முதல்வரானால், நான் அரசியலை விட்டுப் போய்விடுகிறேன். இல்லை என்றால், நீங்கள் அரசியலைவிட்டுப் போகத் தயாரா?" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கரூர் பொதுக்கூட்டத்தில் செந்தில்பாலாஜி சவால்விட்டார். 

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் கட்சி மாற முடிவெடுத்தார். அதன்படி,கடந்த 14-ம் தேதி தனது ஆதரவாளர்கள் 2,000 பேரோடு போய் சென்னையில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் ஐக்கியமானார். அதன்பிற்கு, 'ஒரு லட்சம் பேரை தி.மு.க-வில் இணைக்கிறேன்' என்றபடி இன்று (27-ம் தேதி) பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். ஸ்டாலின் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் 30,425 பேரை தன்னோடு தி.மு.க-வில் இணைத்திருக்கிறார். இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கரூர் சின்னசாமி, பொங்கலூர் பழனிச்சாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஸ்டாலினுக்கு வெள்ளி வாளை நினைவுப் பரிசாக செந்தில்பாலாஜி வழங்கினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, ``தி.மு.க-வின் தளபதியாக இருந்த ஸ்டாலின் இனிமேல் மக்களின் தளபதியாக மாறுவார். இடைத்தேர்தல் நடந்தால், 18 தொகுதிகளிலும் ஜெயித்து அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம். அதற்கு பக்கபலமாக, தி.மு.க-வில் இன்றைக்கு 30,425 பேர்களை இணைத்திருக்கிறோம். கரூர் எம்.பி தொகுதியில் 5 ஆண்டுகளாக தம்பிதுரை எம்.பியாக இருக்கிறார். மோடி ஒருவேளை நாடாளுமன்றத்துக்கு வந்தால், தம்பிதுரையைப் பார்த்து எழுந்து நிற்ககூடிய அளவுக்கான பவரான துணை சபாநாயகர் பதவியை வகிக்கிறார். ஆனால், இந்தத் தொகுதிக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்தார்? எதையும் செய்யவில்லை. அவருக்கு 2014 எம்.பி தேர்தல்தான் கடைசி தேர்தல். வரும் 2019 எம்.பி தேர்தலில் அவர் மண்ணைக் கவ்வுவார்.

கரூர் தொகுதியில் தளபதி அறிவிக்கும் வேட்பாளரை அமோகமாக வெற்றிபெற வைப்போம். அதேபோல், மாவட்டத்தில் உள்ள 4 எம்.எல்.ஏ தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்களையே ஜெயிக்க வைப்போம். எடப்பாடி பழனிசாமி நான் துரோகம் செய்துவிட்டதாக சொல்கிறார். அவர் நான்கு முறை எம்.எல்.ஏ-வாக வேண்டுமானால் ஆகி இருக்கலாம். ஆனால், இருவரும் ஒரே நேரத்தில்தான் அமைச்சரானோம். கூவத்தூரில் முட்டிப் போட்டு சி.எம் ஆனவர் அவர். நான் உள்ளிட்ட நான்கைந்து பேர் ஓட்டு போடலன்னா, அவர் சி.எம் ஆகி இருக்கமுடியாது. நாளையே நீங்க சி.எம் பதவியை ராஜினாமா பண்ணிட்டு, போட்டியிட்டு ஜெயித்து சி.எம் ஆகுங்கள். நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன். இல்லை என்றால், நீங்கள் அரசியலை விட்டுப் போகத் தயாரா?.

குறுக்கு வழியில் படிப்போட்டு சி.எம் ஆயிட்டு, இப்படி பேசக்கூடாது. வரும் 2019-ல் எம்.பி, எம்.எல்.ஏ தேர்தல்கள் ரெண்டும் ஒரே நேரத்தில் வரும். அப்போது, நீங்கள் மட்டுமல்ல, ஓ.பி.எஸ், தங்கமணி, வேலுமணி, தம்பிதுரையின் கைத்தடி (அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சொல்கிறார்) எல்லோரும் திருச்சி, சேலம் மத்திய சிறைகளுக்கும், சென்னை புழல் சிறையிலும் கம்பி எண்ணப் போகிறீர்கள். 234 தொகுதிகளிலும் தி.மு.க அமோக வெற்றி பெறும். ஏழரை கோடி மக்களின் உணர்வை மதிக்கிற, 3 கோடி இளைஞர்களின் எண்ணத்தை ஈடேற்றுகிற ஆட்சியை ஸ்டாலின் வழங்குவார். அதற்கு, மேற்கு மண்டலம் ஸ்டாலினுக்குக் கோட்டையாக இருக்கும்" என்றார்.