Published:Updated:

`வேலையைப் பறிக்கும் அரசாக மோடி அரசு இருக்கிறது!' - சிவகங்கையில் பிருந்தா காரத் பேச்சு

`வேலையைப் பறிக்கும் அரசாக மோடி அரசு இருக்கிறது!' - சிவகங்கையில் பிருந்தா காரத் பேச்சு
`வேலையைப் பறிக்கும் அரசாக மோடி அரசு இருக்கிறது!' - சிவகங்கையில் பிருந்தா காரத் பேச்சு

சிவகங்கையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு தோழர் வீரைய்யன் நினைவு திடலில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அகில இந்திய மாதர் சங்கத்தின் புரவலர் பிருந்தா காரத் பேசுகையில், ``கஜா புயலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்தவர்கள் அதிகம். மூன்று வாரங்களாகியும்  கூடத் தமிழக அரசு நிவாரணம் அளிக்காமல் மோசமான நிலையில் இருக்கிறது. ஓ.பி.ஸ், ஈ.பி.எஸ் மியூசிக்கல் சேர் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் எப்படி மியூசிக் சேரை எட்டிப்பிடிப்பார்களோ அதுபோல் இவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியின்  அனைத்து சேர்களையும் அபகரித்துக்கொண்டிருக்கிறார். மூன்று மாதத்துக்கு முன்பு மழை வெள்ளம் தாக்கியபோதுகூட  கேரளா அரசு புதிய கேரளாவை உருவாக்கியிருக்கிறது. கேரள அரசிடம் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொன்ன பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக பொதுத்துறை நிறுவனங்களை மூட வைத்திருக்கிறார். பா.ஜ.க-வை ஆர்.எஸ்.எஸ் என்ற ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கிக் கொண்டிருக்கின்றனர். மோடியின் அனைத்து ஊழல்களும் கூடிய விரைவில் வெளியே வரும். கடந்த மார்ச் மாதம் ரயில்வே துறை 90,000 காலிப்பணியிடங்கள் குறித்து வெளியிட்டது. அதற்காக 2 கோடி இளைஞர்கள் விண்ணப்பம் செய்தார்கள். அந்த வேலை நான்காம் பிரிவுக்கானது ஆனால், விண்ணப்பித்தவர்கள் யார் தெரியுமா? இன்ஜினீயர்கள், முதுகலைப் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டுக்கும் 2 கோடி வேலை தருவதாக சொன்ன மோடி வேலைவாய்ப்பு அளித்திருந்தால் கோடிக்கணக்கான விண்ணப்பங்கள் இந்த வேலைக்கு வந்திருக்காது. மோடி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டார். பணமதிப்பு நீக்கம் செய்தால் அனைத்து கறுப்பு பணத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழிக்க முடியும் என்று சொன்னார். கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க ஒரே உத்தரவில் மாற்றிவிட்டார். கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றி ஒரு மேஜிக் நிபுணர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் மோடி 35 லட்சம் தொழிலாளர்கள் பணமதிப்பிழப்பால் வேலைகளை இழந்திருக்கிறார்கள். 
 
வேலையைப் பறிக்கும் ஆட்சியாக மோடி அரசு இருக்கிறது. நான்கரை வருடங்களில் மோடி எந்த வேலைவாய்ப்பையும் அளிக்கவில்லை.
மோடி அரசு என்ன செய்ய நினைக்கிறதோ அதையே ஈ.பி.எஸ், ஓ.பி.ஸ் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. மோடி பொய்களை உருவாக்கும் தொழிற்சாலைகளை நடத்திக்கொண்டிருக்கிறார். பொய் வாக்குறுதி மூலம் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைமையில் இயங்கும் மோடி அரசு பிரிவினைவாத அரசு, தற்போது ராமருக்கு கோயில் கட்டுவோம் என்று கோரிக்கை வைத்து இளைஞர்களை திரட்ட நினைக்கிறார்கள். 40,000 பெண்கள், குழந்தைகள் என வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என தனது பேச்சை நிறைவு செய்தார்.