Published:Updated:

‘நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கண்காட்சி’ - பிளாஸ்டிக் கொடியால் வந்த குழப்பம்!

‘நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கண்காட்சி’ - பிளாஸ்டிக் கொடியால் வந்த குழப்பம்!
‘நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கண்காட்சி’ - பிளாஸ்டிக் கொடியால் வந்த குழப்பம்!

தூத்துக்குடியில் நடைபெற்ற நெகிழிக்கு மாற்றுப் பொருட்கள் குறித்த கண்காட்சியில் தடைசெய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என்ற வரிசையிலும், கண்காட்சி அரங்குகளிலும் என இரண்டு இடங்களிலும் பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் வைக்கப்பட்டிருந்தால் குழப்பம் ஏற்பட்டது. 

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடையை மீறினால், 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசு.  இந்நிலையில், “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் தூத்துக்குடியில் நெகிழிக்கு மாற்றுப் பொருட்கள் குறித்த இரண்டு நாள் கண்காட்சி இன்று துவங்கியது. கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி., முரளிரம்பா, வருவாய் அலுவலர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் முதலில் பேசிய எஸ்.பி., முரளிரம்பா, “பிளாஸ்டிக் பொருட்களின் வரவும் பயன்பாடும் கடந்த 15 வருடங்களில்தான் அதிகரிகரித்துள்ளது. தற்போது பிளாஸ்டிக் இல்லாமல் நாம் இல்லை என்ற நிலையில் இருக்கிறோம். தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 14 பொருட்களுமே நாம் தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கச் செல்லும் முன் ஒருமுறையாவது பயன்படுத்தி வரும் பொருட்கள்தான். ஒரு பிளாஸ்டிக் தாள் மறைய 600 முதல் ஆயிரம் வருடம் வரை ஆகலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எரியும் பிளாஸ்டிக்குகளை சாப்பிடுவதால் கால்நடைகளும், அவை கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. எந்த அளவிற்கு பிளாஸ்டிக்கின் பயன்பாடுகளை புரிந்து கொள்கிறோமோ, அந்த அளவிற்கு அதனால் ஏற்படும் தீமைகளையும் புரிந்து கொள்ளவதில்லை. இந்த தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் உள்ளன.” என்றார்.

அடுத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, “பிளாஸ்டிக் பொருட்களுக்கு திடீரென தடை விதிக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே இது குறித்து வியாபாரிகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டது. மாநகராட்சிப் பகுதியில் உள்ள உணவங்களில் பாத்திரங்கள், பைகள் கொண்டு வந்து உணவு வாங்கினால் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுவரை வியாபாரிகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தெரிவிக்கப்பட்டது. சில நிறுவனங்கள் முற்றிலுமாக துணிப்பைகளுக்கு மாறிவிட்டன. இருப்பினும், ஜனவரி 1-ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புக்குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும், விநியோகம் செய்யப்பட்டாலும் பறிமுதல் செய்யப்படும், சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

இறுதியாகப் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முடிவு கட்டுவதற்க்காகத்தான் தமிழக அரசு அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மொத்த பிளாஸ்டிக் பயன்பாட்டில் தற்போது 6 சதவீதப் பொருட்கள் மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே ஒரு பொருளைப் பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும் என்பதை விட, தீமை ஏற்படும் என்றால்தால் அது வேகமாக மக்களிடம் சென்றடையும் எனவே பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்துதான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தடையால் மண்பாண்டம், பாக்குமட்டை தட்டுகள், துணிப்பைகள் உள்ளிட்ட நெகிழிக்கு மாற்றுப் பொருளாக அறிவிக்கப்பட்ட பொருட்களின்  உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமும் உயரும்” என்றார்.

தொடர்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. விழா நிறைவில், மாற்றம் மாணவர்களிடமிருந்து வரவேண்டும் என்பதற்க்காக வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.  அதன் பின்னர், மேடையில் உள்ள டேபிளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்படாததைக் கண்டு பதறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, திடீரென அதிகாரிகளை அழைத்து, “அம்மா படம் வைக்கலயா?” எனக் கோபத்துடன் கேட்க, பதற்றத்துடன் செய்தித்துறை அலுவலக உதவியாளர் ஜெயலலிதா படத்துடன் பூங்கொத்தினை வைத்தார். அதன் பிறகே சாந்தமானார் அமைச்சர்.

கண்காட்சி அரங்கின் நுழைவு வாயிலில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களுடன் பிளாஸ்டிக் தேசியக்கொடியும் தடைசெய்யப்பட்ட பொருளாகவே காணப்பட்டது. ஆனால், நெகிழிக்கு மாற்றுப் பொருட்கள் குறித்த கண்காட்சி அரங்குகளிலும் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளின் அலட்சியத்தால்,   இரண்டு இடங்களிலும் பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் வைக்கப்பட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியின் முடிவில் பரவலாகப் பேசப்பட்ட இக்குற்றச்சாட்டு ஆட்சியரின் காதுகளுக்குப் போகவே, பிளாஸ்டிக் கொடியை உடனே அப்பறப்படுத்துமாறு கூறினார். கொடி அப்புறப்படுத்தப்பட்ட பிறகே காரில் கிளம்பிச் சென்றார்.