Published:Updated:

சொந்தக் கட்சி பிரமுகருடன் நடு ரோட்டில் சண்டையிட்ட கோவை அ.தி.மு.க எம்.எல்.ஏ மகன்!

கோவை அ.தி.மு.க எம்.எல்.ஏ மகன் நடுரோட்டில் சொந்தக் கட்சி பிரமுகரிடம் சண்டையிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனின் மகன் கோபாலகிருஷ்ணன் இன்று பிற்பகல்  TN 37 CC 7 என்ற எண் கொண்ட இனோவா காரில் டவுன்ஹால் பகுதியில் வந்து கொண்டிருந்தார். கோபாலகிருஷ்ணனின் நண்பர் காரை ஓட்டி வந்த நிலையில், பின்னால் அ.தி.மு.க கொடியுடன் TN10 W 6667 என்ற எண் கொண்ட மிஷுபிஷி காரில் ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில், “போன் பேசிக்கொண்டே ஏன் வாகனத்தை ஓட்டுகிறாய்?” என்று கேள்வி எழுப்பியவாறு காரில் இருந்து இறங்கி, கோபாலகிருஷ்ணனுடன் வந்தவரை அந்த நபர் தாக்கியுள்ளார். அதற்கு, “நான் சட்டமன்ற உறுப்பினரின் கார் ஓட்டுநர்” என்று கோபாலகிருஷ்ணனுடன் வந்தவர் கூறியுள்ளார்.

இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கு இருந்தவர்கள் ஒன்று கூட, மிஷுபிஷி காரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். பொது இடத்தில் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் சண்டை போட்டு கொண்டது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் மகன் கோபாலகிருஷ்ணனிடம் பேசியபோது, “தகராறு எல்லாம் இல்ல தலைவா. ரெண்டு காரோட கண்ணாடியும் இடிச்சுருச்சு. அதான், பேசிட்டு இருந்தோம். கொஞ்சம் ஆக்ரோஷமா பேசினதை, சிலர் கைகலப்புனு கிளப்பி விடறாங்க. அப்படி எல்லாம் இல்ல” என்றார்.

கோபாலகிருஷ்ணன் சர்ச்சையில் மாட்டுவது இது முதல்முறை இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவை புலியகுளம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் சொந்தக்கட்சி பிரமுகர்களிடம் கோபாலகிருஷ்ணன் சண்டையிட்ட வீடியோ வைரலாகியது குறிப்பிடத்தக்கது.