Published:Updated:

‘டீ கேட்டவரை கட்சியில் சேர்த்த அ.ம.மு.க நிர்வாகிகள்!’ - இது கரூர் கலாட்டா!

‘டீ கேட்டவரை கட்சியில் சேர்த்த அ.ம.மு.க நிர்வாகிகள்!’ - இது கரூர் கலாட்டா!
‘டீ கேட்டவரை கட்சியில் சேர்த்த அ.ம.மு.க நிர்வாகிகள்!’ - இது கரூர் கலாட்டா!

டீ வாங்கித் தரும்படி கேட்ட நபரையும்,18 வயதுகூட நிரம்பாத இளைஞர்களையும் அ.ம.மு.க-வில் சேர்த்து, 'கரூரில் அ.ம.மு.க கூடாரம் காலியாகவில்லை' என்று சூளுரைத்திருக்கிறார்கள் நிர்வாகிகள். 

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி. இவர், அ.ம.மு.க-வில் இருந்தவரை கட்சி கட்டுக்கோப்பாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 14-ம் தேதி, ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். தொடர்ந்து,கடந்த 27 ம் தேதி ஸ்டாலினை அழைத்துவந்து கரூரில் பொதுக்கூட்டம் நடத்தி, தன்னோடு 30,425 பேரை தி.மு.க-வில் இணைத்தார். அந்த 30,425 பேர்களில் அநேககம் பேர் கரூர் அ.ம.மு.க கட்சியின் தொண்டர்கள்தான் என்று செந்தில்பாலாஜி தரப்பு சொல்கிறது.

இதற்கிடையில்,செந்தில்பாலாஜியின் அரசியல் எதிரியான போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'கரூர் மாவட்ட அ.ம.மு.க கூடாரத்தை அ.தி.மு.க-வில் இணைத்து, கூண்டோடு காலி செய்கிறேன்' என்று சூளுரைத்தார். அதோடு, தினமும் நூற்றுக்கணக்கானவர்களை அ.தி.மு.க-வில் இணைத்ததாக அ.தி.மு.க அதிகரப்பூர்வ ஃபேஸ்புக் தளத்தில் படங்களைப் பதிவேற்றியும் வந்தனர். இதனால், டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளரான பழனியப்பனை அனுப்பி, கரூரில் கூட்டம் போட வைத்து, அ.ம.மு.க-வினரை கட்சி மாறாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கச் சொன்னார். ஆனால், செந்தில்பாலாஜி பொதுக்கூட்டம் நடத்திய அதே 27-ம் தேதி, அமைச்சர் தரப்பும் கரூர் மாவட்ட அ.ம.மு.க மற்றும் ம.தி.மு.க-வைச் சேர்ந்த 3000 பேர்களை சென்னைக்கு அழைத்துப் போய், முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க-வில் சேர்க்கவைத்தார்.         


 இதனால்,கட்சி மாறும் தொண்டர்களை அணைபோட்டுத் தடுக்க, கட்சியின் மாவட்டச் செயலாளரான தங்கவேல், கழக அவைத் தலைவர் சுப்ரமணியன், மாநில அம்மா பேரவைச் செயலாளர் சாகுல் அமீது , கரூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் நாகராஜ் என்று பதவிகளில் ஆள்களை நியமித்தார். அப்படி பொறுப்புகளில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், கரூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, பூத்தூவி மரியாதை செய்தனர். இதில், தமிழக திராவிடக் கட்சி என்ற அமைப்பின் தலைவர் ராஜ் கவுண்டர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய மாவட்டச் செயலாளர், அதே மேடையில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய 10-க்கும் மேற்பட்டவர்கள் விழா மேடையிலே தங்களை அ.ம.மு.க கட்சியில் இணைத்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்களில் 5 பேர்கள் 18 வயது நிரம்பாத இளைஞர்கள்.

அப்போது பேசிய மாவட்டச் செயலாளர் தங்கவேல், " 'கரூரில் அ.ம.மு.க  கூண்டோடு காலி'ன்னு அமைச்சர் தரப்பும், பத்திரிகைகளும் சொன்னது. ஆனால், இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறார்களே... இதுலயே தெரியவில்லை. கரூரில் அ.ம.மு.க அப்படியேதான் உள்ளது. அ.ம.மு.க இங்கே டம்மியாக இருந்தால், தி.மு.க உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து  10-க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து சேர்வார்களா" என்று முழங்கினார்.

அப்போது, அ.ம.மு.க நிர்வாகி ஒருவர் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை மேடையேற்றி, அவருக்கு சால்வை அணிவித்து, அவராக வந்து தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டதாக அறிவித்தார். ஆனால், நடந்த கதையே வேறு. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருந்த டீக்கடையில் நிருபர்கள் டீ குடித்துக்கொண்டிருந்தனர். அ.ம.மு.க நிர்வாகிகளும் டீ குடித்தனர். அப்போது அந்த வழியாக போன அந்த நபர், அ.ம.மு.க நிர்வாகி ஒருவரிடம், 'ரொம்பப் பசிக்குது. டீ வாங்கி தர்றீங்களா?' என்று பரிதாபமாகக் கேட்டார். ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாக அவரைப் பார்த்த அந்த நிர்வாகி, பிறகு என்ன நினைத்தாரோ அவருக்கு டீ வாங்கி  கொடுத்தார். அந்த நபர் டீ குடித்து முடிக்கும் வரை காத்திருந்த அந்த நிர்வாகி, படாரென அவரை அழைத்துப் போய் மேடையேற்றி, கட்சியில் இணைத்ததாக அறிவித்தார். ஆஹான்!