வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (30/12/2018)

கடைசி தொடர்பு:12:00 (30/12/2018)

‘நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை’ - புதுச்சேரி முதல்வரைச் சாடும் கிரண் பேடி

புதுச்சேரி முதல்வருக்கும் அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நீண்ட நாள்களாக வார்த்தை போர் நிலவி வருகிறது.  ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சித்துக்கொண்டே உள்ளனர். 

நாராயணசாமி

இந்நிலையில் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ‘ புதுச்சேரி மக்களுக்குப் பொங்கல் பொருள்கள் வழங்கும் கோப்பில் துணை நிலை ஆளுநர் கையெழுத்திட மறுக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். புதுச்சேரி அரசுக்குத் தொல்லை தரவே கிரண் பேடியை துணை நிலை ஆளுநரகாக நியமித்துள்ளது மத்திய அரசு’ எனக் கடுமையாக விமர்சித்தார்.

கிரண் பேடி

 ‘தன்னிடம் எந்த கோப்புகளும் வரவில்லை. அவ்வாறு கோப்புகள் வந்து அது மறுக்கப்பட்டிருந்தால் மீண்டும் அனுப்பலாம். கோப்புகள் வரவில்லை என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது’ என ஆளுநர் கிரண் பேடி பதிலளித்திருந்தார்.

இதற்கிடையில் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கிரண் பேடி, “ ஒரு ரப்பர் ஸ்டாம்ப்தான் எதுவும் தெரியாமல் எடுத்துக் குத்தினால் சீல் செய்யும். நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை. என்னிடம் கோப்புகள் வந்தால் நான் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பண மதிப்பு போதுமா அல்லது அதிகமா போன்ற அனைத்து விசயங்களையும் பார்க்க வேண்டும் அதுதானே விதி” எனப் பேசியுள்ளார்.