Published:Updated:

‘குருதியைக் கொடுத்தாவது தாமரையை மலரச் செய்வோம்’ - தமிழிசை சபதம்

தமிழிசை

‘குருதியைக் கொடுத்தாவது தாமரையை மலரச் செய்வோம்’ - தமிழிசை சபதம்
‘குருதியைக் கொடுத்தாவது தாமரையை மலரச் செய்வோம்’ - தமிழிசை சபதம்

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில மாவட்ட மண்டல தலைவர்கள் மாநாடு சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே உள்ள சந்திர மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன், நரேந்திரன், முருகானந்தம் மற்றும் சேலம் மாவட்டச் செயலாளர் கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். குருதியைக் கொடுத்தாவது தாமரையை மலரச் செய்வோம். வரும் 2019-ல் தமிழகத்திலிருந்து பல பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்புவோம். இனி இங்கு காவி மட்டுமே கூட்டத்தைக் கூட்ட முடியும். கறுப்பு மண்ணான கரிசல் மண்ணைக் காவி அப்புறப்படுத்தி நிச்சயம் தாமரை மலர்ந்தே தீரும்.

இது நாத்திக பூமி அல்ல. ஆன்மிக பூமி. இனிமேல் ஸ்டாலின் இருக்கட்டும், திருநாவுக்கரசு இருக்கட்டும், வைகோ இருக்கட்டும்,  திருமாவளவன் இருக்கட்டும், கம்யூனிஸ்ட் ஆகட்டும் சோட்டா சீமானாக இருக்கட்டும் வாங்க விவாதத்துகு. உங்களுக்கு எங்க இளைஞர்களே பதில் கொடுப்பார்கள். மோடி என்ன தமிழகத்துக்கு பண்ணினார் என்று ஸ்டாலின் கேட்கிறார். சேலத்துக்கு விமானம் வந்ததால் 30 சதவிகிதம் வர்த்தகம் அதிகரித்திருக்கிறது. ஸ்டாலின் அவருடைய உதவியாளர் திருமணத்துக்கு 40 லட்சம் செலவு செய்து தனி விமானத்தில் வருகிறார். சாமானிய மக்கள் விமானத்தில் வருவது அவருக்குப் பிடிக்கவில்லை.

முத்ரா வங்கியின் மூலம் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவர் சொல்லுகிறார் செல்வோம், சொல்வோம், வெல்வோம் என்கிறார். நாங்களும் இலங்கைத் தமிழர்கள் ரத்தத்தின் மேல் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதனோடு கூட்டணி வைத்திருக்கிற காங்கிரஸ் கட்சியைப் பற்றியும் மக்களிடம் சொல்லி தமிழகத்தைவிட்டு விரட்டி அடிப்போம். வெளிநாட்டு பயணம் மோடி 48 முறையும் மன்மோகன்சிங் 38 முறையும் சென்றார்கள். ஆனால், மோடி வெளிநாடு சென்றதால் அந்நிய முதலீடு சீனாவை விடச் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்து தனிமைப்பட்டுள்ளார். தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டினால் ஸ்டாலின் பெயர் தெரியாது. அவர் நம் தலைவர் மோடியைப் புரோக்கர் என்று விமர்சிக்கிறார். நம் ரத்தம் துடி துடிக்க வேண்டும். தமிழகம் இனி அண்ணா மண் அல்ல ஆண்டவன் மண், பெரியார் மண் அல்ல பெரியாழ்வார் மண், கரிசல் மண் அல்ல காவி மண். காவி இளைஞர்களின் கை உயர உயரக் காங்கிரஸ் கை உடையும்.

இன்று பெட்ரோல் விலை 14 ரூபாயும், டீசல் 9 ரூபாயும் குறைந்துள்ளது. நியாயவிலை கடைகளுக்கும், சத்துணவுத் திட்டத்துக்கும், சாலைத் திட்டத்துக்கும் மத்திய அரசு பல கோடி வழங்கியுள்ளது. மோடியின் திட்டங்களை மக்களிடம் சொல்ல வேண்டும். நாடும் நமதே நாற்பதும் நமதே என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லுகிறது. அவர்கள் அப்படிச் சொல்லக் கூடாது. நாடும் நமதே ஊழலும் நமதே. நாடும் நமதே திகாரும் நமதே என்று சொல்ல வேண்டும்.

நான் தாமரை மலரும் என்பதைக் கிண்டல் செய்கிறார்கள். தி.மு.க, தாமரை மலராது என்கிறது. கம்யூனிஸ்ட் மொட்டுகூட வளராது என்கிறது. சீமான் படர்தாமரை வளரலாம், தாமரை வளராது என்கிறார்கள். தமிழகத்தில் ஒரு சின்னம் அனைத்து அரசியல் கட்சிகளையும் தூங்கவிடாமல் செய்கிறது என்றால் அது தாமரை'' என்று சொல்லி முடித்தார்.