Published:Updated:

டிவி-யை சுமந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்

டிவி-யை சுமந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்
டிவி-யை சுமந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்தவுள்ள மக்களே சேனல்களைத் தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, கோவையில் தொலைக்காட்சி  பெட்டிகளை சுமந்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மக்களே சேனல்களைத் தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. மக்களைப் பாதிக்கும் கேபிள் டி.வி புதிய கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கடந்த திங்கள்கிழமை 300-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர், தலையில் தொலைக்காட்சிப் பெட்டிகளைச் சுமந்தும் தரையில் வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் 500 ரூபாய் வரை வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே, கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து அர்ஜுன் சம்பத் கூறுகையில், “ஆரம்பத்தில் இலவச சேனல்கள் வழங்கிய தனியார் நிறுவனங்கள், தற்போது கட்டண சேனல்களாக மாற்றம் செய்து வருகின்றன. இவர்கள் விளம்பரம் மூலம் அதிக அளவில் வருமானம் பெற்று வருகின்றனர். 70 ரூபாய்க்கு அனைத்து சேனல்களையும் வழங்க வேண்டும். வரும் காலங்களில் செட்டாப் பாக்ஸ் அல்லது டிஜிட்டல் முறை மூலம் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், அரசு கேபிள் மூலமே அனைத்து சேனல்கள் மக்கள் பார்க்கும் வகையில் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.