Published:Updated:

`எந்த துறை அமைச்சர் என்றே தெரியாமலே இருக்கிறார்கள்' - கடம்பூர் ராஜூவை விமர்சித்த தி.மு.க எம்.எல்.ஏ

`எந்த துறை அமைச்சர் என்றே தெரியாமலே இருக்கிறார்கள்' - கடம்பூர் ராஜூவை விமர்சித்த தி.மு.க எம்.எல்.ஏ
`எந்த துறை அமைச்சர் என்றே தெரியாமலே இருக்கிறார்கள்' - கடம்பூர் ராஜூவை விமர்சித்த தி.மு.க எம்.எல்.ஏ

”ஜால்ரா செய்திகளை மட்டும் போட வேண்டும், எதிர்ப்பு செய்திகளை போடக்கூடாது எனச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எந்த துறைக்கு அமைச்சராக இருக்கிறார், என்பது தெரியாமல் எப்படி நடக்க  வேண்டும் எனத் தெரியாத  அமைச்சர் கடம்பூர் ராஜூவின் செயல் வன்மைகையாகக் கண்டிக்கத்தக்கது. அமைச்சரின் இந்தச் செயல் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக ஆக்கி உள்ளது." என தி.மு.க எம்.எல்.ஏ., கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஊராட்சி கழக செயல்வீரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், தூத்துக்குடி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான கீதா ஜீவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ”ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை. இவ்விவகாரத்தில் மக்களின் உணர்வுகளையும் தமிழக அரசு மதிக்கவில்லை. ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தில் ஆலையை மூடிட சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் 100-வது நாள் போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்களது பிரேத பரிசோதனை அறிக்கை சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதில், 12 பேருக்குத் தலை, மார்பு, கழுத்து, வாய் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கித் தோட்டாக்கள் நேரடியாகத் துளைக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் மூலமே, போராடும் மக்களை எப்படி அடக்கி ஒடுக்க வேண்டும். அச்சுறுத்த வேண்டும் என முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு செயல்பட்டுள்ளது என்பதும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனவும் கண்கூடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.”என்றார்.

”அ.தி.மு.க., கூட்டத்தில் அமைச்சர் கடம்பூராஜூ தரப்பிற்கும், விளாத்திகுளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் தரப்பிற்கும் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பு குறித்த செய்தியை வெளியிட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு அமைச்சர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது  குறித்தும், கைகலப்பு செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்களை அரசு மற்றும் அ.தி.மு.க., நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது.” என அமைச்சர் தரப்பு கூறப்பட்டதாக வாட்ஸ் அப்களில்  பரவிய குற்றச்சாட்டு குறித்தும் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்குப் பதில் கூறிய கீதா ஜீவன், “ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ளது செய்தித்துறை. இதனை ஒடுக்க வேண்டும் என நினைப்பது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குவது போன்றது.

ஜால்ரா செய்திகளை மட்டும் போட வேண்டும், எதிர்ப்பு செய்திகளை போடக்கூடாது எனச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் எந்த துறைக்கு அமைச்சராக இருக்கிறார், எப்படிச் செயல்பட வேண்டும் எனத் தெரியாமல் சொல்வது வன்மைகையாகக் கண்டிக்கத்தக்கது. சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை மக்களுக்குக் கூறுவது செய்தித்துறைதான். அமைச்சரின் இந்தச் செயல் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக ஆக்கி உள்ளது. ஒரு பிரச்னை என்றால் அதனைத் தீர்ப்பதற்கு வழிவகை  செய்ய வேண்டுமே தவிர, மிரட்டக்கூடாது. அதனைச் செய்யமுடியவில்லை என்றால், அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதான்.” என்றார்.