Published:Updated:

`ரகசிய டெண்டர்!’ - நாமக்கல் பொதுப்பணித்துறை மீது ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றச்சாட்டு

`ரகசிய டெண்டர்!’ - நாமக்கல் பொதுப்பணித்துறை மீது ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றச்சாட்டு
`ரகசிய டெண்டர்!’ - நாமக்கல் பொதுப்பணித்துறை மீது ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றச்சாட்டு

``நாமக்கல் மாவட்டம் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டடம் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்ட அலுவலகத்தின் மூலம் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கான டெண்டர் நாளையோடு (28-12-2018) நிறைவு பெற இருக்கிறது. ஆனால், பொதுப்பணித்துறையில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்களுக்கு கடிதம் அனுப்பாமலும், அலுவலக நோட்டீஸ் போர்டில் ஒட்டாமலும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம் மட்டும் சொல்லி டெண்டரை முடிக்க இருக்கிறார்கள்'' என்று நாமக்கல் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குமுறுகிறார்கள்.

இதுபற்றி நாமக்கல் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர், ``நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா அலுவலக கட்டடம் பராமரிப்புப் பணி ரூ.5 லட்சம், நாமக்கல் கலெக்டர் அலுவலக கட்டடம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், நாமக்கல் கோட்டாச்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் குடியிருப்புக் கட்டடம், நாமக்கல் தாசில்தார் அலுவலகக் கட்டடம் ஆகிய கட்டடங்களுக்கு மராமத்துப் பணிக்கு ரூ.45 லட்சமும், பரமத்திவேலூர் தாசில்தார் கட்டடம், திருச்செங்கோடு தாசில்தார் கட்டடம் மராமத்துப் பணிக்கு ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் 9 பணிகளுக்கு 65 லட்சத்துக்கான டெண்டர் நாளையோடு நிறைவு பெற இருக்கிறது.

ஆனால், இந்த டெண்டரைப் பற்றி பொதுப்பணித்துறையில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்களுக்கு தெரிவிக்கவில்லை. அலுவலக அறிவிப்புப் பலகையிலும் போடாமல் ரகசிய டெண்டர் விடுவது தெரிந்து நாமக்கல் கட்டடம் கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் பொறுப்பு செயற்பொறியாளர் வள்ளுவனிடம் கேட்டதற்கு, `உங்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பிய பிறகுதான் டெண்டர் விடுவோம். யாருக்கும் தெரியாமல் விட மாட்டோம்' என்று கூறினார். அதன் பிறகு போன் செய்தால் எடுப்பதில்லை. இந்த டெண்டர் நாளையோடு முடிவடையப் போகிறது. இந்த டெண்டர் விடுவது பற்றி பலருக்கும் தெரியவில்லை. அதனால் இந்த டெண்டர் நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை. அதனால் இந்த டெண்டரை நீக்கி வைத்து அனைவருக்கும் தெரியும்படி டெண்டர் விட வேண்டும்'' என்றார்கள்.

இதுபற்றி பொதுப்பணித்துறையின் கட்டடம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையின் தலைமைப் பொறியாளர் பிரபாகரனிடம் பேசிய போது, ``இந்தப் புகார் எனக்கும் வந்தது. அரியலூர் கட்டடம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையின் செயற்பொறியாளராக இருப்பவர்தான் நாமக்கல் பொறுப்பு செயற்பொறியாளராக இருக்கிறார். அவரிடம் விசாரித்தேன். அவர் சரியாக செய்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார். நாளை நாமக்கல் அலுவலகத்துக்கு வருவார். அவரிடமே விசாரித்துப் பாருங்கள்'' என்றார்.