Published:Updated:

மீண்டும் குக்கர் சின்னம் - தினகரன் மனுவால் மிரளும் கட்சிகள்

மீண்டும் குக்கர் சின்னம் - தினகரன் மனுவால் மிரளும் கட்சிகள்
மீண்டும் குக்கர் சின்னம் - தினகரன் மனுவால் மிரளும் கட்சிகள்

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அந்தத் தொகுதியில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தனது சொந்த மாவட்டமான திருவாரூரில் போட்டியிடும்போது, இதுதான் எனது கடைசி தேர்தலாக இருக்கும் என பரப்புரையின்போது பேசினார். உடல்நலக்குறைவால் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கருணாநிதி காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் 10-ம் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 28-ம் தேதி வாக்குப்பதிவும், 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

திருவாரூர் தொகுதியில் ஆளும் அ.தி.மு.க இதுவரை ஒரு தேர்தலில் கூட வெற்றிபெற்றதில்லை. அங்கு கம்யூனிஸ்டுகள் மற்றும் தி.மு.க-வின் கையே ஓங்கியுள்ளது. தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அந்தக்கட்சி சந்திக்கப்போகும் முதல் தேர்தல். மேலும் இது கருணாநிதியின் சொந்த தொகுதி என்பதால் இதில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிர்பந்தம் தி.மு.க.வுக்கு உள்ளது. 

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக பிளவுப்பட்டது. அதன்பின்னர் நடந்தேறிய பெரிய நாடகத்துக்குப் பிறகு ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் ஒன்றிணைந்தனர். அணிகள் இணைப்பு பின்னர் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது. அணிகள் இணைந்தது மனங்கள் இணையவில்லை என அ.தி.மு.க வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் குக்கர் விசிலடித்தது. சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வெற்றிபெற்றார். ஆனால், 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் வெளியான தீர்ப்பு அவருக்கு இடியாக அமைந்தது. சமீபத்தில் டி.டி.வி தரப்பில் இருந்த செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைந்தார்.

டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க கூடாரம் காலியாகி வருவதாகவும் டி.டி.வி தன்னிச்சையாக செயல்படுகிறார் என பேச்சும் அடிபட்டது. இதற்கிடையில் இந்த இடைத்தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு தங்களுக்கே இருப்பதாக டி.டி.வி தினகரன் பேசினார். சமீபத்தில் அக்கட்சி கூட்டத்தில் பேசிய தினகரன், ``திருவாரூர் தொகுதியில் அ.ம.மு.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். கருணாநிதி இரண்டு முறை அங்கு வெற்றி பெற்றுள்ளார் என நினைக்கலாம். கருணாநிதி நின்ற வரையில்தான் அது அவரது சொந்த ஊர். உங்கள் வீட்டு பிள்ளையாகிய எனக்கும் அதுதான் சொந்த ஊர். திருவாரூரில் திருத்துறைப்பூண்டி எப்படி இருக்கிறதோ அப்படிதான் நான் பிறந்த திருத்துறைப்பூண்டியும் இருக்கிறது. நமது மாவட்டக்காரர் என கருணாநிதிக்கு வாக்களித்திருக்கலாம். ஆனால், வருகின்ற இடைத்தேர்தலில் நமது மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை வெற்றிபெற வைக்க வேண்டும். ஆர்.கே.நகர் மக்களைப் போல திருவாரூர் மக்களும் நமக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை அளிப்பார்கள்'' என்று பேசினார்.

இந்த நிலையில், திருவாரூர் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டி.டி.வி தினகரன் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும், தங்களுக்குக் குக்கர் சின்னத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்காதவாறு அ.தி.மு.க தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. தினகரன் நீதிமன்றத்தை நாடியிருப்பதால் சட்ட ரீதியாகவே இதைத் தடுத்துவிடலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. ஒரு ஓட்டுக்கு ரூபாய் 10,000 கொடுத்தாவது, மாற்றுக் கட்சி வாக்காளர்களை வளைத்துப்போடத்  திட்டம் வகுத்திருப்பதாகத் திருவாரூர் அ.தி.மு.க வட்டாரத்தில் பேசப்படுகிறது.