Published:Updated:

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது ஏன்? - விவரிக்கும் கருணாஸ் எம்.எல்.ஏ 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது ஏன்? - விவரிக்கும் கருணாஸ் எம்.எல்.ஏ 
முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது ஏன்? - விவரிக்கும் கருணாஸ் எம்.எல்.ஏ 
முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது ஏன்? - விவரிக்கும் கருணாஸ் எம்.எல்.ஏ 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கருணாஸ் எம்.எல்.ஏ, தொகுதிப் பிரச்னை, சமுதாயம் என ஏழு கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்துள்ளார். அரைமணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில், அரசியல் பேசவில்லை என்று கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார். 

இரட்டை இலை சின்னத்தில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாஸ் எம்.எல்.ஏ., ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். இதனால், அவர்மீது நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டது. இதனால் சபாநாயகருக்கு எதிராக, கருணாஸ் சார்பில் சட்டப்பேரவைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், சட்டமன்ற விதி 69-ன்படி அவரை நீக்க வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் தனபால், ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகவும்  குறிப்பிடப்பட்டது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து,  போலீஸ் துணை கமிஷனரை விமர்சித்ததாகவும் கருணாஸ் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கும் கருணாஸ், புத்தாண்டையொட்டி, இன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் வேலுமணி உடனிருந்தார். 

 அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்த நீங்கள், திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது ஏன்?

``என்னுடைய தொகுதிமக்களின் பிரச்னைகளுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தேன். தொகுதியில் கன்மாய்கள் தூர் வாரப்படாமல் உள்ளன. திருவாடனை தொகுதியில் குடிநீர் பிரச்னை மற்றும் கன்மாய்களைத் தூர் வாருவது தொடர்பாக கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளேன். அதைப் பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்." 

 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வரிடம் அரசியல் ரீதியாகப் பேசினீர்களா?

 ``என்னுடைய தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருகிறது. பருவமழை பொய்த்துவிட்டதால், தொகுதியில் குடிநீர்ப் பிரச்னை உள்ளது. இதனால், குடிநீர் பிரச்னைக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். தொடர்ந்து 6-ம் வகுப்பு பாடத்திலிருந்து நீக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும். மருதுபாண்டியர்களுக்கு சிவகங்கையில் சிலை வைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும். நான் சார்ந்துள்ள சமுதாயம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்ட உத்தரவை அமல்படுத்த வேண்டும் உட்பட  7 கோரிக்கைகளை வலியுறுத்தினேன்."

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது ஏன்? - விவரிக்கும் கருணாஸ் எம்.எல்.ஏ 

உங்களின் சந்திப்பு எவ்வளவு நேரம் நடந்தது?

 ``புத்தாண்டு பிறந்துள்ளதால் என்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி வலியுறுத்தினேன். நான் கொடுத்த கோரிக்கை மனுக்களை முதல்வர் படித்துப்பார்த்தார். அதை செய்துதருவதாக உறுதியளித்தார். அரை மணி நேரம் பேசினோம். ஆனால், அரசியல் எதுவும் பேசவில்லை." 

 திருவாரூர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள்? 

 ``தேர்தலில் யார் யார் போட்டி போடுகிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம். அதன்பிறகு என்னுடைய ஆதரவுகுறித்த முடிவை தெரிவிக்கிறேன்." 

 உங்கள் மீதான வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது?

 ``வழக்கை சட்டரீதியாக சந்தித்துவருகிறேன்."

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது ஏன்? - விவரிக்கும் கருணாஸ் எம்.எல்.ஏ 

சபாநாயகர் மீது நீங்கள் கொடுத்த தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன? 

 ``அன்றைக்கு என்மீது நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப நோட்டீஸ் அனுப்பினேன்.  ஆனால், அதுதொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டால், நான்மட்டும்தான் வாக்களிக்க வேண்டும். நான் ஓட்டு போட்டு என்ன ஆகப்போகிறது. மெஜாரிட்டி அவர்களிடம் உள்ளது. நான் கொடுத்த தனித் தீர்மானம் தொடர்பாக,  வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு நோட்டீஸை வாபஸ்பெற்றுவிட்டேன்."