Published:Updated:

‘அமைச்சர் ஆரம்பித்த ஆட்டம்; எடுத்தார் ஓட்டம்!’- கரூரில் தொடங்கிய போஸ்டர் யுத்தம்

‘அமைச்சர் ஆரம்பித்த ஆட்டம்; எடுத்தார் ஓட்டம்!’- கரூரில் தொடங்கிய போஸ்டர் யுத்தம்
‘அமைச்சர் ஆரம்பித்த ஆட்டம்; எடுத்தார் ஓட்டம்!’- கரூரில் தொடங்கிய போஸ்டர் யுத்தம்

 தி.மு.கவுக்கு தாவிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பும்,போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பும் கடுமையான போஸ்டர் யுத்தத்தில் இறங்கியுள்ளதால் கரூர் அரசியல் நிலவரம் பரபரப்பாக இருக்கிறது.

அ.ம.மு.கவின் அமைப்புச் செயலாளராகவும்,கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இவர் வகித்து வந்த அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பதவி சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் சிக்கி,பறிக்கப்பட்டது. இதனால்,'மேல்முறையீடு செய்வது' தொடர்பாக டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 14 ம் தேதி தனது ஆதரவாளர்கள் 2000 பேரோடு போய் சென்னையில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் ஐக்கியமானார் செந்தில்பாலாஜி.

அதோடு,கடந்த 27 ம் தேதி ஸ்டாலினை கரூர் மாநகருக்கு அழைத்து வந்து மாநில மாநாடு போல் பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடத்தினார். அதில் அ.ம.மு.க உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 30425 பேரை தன் தலைமையில் தி.மு.கவில் இணைத்தார். இதற்கிடையில்,இவரது அரசியல் எதிரியும்,போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்,'இன்னும் ஒரு வாரத்தில் கரூர் மாவட்ட ஒட்டுமொத்த அ.ம.மு.க கூடாரத்தையும் அ.தி.மு.கவில் இணைப்பேன்' என்று பத்திரிகையாளர்களிடம் சபதம் போட்டார். அதோடு,'பதவிக்காக செந்தில்பாலாஜி அஞ்சாவது முறை கட்சி தாவி இருக்கிறார். அங்கேயும் அவர் நிலைக்கமாட்டார்' என்று போட்டுத் தாக்கினார்.

இந்நிலையில்,கடந்த 27 -ம் தேதி செந்தில்பாலாஜி பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடத்துவதால்,அதை முக்கியத்துவம் பெறாமல் செய்வதற்காக அன்றே எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் கரூரில் இருந்து மாற்றுக்கட்சியில் இருந்து அ.தி.மு.கவில் இணைக்கும் விழாவை நடத்தினார். முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் 3000 ம.தி.மு.க, அ.ம.மு.க தொண்டர்கள் இணைந்ததாக சொல்லப்பட்டது. 27-ம் தேதி தான் நடத்திய பொதுக்கூட்டத்தில்,'தம்பிதுரையின் கைத்தடி' என்று எம்.ஆர்.விஜயபாஸ்கரை வறுத்தெடுத்தார் செந்தில்பாலாஜி. அதோடு,"தி.மு.க ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறைக்குச் செல்ல வேண்டியதுதான்" என்று போட்டுத் தாக்கினார்.
 

இந்நிலையில்தான்,இவர்களின் மோதல் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. இரண்டு தரப்பும் போஸ்டர் யுத்தம் நடத்த தொடங்கி இருக்கிறது. திடீரென கரூர் நகர சுவர்களை சில போஸ்டர்கள் ஆக்ரமித்துள்ளது. அப்படி செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களாக நீலிமேட்டைச் சேர்ந்த 16 வார்டு V.S.B குரூப்ஸ் என்ற பெயரில் ஒரு போஸ்டரை அடித்துள்ளனர். அதாவது,'இனி V.S.B விளையாட்டு ஆரம்பம்' என்று வி.செந்தில்பாலாஜி என்ற பெயரின் சுருக்கத்தை போட்டு போஸ்டராக அடித்து முதல் அரசியல் பரபரப்பு போணியை ஆரம்பித்து வைத்தார்கள். இதைக் கண்டு கொதித்தெழுந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தங்கள் பங்குக்கு செந்தில்பாலாஜிக்கு எதிராக போஸ்டர்கள் அடித்து ஒட்டி அதகளப்படுத்தி இருக்கிறார்கள்.

அமைச்சரின் ஆதரவாளரான தாந்தோணி பகுதியைச் சேர்ந்த இரா.சுரேஷ் என்பவர்,'மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆரம்பித்த ஆட்டம்...ஒருவர் எடுத்தார் ஓட்டம்' என்று செந்தில்பாலாஜி தி.மு.க சென்றதை வசைபாடி நோட்டீஸ்கள் ஒட்டினார். அதோடு,அமைச்சரின் மற்றொரு ஆதரவாளரான மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மதுசூதனன் என்பவர் அடித்த நோட்டீஸ்களில் செந்தில்பாலாஜி கட்சி மாறியதை பஞ்சராக்கும்விதமாக,'மாண்புமிகு அமைச்சர் அவர்களின் திட்டம்!. இதனால் ஒருவருக்கு நட்டம்!!. அதன்விளைவு எடுத்தார் ஓட்டம்!!!' வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அமைச்சர் கரூர் தொகுதிக்கு கொண்டு வந்த திட்டங்களை பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு,ஓடுவது போல ஒரு படத்தையும் அச்சிட்டிருந்தனர். இதனால்,கோபமான செந்தில்பாலாஜி தரப்பு அடுத்த போஸ்டர் யுத்தத்தை தொடங்க யோசித்துக் கொண்டிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இன்னாள்,அமைச்சர்களின் இந்த திடீர் போஸ்டர் யுத்த தாக்குதலால் கரூர் மாவட்ட அரசியல் களம் திக்குமுக்காடிக் கிடக்கிறது என்றே சொல்ல வேண்டும்.