Published:Updated:

பா.ஜ.க. அமைச்சர்களால் மாநாட்டைப் புறக்கணித்த ஓ.பி.எஸ், அமைச்சர் வளர்மதி!

பா.ஜ.க. அமைச்சர்களால் மாநாட்டைப் புறக்கணித்த ஓ.பி.எஸ், அமைச்சர் வளர்மதி!
பா.ஜ.க. அமைச்சர்களால் மாநாட்டைப் புறக்கணித்த ஓ.பி.எஸ், அமைச்சர் வளர்மதி!

சமூக நீதி மாநாட்டுக்கு பா.ஜ.க. அமைச்சர்கள் மூன்று பேர் வரும் தகவல் கிடைத்ததால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வளர்மதி ஆகியோர் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் சென்னையில் வீரபோயர் இளைஞர் பேரவை சார்பில் நடந்த டி.என்.டி உரிமை மீட்பு சமூக நீதி மாநாட்டில் கலந்துகொள்ளாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வளர்மதி ஆகியோர் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய பா.ஜ.க-வின் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவரும் வீரபோயர் இளைஞர் பேரவையின் மாநில பொதுச் செயலாளருமான எம்.அருளிடம் பேசினோம். 

``கடந்த 1979-ம் ஆண்டு முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தசமயத்தில் 68 சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை டி.என்.டி என்ற பிரிவிலிருந்து டி.என்.சி என்ற பிரிவுக்கு மாற்றி (அரசாணை 1310) உத்தரவிட்டார். இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பழங்குடியினருக்கான சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, மத்திய அரசு வழங்கும் நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. டி.என்.சி என்பது வெள்ளைக்காரர்களை எதிர்த்த குற்றப் பரம்பரையாக கருதப்படுகிறது. அதை மையப்படுத்தித்தான் நடிகர் கார்த்தி நடித்த தீரன் படம் எடுக்கப்பட்டது.

வீரபோயர் இளைஞர் பேரவை சார்பில் சமூக நீதிமாநாட்டை கடந்த 27-ம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடத்த ஏற்பாடு செய்தோம். இந்த மாநாட்டுக்கு மத்திய அமைச்சர்கள் தாவீர் சந்த் கெலாட், சந்தோஷ் கங்கவர், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வளர்மதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தோம். நாடாளுமன்றத்தில் நடந்த முத்தலாக் மசோதா விவாதத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றதால் அவர்கள் மாநாட்டுக்கு வரவில்லை. 

மாநாட்டுக்கு கண்டிப்பாக வருவதாகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வளர்மதி ஆகியோர் வாக்குறுதி அளித்தனர். ஆனால், அவர்களும் வரவில்லை. அவர்களை வரவேற்று பேனர்களை வைத்திருந்தோம். பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட மற்ற சிறப்பு விருந்தினர்கள் மாநாட்டுக்கு வந்திருந்தனர். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய - மாநில அரசுக்கு அனுப்பியுள்ளோம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர் வளர்மதியும் மாநாட்டுக்கு  வராதது வருத்தமளிக்கிறது'' என்றார். 

பா.ஜ.க.வினர் கூறுகையில், ``ஜெயலலிதா மறைந்த பிறகு பா.ஜ.க.வின் சொல்படிதான் அ.தி.மு.க. நடப்பதாக பேசப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வுக்கும் சமூக நீதி மாநாட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனால்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோரை மாநாட்டுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களும் வருவதாகத் கூறினர். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அவர்கள் வரவில்லை என்று அவர்களின் ஆதரவாளர்கள் சொல்கின்றனர்" என்றனர். 

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ``அழைப்பிதழைப் பார்த்து மாநாட்டுக்கு வருவதாகக் கூறினோம். அதன்பிறகுதான் பா.ஜ.க.வைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் மாநாட்டுக்கு வருவதாகத் தகவல் தெரிந்தது. இந்தச் சமயத்தில்  ஓ.பி.எஸ். மாநாட்டுக்குச் சென்றால் தேவையில்லாத விமர்சனங்கள் வரும். இதனால் மாநாட்டுக்குச் செல்லவில்லை" என்றனர். 

இதுகுறித்து அ.தி.மு.க. தரப்பில் பேசியவர்கள், ``விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை பரபரப்பாக தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பா.ஜ.க. அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டுக்குச் சென்றால் பல்வேறு யூகங்கள் ஏற்படக் காரணமாகிவிடும். மேலும், கட்சித் தலைமையிடமிருந்தே மாநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்ற தகவல் சம்பந்தபட்டவர்களுக்குச் சொல்லப்பட்டதால் மாநாட்டுக்கு அவர்கள் செல்லவில்லை" என்றனர். 

அமைச்சர் வளர்மதி ஆதரவாளர்கள் கூறுகையில், `அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்ச்சிக்கெல்லாம் செல்ல முடியாது. அமைச்சர் என்ற முறையில் எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால், சில காரணங்களுக்காக நாங்கள் செல்லவில்லை'' என்றனர்.