ஒன்றிணைந்த 27 அமைப்புகள்! - எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பை உருவாக்கிய சமூக செயற்பாட்டாளர்கள் | Federation formed against chennai - salem express way

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (29/12/2018)

கடைசி தொடர்பு:18:30 (29/12/2018)

ஒன்றிணைந்த 27 அமைப்புகள்! - எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பை உருவாக்கிய சமூக செயற்பாட்டாளர்கள்

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான சர்ச்சைகள் சற்று தணிந்திருந்தாலும் அதற்கான பணிகளும் இன்றுவரை தொடர்ந்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாலும், தேர்தல் சமயம் நெருங்குவதாலும் அரசாங்கம் சற்று தீவிரத்தைக் குறைத்துள்ளது என்றும் திட்டத்தை முற்றிலுமாக கைவிடவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து கிராம மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து எட்டு வழிச்சாலைக்கு எதிராகக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர். 

இதன் செயற்குழுவின் 11 உறுப்பினர்கள் இருப்பர், 29 அமைப்புகள் இணைந்து இதில் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கான கலந்தாய்வு கூட்டமும் செய்தியாளர் சந்திப்பும் சென்னை நிருபர்கள் மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் சமூக செயற்பாட்டாளர்கள் அரங்க குணசேகரன், அ.மார்க்ஸ், முகிலன் மற்றும் இதர அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய பேராசிரியர் அ.மார்க்ஸ் கூறுகையில், “எட்டு வழிச்சாலைக்கு எதிராக நடைபெற்று வரக்கூடிய ஐந்து மாவட்ட மக்களின் போராட்டத்தை அரசு அடக்குமுறையைக் கொண்டு ஒடுக்கி வருகிறது. சிறிய பொதுக்கூட்டம் கூட நடத்த முடியாத நிலைமை நிலவுகிறது. எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடர்ந்து மேலும் பல திட்டங்களைக் கொண்டு வருவதில் தமிழக அரசு முனைப்பாக இருக்கிறது. தனித்தனியே அல்லாமல் மக்களோடு இணைந்து போராட வேண்டிய காரணத்தில் 27 அமைப்புகள் ஒன்றிணைந்து எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். மேலும், மற்ற அமைப்புகளையும் இதில் இணைத்து கொள்ள இருக்கிறோம்.”

“இந்த விவாதத்தில் முதல்கட்டமாக நாங்கள் தீர்மானித்திருக்கக்கூடியவை பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்களை நடத்துவது என்றும் 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் அனைத்து அரசியல் கட்சிகளையும் அணுகி இந்த எட்டு வழிச்சாலை உள்ளிட்ட அனைத்து இயற்கை அழிவுத் திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பதை தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற வைக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளோம். அடுத்து இந்தத் திட்டங்களுக்கு எதிராகச் சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்தி கைதாவது என்றும் முடிவெடுத்துள்ளோம். மேலும், இந்தத் திட்டத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் வல்லுநர்களின் பேட்டிகள் அடங்கிய வெளியீடுகளையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அடுத்துப் பேசிய அரங்க.குணசேகரன், “எட்டு வழிச்சாலை என்பது தனித்த ஓர் அழிவுத் திட்டமல்ல, பாரத் மாலா, சாகர் மாலா என்கிற கனிம வளக் கொள்ளைத் திட்டத்தின் ஒரு பகுதி. உலகமயமாக்கலின் மூலம் உலக வர்த்தக நிறுவனத்தோடு இணைந்து தமிழகத்தைக் கொள்ளையடிக்கும் திட்டத்தின் ஒரு பகுதி. எனவே, இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றார்.

அடுத்தகட்டமாக வழக்கறிஞர் பிரிவு, மருத்துவப் பிரிவு உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சட்டபூர்வமான உதவிகளும் வழங்க இருப்பதாகத் தெரிவித்தனர். உளவியல் ரீதியாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும்” என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க